திரைப் பார்வை: தாமரை | நதியின் பிழையன்று...

By செல்வ புவியரசன்

பூமிக்குக் களைகள் என்று எதுவுமில்லை என்பது கவிஞர் பாதசாரியின் பிரபலமான ‘மனநிழல்’ வாசகம். பூமியில் வாழும் தாவரங்களுக்கு மட்டுமல்ல, மனித இனத்துக்கும் அது மிகப் பொருத்தமானது.

அறிவு வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை அவர்களது வாழ்நாள் முழுவதும் பராமரித்துவரும் குடும்பத்தினர் தினந்தோறும் அனுபவித்துவரும் துயரங்கள் ஒருபுறமிக்க, சமூகம் அக்குடும்பங்களுக்குக் கொடுக்கும் அழுத்தங்களோ ஈவிரக்கம் இல்லாதவையாக இருக்கின்றன.

இத்தகைய ஒரு கதைச்சூழலை பின்னணியாகக் கொண்டு, கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன் ‘தாமரை’ என்கிற முழுநீளக் கதைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

என்.ஸ்ரீராம் எழுதிய ‘தாமரை நாச்சி’ என்கிற சிறுகதையைக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், இலக்கியமும் சினிமாவும் ஒன்றுக்கொன்று எவ்வாறு உடனிசைந்து பயணிக்க முடியும் என்பதற்கான சமீபத்திய முன்னுதாரணம்.

இந்திய மெய்யியல் மரபில் முக்கியமானதொரு உருவகமான தாமரை, முதன்மைக் கதாபாத்திரத்தின் பெயராகவும் அதுவே திரைப்படத்தின் தலைப்பாகவும் அமைந்திருப்பது இப்படைப்புக்குப் பல்வேறு பரிமாணத்தை வழங்கியிருக்கிறது.

ஆர்ப்பாட்டங்கள், அதிர்ச்சிகள் எதுவுமின்றி தெளிந்த நீரோடையாகப் பயணிக்கிறது படம். சிறுத்தை ஊருக்குள் புகுந்த தகவலோடு தொடங்கும் இப்படம், அந்தப் பதற்றத்தைப் படம் நெடுகிலும் ஆழ்ந்த அமைதியுடன் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

கூடவே, கதைப்போக்கில் இயல்பாகவே எழும் ஒரு புதிர் முடிச்சு இறுதிக்காட்சியில் அவிழும்வரை, நடந்தது என்னவென்ற பார்வையாளரின் கேள்வியும் பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. ஒட்டுமொத்தப் படத்தையும் சூழ்ந்திருக்கும் துயரம் பின்னணி இசையாகவும் வெளிப்படுகிறது.

ஒரே ஒரு காட்சியில் வந்துபோகும் ‘கூத்துப்பட்டறை’ கருணாபிரசாத், புடவைகளாலும் பணத்தாலும் முதிர்கன்னிகளை விலைபேசத் துணிவோரைத் தன் தேர்ந்த நடிப்புத் திறனால் தோலுரித்துக்காட்டிவிடுகிறார். கொல்லவும் துணியும் மனம் கொண்ட குடிகாரன் என்றபோதும் தன் மகளின் பரிதாப நிலைகண்டு கலங்கி, அவள் தலைகோதும் பாசமுள்ள தகப்பனாகத்தான் குடும்பத்தலைவன் இருக்கிறான்.

திருமண வயது வந்த மூன்று மகள்களைக் கரையேற்ற முடியாத அவலமும் உறவினர்களின் அவமதிப்புகளும் ஒன்றுகூடி அவனை அலைக்கழிக்கும் காட்சிகள் அவன் மீதும் ஒரு கணத்தில், கழிவிரக்கம் கொள்ள வைத்துவிடுகின்றன.

கணவனின் கழுத்தில் அரிவாள் வைக்கவும் முகத்தில் காறியுமிழவும் செய்யும் தாய், அவளுக்கு அறத்துணையாக நிற்கும் மாமியார் என்று தாய்மையின் பெருமையை உணர்த்தும் இரண்டு கதாபாத்திரங்கள் இப்படத்தின் பெரும்பலம். பார்வைகளாலேயே கதையின் முக்கியத் திருப்பங்கள் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகின்றன.

தொழில்முறை நடிகர்களாக இன்னும் பிரபலமடையாதவர்களைக் கொண்டு இந்த உணர்ச்சிமிகு தருணங்களை படமெடுக்கத் துணிந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ரவிசுப்பிரமணியன்.

அறிவுவளர்ச்சிக் குன்றியோரை முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப் படங்கள் அக்கதாபாத்திரங்களைக் கேளிக்கையாக்குவதையே வெற்றிகரமாகத் தொடர்ந்து செய்துவருகின்றன.

இயற்கையின் பிழைகளான அவர்களையும் அவர்களைச் சுற்றி இயங்கும் குடும்பத்தையும் சமூகத்தையும் பற்றிய ஓர் அணுக்கப் பார்வையை இத்திரைப்படம் அளிக்கிறது. இப்படத்துக்கான பொருட்செலவு லாபத்தை எதிர்நோக்கியது அல்ல என்பது அதன் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் தெளிவாகவே தெரிகிறது. தயாரிப்பாளர்களான காமாட்சி சுவாமிநாதன், ஆஸ்டின் சௌந்தர்-ராதா சௌந்தர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

அறிவுவளர்ச்சி குன்றியோரையும் அவர்களது குடும்பத்தையும் இந்தச் சமூகம் விலக்கிவைக்க முயல்கிறது. அதனால், அந்தக் குடும்பங்களின் ஒவ்வொரு உறுப்பினரும் கொடுக்கும் விலை என்பது கொடுமையானது.

ஈன்றெடுத்த குழந்தைகளுக்காகவும் உடன்பிறப்புகளுக்காகவும் கூடுதல் கவனம் செலுத்த கடமைப்பட்டவர்களைக் கொண்டாட வேண்டிய சமூகம், அவர்களை விலக்கிவைக்கத் துடிப்பது சரியா என்பதே இத்திரைப்படம் பொதுச் சமூகத்துக்கு உணர்த்த விழையும் செய்தி. கருக்கொண்ட எவ்வுயிரும் இவ்வுலகில் வாழ்ந்தாக வேண்டும் என்பதே இயற்கையின் கட்டளை. ‘தாமரை’களை வாழவிடுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்