கல்வித் துறையின் மீதும் ஆசிரியர் சமூகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த படம் ‘சாட்டை’. அந்தப் படத்தை இயக்கியவர் அன்பழகன். அகத்தியன், பிரபுசாலமன் ஆகியோரின் உதவியாளரான இவர், தற்போது ‘ரூபாய்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படத்தை தணிக்கைக் குழு பாராட்டியிருப்பதோடு ‘யு’ சான்றிதழும் அளித்திருக்கும் நிலையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
‘சாட்டை’ படத்துக்காக ஆசிரியர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு இருந்ததா?
அந்தப் படத்தின் திரைக்கதையை எழுதும்போதே பயந்து பயந்தே எழுதினேன். ஆசிரியர்களைப் பற்றி பேசப்போகிறோம், எங்கும் தவறு நேர்ந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இருந்துகொண்டேயிருந்தது. இதனால் படப்பிடிப்பின்போதும் உதறல் இருந்தது. ஆனால் படம் வெளியானபிறகு எனது பயம் அர்த்தமற்றது என்று உணரவைத்துவிட்டார்கள். நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொலைபேசி வழியே என்னிடம் பேசினார்கள். ஒருவர் கூட என்னைத் திட்டவில்லை.
“யதார்த்தம் என்னவோ அதை எடுத்திருக்கிறீர்கள். படத்தில் வரும் தயாளன் ஆசிரியர் போலத்தான் நானும். மாணவர்களை எனது பிள்ளைகளாகப் பார்ப்பவன். அவர்கள் கூறுவதைக் காதுகொடுத்து கேட்கிறவன். படத்தில் என்னைப் பார்ப்பதுபோலத்தான் இருந்தது” என்று பல ஆசிரியர்கள் என்னிடம் கூறினார்கள்.
இன்னும் பலர் “படத்தில் வருகிற சிங்கப்பெருமாள் போல வட்டிக்கு விடுகிறவர் எனது பள்ளியிலும் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்கள். ஒரு ஆசிரியர் என்னை நேரில் சந்தித்து கண்கலங்கி அழுதேவிட்டார்.
``உங்கள் படத்தை பார்க்கும் வரை மாணவர்களை எடுப்பார் கைப்பிள்ளைபோல நினைத்துக் கொண்டு அவர்கள் மீது சிடுசிடுவென்று விழுந்துகொண்டிருந்தேன். அவர்களைத் தண்டிப்பதில் ஒருவித இன்பம் கண்டுவந்தேன். இப்போது மாணவர்களின் மனதைப் புரிந்துகொண்டுவிட்டேன். மன ரீதியாக என்னை இந்தப் படம் குணப்படுத்திவிட்டது” என்று பேசி, என்னையும் கலங்கவைத்தார். அவரது பள்ளி நிகழ்ச்சிக்கும் என்னை அழைத்துச் சென்றார். அவர் மட்டுமல்ல; ‘சாட்டை’ படம் வெளியான பிறகு சுமார் 300 அரசு, தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மாணவர்கள் மத்தியில் பேச என்னை அழைத்திருந்தார்கள்.
அவதூறு இல்லாமல் சமூகத்தில் நிலவும் அவலங்களை உள்ளது உள்ளபடி துணிவுடன் சொல்லும்போது அதனோடு சம்பந்தப்பட்டவர்களை அது மனமாற்றம் வரை அழைத்துச் செல்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்துகொண்டேன். அதேபோல படம் வெளியாகி திரையரங்குகளில் இருந்தநேரத்தில் பல மாவட்டங்களில் பெற்றோர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர், ஜனநாயக வாலிபர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனப் பல சமூக அமைப்புகள், நோட்டீஸ் அடித்தும் கட் அவுட் வைத்தும் ‘சாட்டை’ படத்தைப் பிரபலப்படுத்தியதை மறக்கவே முடியாது.
