புதியதொரு உறவு எப்போது, எப்படி, ஏன் ஏற்படுகிறது என்பதை வாழ்க்கை ரகசியமாகவே பாதுகாக்கிறது. ஏதோ ஒரு பயணத்தில், ஒரு நெருக்கடியில் நாம் எதிர்கொள்ளும் அறிமுகமற்ற மனிதர் நம் வாழ்வின் அதன் பின்னான பயணத்தில் ஓர் அந்நியோன்யமான இடத்தைப் பிடித்துவிடுவார். நெருக்கமானவர்களைத் தள்ளிவைத்தும் அந்நியரை அருகில் வைத்தும் கண்ணாமூச்சி காட்டும் வாழ்க்கையில் இத்தகைய எதிர்பாரா உறவு ஒரு சந்தோஷ விளையாட்டே. இதன் அடிப்படையில் உலகமெங்கும் பல திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த அம்சம் ஒரு திரைக்கதையின் பயணத்துக்கு விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் தரக்கூடியது.
ரயில் நிலையத்தில் ஒரு சிறுவன்
பிரேசில் நாட்டுத் திரைப்படம் ‘சென்ட்ரல் ஸ்டேஷன்’ (1998) இப்படியொரு விநோத உறவின் மேலே கட்டி எழுப்பப்பட்டதே. இதை இயக்கியவர் வால்டேர் சாலீஸ். சே குவாராவின் வாழ்க்கையைச் சம்பவங்களைக் காட்சிகளாக்கி இவர் இயக்கிய ‘தி மோட்டார் சைக்கிஸ் டைரீஸ்’ (2004) படம் மூலம் உலகமெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஜப்பானியப் படமான ‘டார்க் வாட்ட’ரை ஹாலிவுட்டில் அதே பெயரில் படமாக்கியவரும் இவரே. இதன் பாதிப்பில் தமிழில் உருவாக்கப்பட்ட படம் ‘ஈரம்’.
ஜோஸ்வா என்னும் சிறுவனுக்கும் தோரா என்னும் பெண்மணிக்குமிடையேயான உறவைச் சொல்லும் படம் ‘சென்ட்ரல் ஸ்டேஷன்’. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான கோல்டன் க்ளோப் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது. தமிழ்ப் படங்களான ‘அன்பே சிவம்’, ‘எங்கேயும் எப்போதும்’, அபர்ணா சென் இயக்கிய இந்திப் படமான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர்’ போன்ற படங்களைப் போலவே இதுவும் ஒரு பயணப் படம். ஜோஸ்வாவை அவன் தந்தையுடன் சேர்த்துவைப்பதற்காக தோரா அவனுடன் செல்லும் பயணத்தின் காட்சிகளே முழுப் படத்திலும் நிறைந்திருக்கும்.
ஆனால், இறுதியில் அவன் தந்தையைக் காண்பதேயில்லை. அவருடைய பெயர் ஜெஸுஸ்- இது போர்த்துக்கீசிய உச்சரிப்பு, ஆங்கிலத்தில் இந்தப் பெயர் ஜீஸஸ். அவர் மூலமாகத் தனக்குக் கிடைத்த சகோதரர்கள் மொய்செஸ், இசையஸ் ஆகியோரை மட்டுமே சந்திப்பான். அவர்களுடனேயே எஞ்சிய காலத்தைக் கழிப்பான். தந்தை வருவாரெனக் காத்திருப்பான்.
அசலும் நகலும்
கிட்டத்தட்ட இதே போன்ற கதைதான் ஜப்பானியப் படமான ‘கிகுஜிரோ’வுடையதும். ஆனால் அதில் ஒரு சிறுவன் தன் அம்மாவைத் தேடி பயணப்படுவான். அவனுக்கு ஒரு திருடன் உதவுவான். இறுதியில் தன் தாயுடன் இணைய முடியாமல் திரும்புவான். இதன் மோசமான நகலே ‘நந்தலாலா’ என்று மிஷ்கினைத் தவிர அனைவரும் நம்புகிறார்கள்.
பிரேசில் நாட்டின் கடற்கரை நகரமான ரியோ டி ஜெனிரோவின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிறருக்குக் கடிதம் எழுதிக்கொடுத்து, அதில் கிடைக்கும் வருவாயில் தன் ஜீவிதத்தை நடத்துகிறாள் தோரா. இந்த வேடத்தை ஏற்று நடித்திருப்பவர் ஃபெர்னாண்டோ மோஷனேக்ரு. தொடக்கப் பள்ளி ஆசிரியையான அவள் ஓய்வுபெற்ற பின்பு இந்தப் பணியில் ஈடுபடுகிறாள். அவள் தனியாக வாழ்பவள். சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்டவள். தன் 16 வயதில் வீட்டிலிருந்து வெளியேறியவள். அந்தப் பெரு நகரத்தில் அவள் தனித்துவிடப்பட்டவள். தனிமையின் அலுப்பும் வெறுமையும் உருவாக்கிய கடினத் தன்மை அவளது நடத்தையிலும் நடவடிக்கைகளிலும் சதா வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
ஒரு கடிதம் எழுதுவதற்காகத் தன் தாய் ஆன்னாவுடன் தோராவிடம் வருகிறான் ஜோஸ்வா. அவள் கடிதம் எழுதும் வேளையில் அந்த மேஜைமீது தன் பம்பரத்து ஆணியால் குத்திக்கொண்டே இருக்கிறான் ஜோஸ்வா. இந்தச் செயல் தோராவுக்கு எரிச்சலூட்டுகிறது. கடிதம் எழுதிவிட்டுத் திரும்பும்போது ஏற்படும் ஒரு விபத்தில் ஆன்னா இறந்துவிடுகிறாள். யாருமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான் ஜோஸ்வா.
ரயில் நிலையத்திலேயே படுத்துக் கிடக்கிறான். ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அந்த ரயில் நிலையத்தில் அவனை ஏன் என்று கேட்க ஆளில்லை. அவன் தன்னந்தனியனாக ரயில் நிலையத்தின் நடைமேடையின் முனையில் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சி இதைத் தெளிவாக்கும்.
பயணத்தில் உருவாகும் அன்பு
ஜோஸ்வாவைச் சிறுவர் நிலையத்துக்கு விற்றுவிடலாம் என்று நினைத்து அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள் தோரா, வீட்டில் தன் தாய் எழுதிய கடிதம் அனுப்பப்படாமல் இருப்பதை ஜோஸ்வா பார்த்துவிடுகிறான். அவனுக்கு தோரா நல்லவளல்ல என்னும் எண்ணம் ஏற்படுகிறது. அவனை மறுநாள் தோரா விற்றுவிடுகிறாள். அதில் கிடைக்கும் தொகைக்கு ஒரு டிவியும் வாங்கிவிடுகிறாள். இதையறிந்த அவளுடைய தோழி இரேனி தோராவைக் கடிந்துகொள்ள, ஜோஸ்வாவை மீட்டு அந்த நகரத்திலிருந்து இருவரும் உடனடியாக வெளியேறுகிறார்கள்.
ஒருவர்மீது ஒருவர் பெரிதாக அன்பு ஏதும் இன்றிப் பயணப்படுகிறார்கள். பயணம் தரும் அனுபவம் காரணமாக இருவருக்குள்ளும் அந்நியோன்யம் உருவாகிறது. இந்தப் பயணத்தில் தோரா, செஸார் என்னும் லாரி டிரைவரைச் சந்திக்கிறாள். அவர் மீது அவளுக்கு அன்பு பெருக்கெடுக்கிறது. ஆனால் கிறிஸ்தவ நற்செய்தியாளரான அவர் அந்த அன்பில் கட்டுண்டு கிடக்க விருப்பமற்று நழுவிவிடுகிறார். அவள் மீண்டும் தனிமையாடையை அணிந்துகொண்டு அழுகையைத் துடைத்துவிட்டுப் புறப்படுகிறாள்.
பிரிவின் துயர்
அற்புதங்களாலான வீடு என்னும் பொருளைக் கொண்ட புனிதத் தலத்தில் கையில் சல்லிக்காசு இன்றி அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். ஜோஸ்வாவின் தந்தையைக் கண்டுபிடிக்க முடியாத சோகத்தில் அவன் சாபம் பெற்றவன் எனத் தோரா அவனைத் திட்டிவிடுகிறாள். அவன் அந்தப் பெருங்கூட்டத்தில் எங்கோ சென்று மறைந்துவிடுகிறான். அவன் சென்ற பின்னர் தோரா பரிதவித்துப் போகிறாள்.
அவனைத் தேடி ஓடுகிறாள், அவன் பெயரைச் சொல்லி அழைத்துக் கதறுகிறாள். ஆனால் பிரார்த்தனையின் ஓலத்தில் அவளது கதறல் காற்றில் கற்பூரம்போல் கரைந்துவிடுகிறது. அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் மயங்கிச் சரிகிறாள். விழித்துப் பார்க்கும்போது அவள் ஜோஸ்வாவின் மடியில் கிடக்கிறாள். அங்கே அவள் கடிதம் எழுதி சம்பாதிக்க சாமர்த்தியமாக ஐடியா கொடுக்கிறான் ஜோஸ்வா. இதன் மூலம் சல்லிக் காசும் இல்லாத அவர்களுக்குப் பெரும் தொகை கிடைக்கிறது.
பொருட்களுக்கும் உணர்வு உண்டு
அந்தப் புனிதத் தலத்தில் உள்ள கம்பம் ஒன்றில் தங்களுக்குப் பிரியமானவர்களின் பொருள்களை விட்டுச் செல்வது பிரேசிலின் வழக்கம். ஆன்னாவின் மஞ்சள் பூப்போட்ட கைக்குட்டை ஒன்றை அங்கே விட்டுவிடச் சொல்வாள் தோரா. இந்தக் கைக்குட்டை ஆன்னா விபத்தில் மாட்டிக்கொண்ட அன்று தோராவின் மேசை அருகே தவறி விழுந்திருக்கும். அதே போல் ஆன்னா விபத்தில் இறந்த அன்று தன் பம்பரம் தவறி விழ, அதை எடுக்க அவன் செல்லும்போது அவனை எச்சரிக்கும் ஆன்னா பேருந்துவருவதைக் கவனிக்காமல் விபத்தில் சிக்கிக்கொள்வாள். ஜோஸ்வா தன் சகோதரர்களைச் சந்திக்கும்போது மொய்செஸ் அவனுக்குப் பம்பரம் ஒன்றைச் செய்து தருவான்.
இப்படி அஃறிணைப் பொருள்களும்கூட உயிர்கொண்டுவிடும் அதிசயத்தை ஒரு திரைக்கதையில் நிகழ்த்தும்போது, அது ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை அழகான கதை, அதற்கேற்ற திரைக்கதை, பொருத்தமான பின்னணியிசை, தேர்ந்த நடிப்பு என அனைத்து அம்சங்களும் ஒன்றுசேர்ந்திருக்கும். திரைக்கதையை அதன் தன்மை கெடாமல் திரைப்படமாக்கினால் அது ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும் என்பதற்கு இப்படம் உதாரணம்.
தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago