மொழி கடந்த ரசனை 10: நான் மை இருட்டின் காதலன்

By எஸ்.எஸ்.வாசன்

‘கவால்’ என்ற அரேபியச் சொல்லுக்கு ‘பேசியது—கூறியது’ என்று பொருள். ‘கவ்வால்’ என்றால் (முகமது நபி, ஸல்லல்லாஹு) பேசியதை மற்றவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவது. அப்படி அந்த இறை வசனங்களை இசையோடு மொழிவதே கவ்வாலி என்று அழைக்கப்பட்டது. ஸுஃபி என்ற சன்மார்க்கத்தினர் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முகலாய இசை வடிவத்தில் தொடக்கத்தில் முழுக்க முழுக்க இறைப் பாடல்களே இடம் பெற்றிருந்தன. பஞ்சாபி, உருது, மொழி மற்றும் கலாச்சாரத் தாக்கம் இந்தித் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக விளங்கி வந்தன. இதன் பின்னணியில், இந்தித் திரைப்படப் பாடலாசிரியர்கள் காதல் பிரிவு, ஆற்றாமை உணர்வுகளை மக்கள் மிகவும் ரசிக்கும் கவ்வாலி இசை வடிவிற்கேற்ப எழுதிப் புகழ் பெற்றனர்.

கஜல் வடிவத்தின் மென்மையான மெட்டு, மெதுவான ஓட்டம் இவற்றுக்கு நேரெதிராக ஏழெட்டு பேர் வட்டமாக அமர்ந்து தபேலா, டோலக் ஹார்மோனியம் சகிதம் சற்று இரைச்சலுடன் பாடப்படும் திரைப்பட கவ்வாலியின் பாடுபொருள் நம்முடைய எசப்பாட்டு போன்று ஒரு கருத்தின் இரு பக்கங்களை மாறி மாறி இருவர் காட்டுவதாக அமைந்திருக்கும்.

இசை அமைப்பு, பாடுபவர் குரல், காட்சியமைப்பு ஆகியவற்றின் பொருட்டு ஏராளமான இந்தித் திரைப்பட கவ்வாலிகள் ரசிக்கப்பட்டாலும் ஒரு சில கவ்வாலிகள் மட்டுமே மிக ஆழமான பொருட்செறிவு மிக்கதாக விளங்குகின்றன.

‘ஷாதி’ (திருமணம்) என்ற இந்திப் படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ஒரு கவ்வாலி வெளிப்படுத்தும் உணர்வும் பொருளும் சட்டென எவரும் உள்வாங்கிக்கொள்ள இயலாத நுண்பொருள் மிக்கது என்றே கூற வேண்டும்.

“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்

விட்டுவிட்டுச் சென்றானடி, இன்று வேறுபட்டு நின்றானடி”

என்ற கண்ணதாசனின் வரிகளை மேலோட்டமாகப் படிக்கும்போது எட்டாத பொருள், ஒரு புதிய கோணத்தில் ஆழ்ந்து ஆராயும்போது பிடிபடும். தத்துவப் பாடல்களின் தன்னிகரற்ற கவிஞன் கண்ணதாசனின் பாடல்களுக்கு இணையான தத்துவ நுண்பொருளை இந்த கவ்வாலி தருகிறது.

கவ்வாலி பாடலுக்குரிய கவர்ச்சிகரமான குரல் வளம் பெற்ற மன்னா டேயும் முகமது ரஃபியும் பாடியுள்ள இப்பாடலின் தொகையறா:

‘ஜிஸ்கோ ஜல்னேக்கே பர்வா நா ஹோ வோ பர்வானா ஹோ, ஷம்மா கீ ஹுஸ்னேக்கே சுன்த்தா ஹை கே பர்வானா ஹை’. பாடலின் தொடக்கத்தில், ‘லோக் தோ பாத் கோ அஃப்சானா பனாத்தா ஹை, அச்சே அச்சே கோ திவானா பனாத்தாய் ஹை’ என்ற அழகான வரிகள் வருகின்றன.

இந்திப் படப் பாடல்களில் நாம் அடிக்கடி கேட்கும், ‘ஷம்மா’ ‘பர்வானா’ ஆகிய இரண்டு சொற்களைப் பற்றிய ஒரு விளக்கம் இப்பாடலின் ஆழ்பொருளைப் புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும். ஷம்மா என்றால் மெழுகுவர்த்தி. பர்வானா என்றால் விட்டில் பூச்சி. இந்த இரண்டு சொற்களும் காதல் என்ற மெழுகுவர்த்தியில் எரிந்து போகும் காதலனை / காதலியைக் குறிக்கும் விதம் இந்தித் திரைப் பாடல்களில் கையாளப்படுகிறது.

ராஜேந்திர கிஷனின் இப்பாடலின் பொருள் இது:

(தொகையறா)

எது எரிந்துபோவதைப் பற்றி

பொருட்படுத்தவில்லையோ

அதுவே விட்டில் பூச்சி

மெழுகுவர்த்தியின் அழகில்

மயங்கும் பைத்தியம்.

விளைவைப் பற்றி எச்சரிக்கை

இல்லாத பொய்மை.

(பாடல்)

உலகம் வெறும் பேச்சைப் பெரிய கவிதை ஆக்கிவிடுகிறது. நல்ல நல்ல மனிதர்களைப் பைத்தியமாக்கிவிடுகிறது.(மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்த) எழில் மேடை ஒரு நாள் மெழுகுவர்த்தியைக் கேட்டது: ‘உனக்கு அன்பான உள்ளத்தை இறைவன் தரவில்லையா, உன்னைக் கட்டி ஆலிங்கனம் செய்பவர்களையே நீ எரித்துவிடுகிறாய் விரும்புகிறவர்களின் சிரிப்பை போக்கிவிடுகிறாய்’

மெழுகுவர்த்தி தன் தலை மீது அடித்து சத்தியம் செய்வதுபோல ஜுவாலையால் செய்து சொல்லியது: ‘நான் ஒன்றும் விட்டில் பூச்சியை எரிக்கவில்லை. இந்த உலகம் வெறும் பேச்சைப் பெரிய கவிதை ஆக்குகிறது. விட்டில் பூச்சி என் மேல் உயிரை வைத்திருக்கிறது. பழக்க தோஷத்தால் காதலில் போராடுகிறது மகிழ்ச்சி ததும்பும் மன்றமோ, வெற்றிடமோ நான் எங்கெங்கு போகிறேனோ அங்கெல்லாம் இந்தப் பைத்தியம் வந்துவிடுகிறது. ஆயிரம் தடவை, ஆம் ஆயிரம் தடவை புரியவைத்துவிட்டேன். நான் நெருப்பு, என்னுடன் விளையாடாதே; காதல் விஷயத்தில் நான் ஒரு பாம்பு (என).’

விட்டில் பூச்சிக்குத் தெரிந்தது இது ஒன்றே ஒன்றுதான் மெழுகுவர்த்தியின் அழகு நெருப்பு அதை விரும்பும் தனது காதலும் ஒரு நெருப்பு.

(எழில் மேடை) விட்டில் பூச்சியிடம் கேட்டது: ‘வெகுளியாய் ஏன் இப்படி எரிந்து போகிறாய்? அழிவு தரும் பாதையில் ஏன் நடக்கிறாய்? மெழுகுவர்த்தி இதை உணர்த்தவில்லையா? அதன் தீச்சுவாலை உன் பார்வையில் படவில்லையா? வாழ்க்கை மீது உனக்கு ஏன் வெறுப்பு, எத்தகைய வெறுப்பு, ஏன் உனக்கு மெழுகுவர்த்தி மீது இப்படிப்பட்ட பெரும் காதல்?’

(விட்டில் பூச்சி சொல்லியது)

எனக்கு மெழுகுவர்த்தி மீது காதலா? ஒருபோதும் இல்லை. அப்படிப்பட்ட கேவலமான ஆசை எனக்கு எப்போதும் இல்லை. அதனுடைய அழகா? ஒரு கண்ணால்கூடப் பார்க்கத் தகுதியற்றது அது. இந்த மெழுகுவர்த்தி எரிவதைப் பார்த்தால் என் வயிறு எரிகிறது. என்னுடைய காதலியை என்னிடமிருந்து இது பிரிக்கிறது. என்னுடைய எதிரியான இந்த மெழுகுவர்த்தி இரவு முழுவதும் எரிந்து நான் காதலிக்கும் மை இருட்டின் எதிரியாக விளங்குகிறது.

மெழுகுவர்த்தி எனக்கு ஒரு அபாயம் இல்லை. நான் இரவின் காதலன். என் பேச்சை நம்புங்கள். நிரூபிக்க வேண்டுமா, சரி, மெழுகுவர்த்தி பகலில் எரியும்பொழுது அதன் பக்கத்தில்கூட நான் வருவதில்லை. அது எரிவதைப் பற்றி அலட்டிக்கொள்வதும் இல்லை.

நான் மை இருட்டின் காதலன். உலகம் வெறும் பேச்சைப் பெரும் கவிதை ஆக்குகிறது. நல்ல மனிதர்களைப் பைத்தியமாக்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்