ஒரு நடிகராக சமுத்திரக்கனியை மேலும் பிஸியாக்கிய படமாகவும் `சாட்டை’ அமைந்துவிட்டது அல்லவா?
உண்மைதான். சமுத்திரக்கனி நிஜவாழ்க்கையிலும் தயாளன் கதாபாத்திரம் போல வாழ்பவர்தான். அவரே என்னிடம் “ டேய் தம்பி… `சாட்டை’ படம்தாண்டா என்னை நடிகனா இந்த அளவுக்கு பிஸியாக்கியிருக்கு” என்று கூறினார். அதுவுமில்லாமல், தனது ‘அப்பா’ படத்தை ‘சாட்டை’ படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் அவர் எடுத்தார்.
உங்களது முதல் படத்தை எடுத்த பிரபுசாலமனே இரண்டாவது படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது ‘கயல்’ படத்தின் நட்சத்திரங்களையே இந்தப் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
`ரூபாய்’ படத்தின் கதையை எழுதி முடித்ததும் ‘கயல்’ படத்தின் ஜோடி இந்தக் கதையில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என என் குரு பிரபு சாலமனிடம் கூறினேன். கதையைக் கேட்ட அவர், “கதை மக்கள் வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. ‘சாட்டை’ படத்தின் மூலம் தரமான இயக்குநர் என்ற நல்ல பெயர் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதை இந்த இரண்டாவது படத்திலும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். அதேநேரம், இந்தப் படம் வியாபார ரீதியாகவும் வெற்றிப்படமாக இருந்தால்தான் உங்கள் சினிமா பயணம் சிறப்பாக அமையும். எனவே இரண்டையும் மனதில் வைத்து திரைக்கதை எழுதுங்கள்” என்றார்.
நல்ல கதைகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்று நினைக்கும் அவரது அறிவுரையை மனதில் வைத்துப் படத்தை முடித்திருக்கிறேன். `கயல்’ பட நாயகன் சந்திரன், நாயகி ஆனந்தி ஆகியோருடன் ஹரீஷ் உத்தமனும் சின்னிஜெயந்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ரவிசந்திரன் என்பவரை மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி யிருக்கிறேன்.
`ரூபாய்’ படத்தின் கதை என்ன?
பணத்தாசைதான் எல்லாத் தீமைகளுக்கும் வேர். தேனியில் லாரி ஓட்டுநராக இருக்கும் பரணி, பாபு இருவரும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும் சொத்து, சொந்தம் எல்லாமே அவர்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் ஒரு லாரி மட்டும்தான். எதிர்பாராமல் கிடைக்கும் சவாரிக்காக அந்த லாரியுடன் சென்னையிலிருக்கும் கோயம்பேடு மார்கெட்டுக்கு வருகிறார்கள். ஊர் திரும்பும்போது பணத்தாசையால் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள். அது என்ன பிரச்சினை? அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்குப் போனார்களா இல்லையா என்பதுதான் கதை.
பணம் நிம்மதி தராது என்று எந்த ஒரு ஏழையும் சொல்வதில்லை! நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்தப் பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை ! இப்படி எல்லோரது வாழ்க்கையிலும் இன்றியமையாத சக்தியாகிப் போன பணத்தைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான யதார்த்தப் பயணம்தான் இந்த ‘ரூபாய்’. இதில் நகைச்சுவை, காதல் கலந்து உருவாக்கி இருக்கிறோம்.
அன்பழகன்
உங்களது படக்குழு பற்றிக் கூறுங்கள்?
‘காட் பிக்சர்ஸ்’ பிரபுசாலமன் சாருடன் ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த ஜெ.கே. குழுமத்தின் தலைவர், டாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன், காஸ்மோ வில்லேஜ் சிவகுமார் இருவரும் இந்தப் படத்தை வாங்கி உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள். வி. இளையராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு இசையை வழங்கியிருக்கிறார் டி.இமான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago