சினிமா எடுத்துப் பார் 84: விஜயகாந்தின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்!

By எஸ்.பி.முத்துராமன்

‘நல்லவன்’ படத்தில் என் பிறந்த நாளன்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் எனக்குக் கொடுத்த பட்டம் ‘மனிதரில் புனிதர்’. ஏன், இந்தப் பட்டத்தை எனக்கு கொடுத்தார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. நான் திரைப்படங்களை இயக்கும்போது என் குழுவினருக்கு சம்பளம் பேசுவேன். எனக்கான சம்பளத்தை பேச மாட்டேன். தயாரிப்பாளர் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன். அதில் ரஜினி படம் என் றால் ஒரு சம்பளம் என்றும், கமல் படம் என்றால் ஒரு சம்பளம் என்றும் ஒரு கணக்கு வைத்து என் சம்பளத்தை கொடுப்பார்கள்.

‘நல்லவன்’ பட வேலைகளில் இருந்த போது தாணு அவர்கள் ‘‘இதில் இந்தப் படத்துக்கான உங்கள் சம்பளத்தை வைத் திருக்கிறேன்!’’ என்று கூறி ஒரு தொகையை என்னிடம் கொடுத்தார். அதை பிரித்துப் பார்த்தால் நான் ரஜினி, கமல் படங்களுக்கு வாங் கும் தொகையைவிட இரண்டு, மூன்று பங்கு அதிகமாக இருந்தது. அவரிடம், ‘‘என்ன சார், இவ்வளவு தொகை இருக்கே?’’ என்று கேட்டேன். அதுக்கு அவர், ‘‘உங்க உழைப்புக்கு நான் கொடுக்கும் சம்பளம் சார்!’’ என்றார்.

“ரஜினி படம் என்றால் எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும்? கமல் படம் என்றால் எவ்வளவு வாங்க வேண்டும்? விஜயகாந்த் படம் என்றால் எவ்வளவு வாங்க வேண்டும் என்று சம்பளத்தில் நான் ஒரு கணக்குகள் வைத்திருக்கிறேன். எப்போதும், அதைவிட அதிகம் வாங்குவ தில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் தொகை அளவுக்கு அதிகமாக இருக் கிறது. இதில் விஜயகாந்த் படத்துக்கான சம்பளத்தை மட்டும் எடுத்துக்கொள் கிறேன்!’’ என்று கூறிவிட்டு மீதிப் பணத்தை அவரிடமே திரும்பக் கொடுத்து விட்டேன். அதற்கு அவர், ‘‘இப்படி ஒரு மனிதரா?’’ என்று பாராட்டினார். ‘நல்லவன்’ படப்பிடிப்பில் யூனிட்டோடு கொண்டாடிய என் பிறந்தநாளன்று ‘மனிதரில் புனிதர்’ என்ற பட்டத்தை கொடுத்து மகிழ்ந்தார். மகிழ வைத்தார்.

தாணு சார் என்னிடம், ‘‘முத்துராமன் சார் உங்களுக்காக என் ஆபீஸ் கதவும், என் மனசும் எப்போதும் திறந்தே இருக் கும். நம்ம கம்பெனிக்கு நீங்க எப்போ வேணும்னாலும் படம் பண்ணலாம்!’’ என்றார். இன்றளவும் அவரது படத்தின் பூஜை என்றால் சென்டிமெண்டாக வெற்றிக்கு அறிகுறி என்று நினைத்து நானும் அங்கே இருக்க வேண்டும் என விரும்புவார். சமீபத்தில்கூட ‘தெறி’, ‘கபாலி’ மாதிரியான மிகப்பெரிய வெற் றிப் படங்களை கொடுத்த தாணு அவர் களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருடைய சார்பிலும் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்து களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே விஜயகாந்த் பற்றி இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்ய வேண்டும். அவர் நடிக்க முயற்சி செய்துகொண் டிருந்த ஆரம்ப நாட்களில் தி.நகர் ரோகிணி லாட்ஜில் தங்கியிருப்பார். அந்த நாட் களில் இருந்து அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். இரு வரும் நல்ல நண்பர்கள். மதுரையில் தொடங்கிய நட்பு அது. படக் கம்பெனி தொடங்கி எந்த இடத்துக்கு போவ தென்றாலும் இருவரும் சேர்ந்துதான் போவார்கள். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பக்கபலமாக இருந்தவர், இப்ராகிம் ராவுத்தர். அதை என்றும் விஜயகாந்த் பதிவு செய்து வருகிறார். நல்ல நட்புக்கு இவர்கள் சான்று.

விஜயகாந்துடன் அ.செ.இப்ராகிம் ராவுத்தர்.



அந்தக் காலகட்டத்தில் ஏவி.எம் ஸ்டுடியோவின் எல்லா ஃப்ளோர்களிலும் ஷூட்டிங் நடக்கும். ஒரு ஃப்ளோரில் ரஜினி இருந்தால், அடுத்த ஃப்ளோரில் ஜெய்சங்கர் படம் நடக்கும். அதற்கு அடுத்த ஃப்ளோரில் அண்ணன் சிவாஜி அவர்களின் படப்பிடிப்பு நடந்துகொண்டி ருக்கும். அண்ணன் சிவாஜி அவர்கள் இருக்கிறார் என்றால் மற்ற இடங்களில் இருக்கும் நடிகர், நடிகைகள் அவரை பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வருவோம்.

அதேபோல அடுத்தடுத்த ஃப்ளோரில் நடக்கும் சக நடிகர்களின் படப்பிடிப் புக்கு சென்று பார்த்து ஒவ்வொருவரும் நலம் விசாரிப்பார்கள். ‘நல்லவன்’ படப் பிடிப்பில் விஜயகாந்த் இருந்தபோது அதற்கு அருகே ரஜினிகாந்த் நடித்த படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. ரஜினி அவர்கள், ‘‘என்ன முத்துராமன் சார், விஜயகாந்த் பட ஷூட்டிங்கா?’’ என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். விஜயகாந்தோடும், என்னோடும் மகிழ்ந்து பேசினார்.

நடிகர்களுக்குள் அன்று அப்படி ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவியது. அந்த நட்பு, பாசம், அன்பு இதையெல்லாம் வெளிப்படுத்த இன்று யாருக்கும் நேரமே இல்லை. அதற்கான மனமும் இல்லை. குடும்பங்களில் மட்டும் உறவுமுறை குறைந்துவிட்டது என்றில்லை. இது போன்ற தொழில்களில் இருப்பவர்களிட மும் உறவு, பாசம் குறைந்துவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ் அப் உறவாக மாறி இயந்திரத்தனமாக இருக்கிறது. மனித நேயமுள்ள உறவு வளர வேண்டும், நீடிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப் பில் விஜயகாந்த், ராதிகா நடித்த ‘நல்ல வன்’ படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. தாணு அவர்கள் வழக்கம்போல பிரம்மாண்டமான விழா எடுத்தார். அந்த விழாவுக்கு கலைஞர் அவர்கள் தலைமை வகித்து கேடயங்களை வழங்கினார். அது அனைவருக்கும் பெருமையாக இருந்தது.

‘நல்லவன்’ 100-வது நாள் விழாவில் எஸ்.தாணு, கருணாநிதி, எஸ்பி.முத்துராமன், விஜயகாந்த்.

ஒருமுறை விஜயகாந்த் அவர்கள், கலைஞர் அவர்களின் 50 ஆண்டுகால திரை உலக பயணத்தை பொன்விழாவாக கொண்டாட ஒரு விழாவை ஏற்பாடு செய்தார். அந்த விழாக் குழுவில் நானும் இருந்து பணியாற்றும் சூழலை விஜயகாந்த் எனக்கு ஏற்படுத்தி கொடுத்தார். தினமும் போய் அவருக்கு துணையாக விழா பணிகளை செய்வேன். ஒருநாள் விஜயகாந்த் உதவியாளர் சுப்பையா என் கார் சாவியை கேட்டார். ‘எதுக்கு?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘மற்ற கார்கள் நிறுத்துவதற்கு இடையூறா இருக்கு. கொஞ்சம் தள்ளி நிறுத்துறேன்!’’ என்று சொல்லி கார் சாவியை வாங்கிச் சென்றார்.

மாலையில் நான் காரை எடுத்தால் கார் டேங்கில் பெட்ரோல் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தது. சுப்பையாவிடம், ‘‘என்னப்பா இது!’’ என்று கேட்டேன். அதற்கு அவர், “விஜயகாந்த் சார்தான் நீங்க எதுவுமே வாங்கிக்க மாட்டேங் குறீங்கன்னு பெட்ரோல் டேங்கை ஃபுல் பண்ணிடுப்பான்னு சொன்னார்!’’ என்றார். அதில் விஜயகாந்த் அவர்களின் பெருந்தன்மை தெரிந்தது.

அந்த விழாவில் கலைஞர் அவர் களுக்கு கொடுக்க விஜயகாந்த் தங்கத் தில் ஒரு பெரிய பேனாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதை கலைஞர் அவர் களிடம் காட்டிவிட்டு வருவோமே என்று அவரை பார்க்கச் சென்றோம். அந்தப் பேனாவை பார்த்த கலைஞர், ‘‘என் பொன்விழாவுக்கு பொன் பேனா கொடுத்து பாராட்டுகிறீர்கள்’’ என்று மகிழ்ந்தார். நாங்கள் பெருமையோடு புறப்பட்டோம். அப்போது கலைஞர் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள்? அது என்ன கேள்வி?

- இன்னும் படம் பார்ப்போம். | படம் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்