ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா

By எஸ்.வி.வேணுகோபாலன்

‘என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே…’ என்றான் மகாகவி. ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ என்ற அந்தக் கொண்டாட்டக் கவிதையை பி.பி. ஸ்ரீனிவாஸ்-பி சுசீலா இருவரின் காதல் களிப்புக் குரல்களில் இசைப்பாடலாகக் கேட்கத் தொடங்கிய பின் எத்தனை எத்தனை கண்ணம்மா பாடல்களைத் திரை இசையில் ரசித்துக் கேட்டாயிற்று. ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’வை விடவா? தேர்ச்சியான சங்கீதக்காரர்கள் முதற்கொண்டு எத்தனை எத்தனை மழலைக் குரல்களிலும் வழிந்தோடிய ரசமான கீதம் அது!

கண்ணம்மா… என்று ஏக்கம் கெஞ்சும் குரலில் விளித்து ‘காதல் எனும் கவிதை சொல்லடி' (வண்ண வண்ணப் பூக்கள்) என எஸ். ஜானகியுடன் இணைந்து இளையராஜா வழங்கிய பாடல் நினைவில் அலைமோதுகிறது. இப்படி நம் அடிமனதில் தங்கிவிட்ட எத்தனையோ கண்ணம்மாக்களுடன் சேர்ந்துகொள்ளப் புதிதாக ஒரு ‘கண்ணம்மா’வைத் தந்திருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.

சமீபத்தில் ‘றெக்க’ திரைப்படத்தைப் பார்த்தேன். எதிர்பாராத இடத்தில் தொடங்கும் ஒரு ஃபிளாஷ் பேக் காட்சியில் திடுமென்று புறப்படும் இதமான மெல்லிசையில் சட்டென்று ஒரு புத்தம் புதிய, ஆனால் உள்ளத்தை மிக இயல்பாக நெருங்கும் குரல், ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை’ என்று எடுத்த பல்லவி நெஞ்செல்லாம் நனைத்து அன்பின் நீரூற்றை வழியவிட்டது. அடுத்தடுத்த வரிகளில் விரியும் உறவின் கொண்டாட்டம் மேலும் உருக்கமாகவும் இதமாகவும் அமைந்து, சரணங்கள் குறித்த எதிர்பார்ப்புகளையும் தூண்டியது.

‘செம்பருத்திப் பூவைப் போல ஸ்நேகமான வாய்மொழி, செல்லம் கொஞ்சக் கோடைகூட ஆகிடாதோ மார்கழி' என்று வித்தியாசமான கற்பனையில் நடைபோடத் தொடங்குகிறது முதல் சரணம். பின் சடாரென்று ஒரு நளினமான கோணத்தில் வேகமாகக் கைவீசி, ‘பால் நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே, வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே' என்ற வரிகள்... இரண்டாம் சரணத்தில், ‘பாரதி உன் சாயலைப் பாட்டாக மாற்றுவான், தேவதை நீதானென வாயாரப் போற்றுவான்...' என்ற அடிகளில் எடுக்கும் துள்ளாட்டம் மனதை வளைத்துப் போடுகிறது.

ஆனால், மொத்தப் பாடலின் இனிமை, உள்ளாக நின்று சொக்கவைத்து ரசனையில் சிக்குண்டு ரசிகனைக் கள்வெறி கொள்ள வைப்பது, கண்ணம்மா என்ற சொல்லில்! பாடலில் அது இடம் பெறும் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமாகக் கற்பனையோடு இழைத்து இழைத்து விம்ம வைப்பதுதான் பாடலைக் கொண்டாட வைக்கிறது.

கண்ணம்மா என்ற சொல், நினைவின் ஆழடுக்குகளில் உயிராக அமர்ந்திருப்பது. அன்றாட வாழ்க்கையில், மனத்துக்கு நெருக்கமான எந்தக் குழந்தையையும், செல்ல வாழ்க்கை இணையையும் அடையாளப்படுத்தி உள்ளம் நெகிழ்வது! கண்ணே என்ற அழைப்பை மேலும் காதலுறக் கசிய வைக்கும் கண்ணம்மா என்ற உருவாக்கம் புரியும் வேதிவினைகளால் பரவும் உணர்வுகள், சொற்களில் விவரிக்க முடியாதவை. சுட்டும் விழிச்சுடர்தனில் ஒளிர்ந்த கண்ணம்மா அது. பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு என்றெடுத்த தரிசனத்தில் உள்ளம் நிறைந்த கண்ணம்மா அது. ஊனமறு நல்லழகாகவும், ஊறுசுவையாகவும், நாத வடிவானவளாகவும், நல்ல உயிராகவும் - ஏன், உள்ளமுதமாகவும் நிறைந்து அலைக்கழிக்கும் கண்ணம்மா! காதலி மட்டுமல்ல, குழந்தையும் தெய்வமும்கூடக் கண்ணம்மாதான் பாரதிக்கு!

‘றெக்க’ திரைப்படத்தின் கண்ணம்மா, கள்ளம் கபடமற்ற ஒரு சிறுவனின் காதல் அன்புக்கும், வாலிபன் ஒருவனின் அன்புக் காதலுக்கும் இடையே திக்குமுக்காடும் ஓர் இளம்பெண்ணை முன்வைத்துப் புறப்படும் இசைப்பாடல்! வேறெந்தச் சொல்லை விடவும், கண்ணம்மா என்ற ஆதாரச் சொல்லில் மீண்டும் மீண்டும் தன்னைக் கொண்டு நிறுத்திக்கொள்ளும் இந்தப் பாடல், அதனால்தான் கண்ணம்மா என்ற இழையோட்டத்தில் நெகிழவைக்கிறது.

கவிஞர் யுகபாரதியின் எளிய பாடல் புனைவும், இமானின் வருடலான மெட்டும் நந்தினி ஸ்ரீகரின் குரலும் இந்தப் பாடலைத் தனியான தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன. ‘கற்பூர பொம்மை ஒன்று' போன்ற சில பாடல்களை இது நினைவூட்டுகிறது என்று ரசிகர்கள் சிலரால் நினைவுகூரப்பட்டாலும், இந்தப் பாடல் காட்சிப்படுத்தும் அனுபவம் முற்றிலும் வேறானது.

பாடல் ஒலித்து முடிந்த பின்னும் ‘கண்ணம்மா கண்ணம்மா’ என்ற அந்த விளி உள்ளச் சுவர் முழுக்க எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்