திரைப் பார்வை: ஒரு சாமானியனின் சமர்!

By ஜெயகுமார் ஆர்

சில மாதங்களுக்கு முன், கேரள எதிர்க் கட்சித் தலைவர் வி.டி.சதீஸனுக்கும் கேரள சாலைப் போக்குவரத்து அமைச்சர் முகமது ரியாஸுக்கும் இடையில் சாலையில் உள்ள குழிகள் தொடர்பாக நடந்த வார்த்தைப் போர் செய்திகளில் நிறைந்திருந்தது. இந்தச் சூழலில் சாலைக் குழியை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் ‘னா தான் கேஸ் கொடு’ (Nna Thaan Case Kodu). இதற்கு எதிராக ஆளும் கட்சியினர் சிலர் புறக்கணிப்புப் போராட்டமும் நடத்தினர்.

வலியவர்கள், எளியவர்களை வதைக்கும்போது ‘அதே ஞான் நின்ன தள்ளி. ன்னா தான் போய் கேஸ் கொடு’ எனச் சொல்வது கேரளத்தில் பெரு வழக்கு. அந்தச் சொல்லையே தலைப்பாகக் கொண்டதன் வழி படத்தின் உட்பொருளை இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் தெளிவுபடுத்தியுள்ளார். பெயர் பெற்ற திருடனின் வாழ்க்கையை இதற்குச் சாரமாக எடுத்துக்கொண்டுள்ளார். எளியவருக்கு எதிராக அநீதி நடக்கிறது. அவனுக்குக் குற்றப் பின்னணியும் உண்டு. சிறைச்சாலை படியேறிய அனுபவம் உள்ளவன். இந்த முரணைத் திறம்படக் கையாண்டுள்ளார். மலையாளத்தின் முன்னணி காஸ்டிங் இயக்குநரான ராஜேஷ் மாதவனின் பங்கு இந்தப் படத்தில் கவனம் கொள்ளக்கூடியது. நீதிபதி, எதிர்த்தரப்பு, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், காவலர்கள் எனக் கதாபாத்திரங்கள் பலரையும் பொருத்தமாகத் தேர்வுசெய்துள்ளார்.

‘அனியத்திப் பிராவு’ மூலம் கேரளத்தின் அரவிந்த் சாமியாக இருந்த குஞ்சாக்கோ போபன், தனக்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாத திருடனின் வேடத்தில் நடித்துள்ளார். சைகை, பேச்சு எனப் பெரும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். தமிழ் நடிகை காயத்ரி, போபனின் காதலியாகத் தமிழ்ப் பெண்ணாகவே நடித்துள்ளார். கிறிஸ்துவப் பெருநாள் கச்சேரி பார்த்துத் திரும்பும் திருடன், எம்எல்ஏ வீட்டுக் கோட்டைச் சுவரைத் தாண்டிக் குதிக்கிறான். வளர்ப்பு நாய்கள் அவனைக் கடித்துவிடுகின்றன. குரைப்புச் சத்தத்தில் தெருவே கூடி நாய் கடித்த உடலில் பூரத் திருவிழா நடத்திவிடுகிறார்கள். இந்த வழக்கு நீதிமன்றம் செல்கிறது. காவல் நிலையத்தில் முடிய வாய்ப்புள்ள இந்த வழக்கை, காதலியின் முன் தனது களங்கமின்மையை நிரூபிப்பதற்காக நீதிமன்றப் படியேறுகிறான் நாயகன். சாலையில் உள்ள குழியால் சைக்கிள் தடுமாற, அதனால், லாரி திசை திரும்ப, ஆட்டோ நிலை தடுமாறி ஒதுங்க, அது தன் மீது மோதாமல் தப்பிக்க இப்படிச் செய்தேன் என்கிற அவனது வாதத்தில் முகாந்திரம் இல்லாமல் போகிறது. அப்போது திருடனின் கூற்றால் வழக்கில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் முதல் குற்றவாளி ஆகிறார். இந்த இடத்தில் படத்தின் சுவாரசியம் கூடுகிறது.

நீதிமன்ற வளாகத்தைக் காட்சிப்படுத்தியதில் ரதீஷ் பாலகிருஷ்ணன் மெச்சப்பட வேண்டியவர். காசர்கோடு பகுதியின் நிலக் காட்சிகளும் வட்டாரச் சொற்களும் இயல்புடன் படத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. நீதிபதி கதாபாத்திரம், படத்தின் முதுகெலும்பு. காசர்கோட்டைச் சேர்ந்த குஞ்சு கிருஷ்ணன் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் தனித்த இயல்புகள், அது எப்படி நீதிமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன என்பதை இயக்குநர் திருத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். நீதிமன்ற அறைக்குள் சடசடத்துக்கொண்டே இருக்கும் புறாக்களின் மீது பாதம் பருப்பு எறிவதும் தன்னைப் புகழ்வதை ரசிப்பதும் என அந்தக் கதாபாத்திரத்தைச் சுவைபட வடிவமைத்துள்ளார். படத்தில் பெரும்பாலானவர்களுக்கு இது முதல் பட அனுபவம். அதைப் படத்துக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் இயக்குநர்.

அமைச்சர் மீது வழக்கு தொடுக்க, முதல்வரிடம் வீடியோ காலில் பேசி போபன் எளிதாக அனுமதி வாங்கிவிடுவது இயல்பானதாக இல்லை. கவன ஈர்ப்புக்காக போபனின் காதலியாக ஒரு தமிழ்ப் பெண்ணை நடிக்கவைத்திருப்பதற்கான எந்த நியாயமும் படத்தில் இல்லை. அவரது கதாபாத்திர வடிவமைப்பு வெளிப்படுத்தப்பட்ட விதமும் பலவீனமாகவே உள்ளது. இதைத் தாண்டி ஒரு சாமனியன் அமைப்புக்கு எதிராக நடத்திய ஒற்றையாள் போராட்டமாக இப்படம், சுவாரசியமும் சமூகக் கவனமும் மிக்கதாகிவிடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்