ஆவணப் படங்கள் என்றாலே நமக்கு ஒவ்வாமையாகிவிடுகிறது. தமிழில் உருவான ஆவணப் படங்கள் என்றால் மேலும் சலிப்பாகி விடுகிறது. ஒரு திரைப்படத்தின் மீது காட்டும் எதிர்பார்ப்பையும் அதைக் காண விழையும் வேட்கையையும் ஒரு ஆவணப் படத்தின் மீது நாம் காட்டுவதில்லை. ஆனால், நமது வரலாற்றையும் வாழ்வையும் நமது கலாச்சார அடையாளங்களையும் எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் ஆவணமாக, நம் மூதாதையர்கள் கடந்து வந்த வாழ்வியல் பாதையைத் தெளிவுறக் காட்ட முயலும் மாற்றுத் திரைப்பட வடிவமாக இருக்கும் ஆவணப் படத்தின் மீது நமது கவனம் குவிய மறுக்கிறது.
கடும் ஆய்வுக்கும் தேடலுக்கும் பிறகு உருவாகும் ஒரு ஆவணப் படத்தின் பின்னால் இருக்கும் கடும் உழைப்பை நாம் மதிப்பதில்லை. ஒரு திரைப்படம் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தால்கூட அதை “என்ன படம் இது... டாக்குமெண்டரி மாதிரி நகருது” என்று கூறி அலுத்துக்கொள்கிறோம்.
ஆனால், ஆவணப் படங்கள் அப்படிப்பட்டவை அல்ல. ஆவணப் படம் பற்றிய கவனமும் அதைப் புரிந்துகொள்வதில் நமக்கிருக்கும் தடைகளையும் பற்றி இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது வெகு சொற்பம். நம்மிடம் எண்ணற்ற ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் திரையரங்குகளும் இருந்தும் நாம் அவற்றுக்கு உரிய இடத்தைக் கொடுக்க ஏன் தவறிவிட்டோம்? நிகழ்காலத் தமிழ்க் காட்சி ஊடகவியல் துறையில், திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவை அடைந்திருக்கும் செல்வாக்கை ஆவணப் படங்களும் பெற முடியாதா? இதைப் பற்றி இதுவரை நாம் சிந்திக்காமல் இருந்திருக்கலாம்; ஆனால் இனியும் காலம் கடத்துவது தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாக முடியும் என்று அபாய மணி ஒலிக்க, இதற்கான விவாதங்களை முன்னிறுத்தும், முதல் முயற்சியாக ஒருநாள் ஆய்வரங்கம் சென்னையில் நடைபெற இருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை, தி இந்து தமிழ் நாளிதழ், ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப் படத்தை உருவாக்கிய பேராசிரியர் பு.சாரோனின் ஒலிவியம் படைப்பகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வரங்கை நடத்துகின்றன. ஒருநாள் பேசிவிட்டுக் கலைந்துபோகிற ஆய்வரங்காக இது அமைந்துவிடக் கூடாது என்பதில் இவை கவனம் காட்டிவருகின்றன. வரும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஒருநாள் ஆய்வரங்குக்கு ‘ஆவணப் படங்களின் அவசரங்களும், அதற்கான அவசியங்களும்’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
விவாதத் தலைப்புகள்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் மெரினா வளாக அரங்கில் நடைபெற இருக்கும் இந்த ஆய்வரங்கில், பல்வேறு உலக நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள ஆவணப் படங்களுக்கான உத்திகளை ஆராய்தல் / ஆவணப் படங்களுக்கான மையக்கருக்களைக் கண்டடைதல் / உருவாக்கத்துக்கான களங்களை முன்னெடுக்கச் செய்தல் போன்றவை மையமான விவாதப் பொருளாகக் கொள்ளப்பட உள்ளன.
மேலும் காட்சி ஊடக வரலாற்றில் முக்கிய ஆக்கங்களுக்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கும் வரலாற்றுத் தரவுகளை முன்வைப்பதன் வழியே நிகழ்காலத்தில் வாழ்ந்துவரும் படைப்பாளி களின் தன்னார்வத்தை உறுதி செய்தல், ஆவணப் படங்கள் வியாபார உத்திகளுக்குள் சிதைவுறாமல், வணிகச் சந்தையில் தரத்தோடு நின்று பார்க்கப்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டடைதல், ஆவணப் படங்களை உருவாக்க முதலீட்டாளர் களை உருவாக்கும் களமும், வெளியீடு (விநியோகம்) செய்வதற்கான உத்திகளையும் விவாதித்துப் புதிய பரிந்துரைகளை உருவாக்குதல் போன்றவற்றைத் தீவிரமாக விவாதித்து தீர்வுகளைக் கண்டறிய முயல்வதுதான் இந்த ஆய்வரங்கத்தின் முக்கிய நோக்கம்.
மிக முக்கியமாக ஆவணப் பட இயக்குநரின் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கும் ஆலோசனைகளையும் தரவுகளைச் சேகரிக்கும் சூழலில் நிலவும் தடைகளையும் குறித்து விவாதித்து, சட்டம், உரிமைகள், படமாக்கச் சிறப்பு அனுமதி பெறுதல் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த ஆய்வரங்கில் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் இருந்து பல முக்கியப் படைப்பாளிகள் ஆவணப் பட இயக்குநர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
அவர்கள் யார், இதில் யாரெல்லாம் பங்கெடுக்கலாம் என்பது உள்ளிட்ட மேலும் விரிவான தகவல்கள் அடுத்த வாரம் வெளியாகும் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் வெளியாகும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago