நண்பன் போட்ட சோறு!- தளபதி 25 ஆண்டுகள்

By ந.வினோத் குமார்

வாழ்க்கையில் நல்லது நடக்கிறபோது நம்முடன் இருக்கிறாரோ இல்லையோ, நமக்குத் தீமை நேர்கிறபோது முதலில் ஓடி வருகிறவர்கள், நம் நண்பர்கள்தான். எழுத்தாளர் பாலகுமாரன் சொல்வது போல ‘நல்ல நட்பு என்பது வரம்', இல்லையா..?

நட்பு பற்றி நிறைய படங்கள் வந்திருந்தாலும் நட்பு இன்னும் முழுமையாகப் பேசப்படவில்லை என்பதுதான் உண்மை. அப்படிப் பேசிய படங்களும்கூட நண்பனின் காதலுக்கு உதவுவது என்கிற ரீதியில்தான் அமைந்திருக்கின்றன. ஆனால், நண்பன் தவறே செய்தாலும் அவனுடன் இறுதி வரை பயணிக்கிற சக நண்பனை, அவனின் வாழ்க்கையைச் சொன்ன படங்களை, நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். ‘தளபதி' அப்படியான ஒரு வாழ்க்கை!

1991-ம் ஆண்டு தீபாவளியையொட்டி வெளிவந்த‌ இந்தப் படத்துக்கு இந்த வருடம் 25 ஆண்டுகள். பிறந்த உடனேயே நிர்க்கதியாக விடப்பட்ட ஒருவன், தனக்குப் பெற்றோர் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையுடன் வளர்கிறான். அவன்தான் இந்தக் கதையின் நாயகன். அந்தத் தாழ்வு மனப்பான்மை காரணமாகவே தன் மீது அன்பு செலுத்தும் நண்பனுடன் (மம்மூட்டி) உடனே ஐக்கியமாகிவிட முடிகிறது. அதே தாழ்வு மனப்பான்மை காரணமாகவே தன் காதலியை (ஷோபனா) கைப்பிடிக்க முடியாத இயலாமையில் அவளை வேறொருவருக்கு விட்டுக்கொடுத்துவிடவும் முடிகிறது. அந்த இயல்பை, ரஜினி இந்தப் படத்தில் மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.

இதிகாசத்தின் நிழல்

இந்தப் படம் மகாபாரதத்தின் செஞ்சோற்றுக் கடன்' என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அறியாத இன்னொரு விஷயம், இந்தப் படத்தில் ரஜினிக்கும் அவரது தம்பியாக வருகிற அரவிந்த்சாமிக்கும் மட்டுமே மகாபாரதக் கதை மாந்தர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது. அரவிந்த்சாமிக்கு அர்ஜுன் என்று பெயர் வைக்கப்பட, ரஜினிக்கோ சூர்யா (மகாபாரதக் கதையின்படி கர்ணனின் தந்தை சூரியன் என்பதால்) என்று பெயர் சூட்டப்பட்டது. மகாபாரதத்தில் அர்ஜுன‌ன் எய்த அம்பால்தான் கர்ணன் இறக்கிறான். படத்திலும்கூட ரஜினிக்கும் அரவிந்த்சாமிக்கும்தான் இறுதி யுத்தம். இப்படி இதிகாசத்தின் நிழலோடு கதாபாத்திரங்கள் வார்க்கப்பட்டிருந்தாலும்

சூர்யா தேவராஜுடன் சேர்ந்த பிறகு நடக்கும் திருப்பங்கள், சூர்யாவுக்குத் தனது பிறப்பின் உண்மைகள் தெரிய வந்த பிறகு அவனுள் ஏற்படும் மாற்றங்கள்... இதுதான் மீதிக் கதை. நியாய தர்மம் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நட்பின் வலிமையை உணர்த்திய படம் என்ற அளவில் மட்டும் பார்த்தால் திரைக்கதையில் பெரிய பிரச்சினை இல்லை. தான் காதலித்த பெண் தன் தம்பிக்கு மனைவியாக வருவதைப் பார்க்கிற கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாத ஒன்று. ஆனால் அப்படியான சில விஷயங்கள்தான் திரைக்கதையை வலுவாக்குகின்றன.

ஒளிப்பதிவின் கவித்துவம்

அந்தத் திரைக்கதைக்குக் கூடுதல் வலுசேர்க்கிறது ஒளிப்பதிவு. தன் கையால் கொல்லப்பட்ட ரவுடியின் மனைவிக்குப் பிறந்த குழந்தையைத் தன் கைகளில் ஏந்துகிறபோது நாயகனுக்குள் படபடப்பு ஏற்படுவது போலான‌ காட்சி இந்தப் படத்தின் ஆகச் சிறந்த காட்சிகளில் ஒன்று. ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் ரஜினியும் பானுப்பிரியாவும் சந்தித்துக்கொள்ளும் காட்சியில், பானுப்பிரியாவின் இடத்திலிருந்து கேமரா காட்டும் கோணம் ரஜினி சிறைக்குள் இருப்பதுபோன்று காட்டப்படும். மிகச் சில நொடிகள்தான். அதில் தன் ஒளிப்பதிவு மூலம் நாயகனுக்குள் ஏற்படும் குற்றவுணர்வை நமக்குள்ளும் கடத்துகிறார் சந்தோஷ் சிவன். அதேபோன்று, வித்யா குறித்து ரஜினியிடம் ஜெய்சங்கர் கூற வரும்போது சூர்யாவை சூரியனுக்கு நேராக வைத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் காட்சி மிகவும் கவித்துவமானது.

நீடிக்கும் தாக்கம்

ஒரு படம் பொதுஜன ரசனையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறபோதுதான் அது வெற்றிப் படமாகவும், காலம் கடந்து நிற்கிற படமாகவும் மாறுகிறது. ‘தளபதி' அப்படியான தாக்கங்கள் பலவற்றை உண்டாக்கிய படம். உதாரணத்துக்கு, படம் வெளியாகிப் பல ஆண்டுகளுக்கு தமிழகத்தின் சலூன் கடை பெயர்ப் பலகைகளிலும் ஆட்டோக்களின் பின்பகுதியிலும் கொஞ்சம் சோக‌மாகத் திரும்பிப் பார்க்கிற ரஜினியின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த ஓவியங்கள் இந்தப் படத்தில் ஷோபானாவும் ரஜினியும் பிரிகிற காட்சியில் ஷோபனா சென்றவுடன் ரஜினி சோகமாகத் திரும்பிப் பார்க்கிற ஸ்டில்லை அடிப்படையாக வைத்து வரையப்பட்டவை என்ற ஒரு தகவல் உண்டு.

‘தளபதி' ரஜினி போன்ற ஹேர் ஸ்டைலுடன், முழுக்கைச் சட்டையை முழங்கை வரை மடக்கிவிட்டு, ‘இன்' செய்யாமல் சட்டையை வெளியே எடுத்துவிட்டுத் திரிந்த பல பைக் மெக்கானிக்குகள் அன்றைய நாட்களில் நிறைய.

அதேபோல இந்தப் படத்தின் வசனங்கள். “தேவராஜுக்கு எதுவும் ஆகாது. அவன் சாக மாட்டான்!” “டாக்டர் சொன்னாரா?” “தேவராஜே சொன்னான்!”, “சூர்யா, சார். உரசிப் பார்க்காதீங்க!”, “நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நண்பன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? சூர்யான்னா என்னன்னு தெரியுமா உனக்கு?” என்பது உள்ளிட்ட பல வசனங்களைப் பின் நாட்களில் ரசிகர்கள் தங்கள் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்பப் பயன்படுத்தினார்கள். இந்தப் படத்துக்கு மணி ரத்னம்தான் வசனம். ஆனால்,

இவ்வளவு ஒரு நல்ல வசனகர்த்தா பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களை அதிகம் நம்பியிருந்தது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை எல்லா கிரீடங்களையும் தானே சுமக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கலாம்.

நிலைநிறுத்திக் கொண்ட ரஜினி

இன்றும் கல்யாண வீடுகளில் ‘ராக்கம்மா கையத் தட்டு' பாடலும், பொங்கல் பண்டிகையின்போது ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள' பாடலும் ஒலிக்கக் காரணமாக இருந்த இசை ஞானிக்கும் வாலிக்கும் தமிழ் ரசிகர்கள் என்றும் கடன்பட்டவர்களாக இருப்பார்கள்!

‘பைரவி' படத்திலிருந்துதான் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்' நட்சத்திரத்துவம் தொடங்குகிறது. அங்கு ஆரம்பிக்கிற அவரின் பயணம் ‘தீ', ‘பில்லா' ஆகியவற்றில் வேகம் பிடித்து ‘பாட்ஷா'வில் உச்சத்தைத் தொடுகிறது. ஆனால், ‘தளபதி'யில் கொஞ்சம் ‘அண்டர்பிளே' செய்து ரஜினி நடித்திருப்பார். வித்தியாசமான ஸ்டைல், ‘பஞ்ச்' டயலாக்குகள், பறந்து பறந்து சண்டை போடுதல், கதாநாயகிகளைக் கேலி செய்தல் போன்ற எந்த விதமான ‘எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்'கும் இல்லாமல் ரஜினி தன்னை ஒரு நடிகனாக நிலைநிறுத்திக்கொண்ட படம் இது. அதற்குப் பிறகு அவருடைய நட்சத்திர வெளிச்சத்தில் ரஜினி என்ற சிறந்த நடிகர் காணாமல் போனார். ‘சூப்பர் ஸ்டார்' என்ற அடைமொழி இல்லாமல் ரஜினி நடிப்பதைப் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? என்ன செய்வது, சில சமயம் நட்சத்திரமாக இருப்பதன் வலியைப் பனித்துளிகள் உணர்வதில்லை.

‘ரஜினியை வைத்து மணி ரத்னமேகூட இப்படி ஒரு படத்தை மீண்டும் ஒருமுறை தர முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அற்புதங்கள் எல்லாம் ஒருமுறை மட்டுமே நிகழ்பவை.

'நண்பர்கள் இல்லாதவர்கள்தான் அனாதை' என்று சொல்லப்படுவதுண்டு. நண்பர்களின் வீட்டில் ஒருவேளை, ஒரு கைப்பிடி உணவாவது சாப்பிடாத மனிதர் நம்மில் யாராவது இருக்கிறார்களா, என்ன? அந்த செஞ்சோற்றுக் கடன் பட்டவர்களுக்கு இந்தத் ‘தளபதி’ நெருக்கமாக இருப்பான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்