சினிமா என்பது சித்தரிக்கப்பட்ட வாழ்க்கை. வாழ்வின் போக்கை நம்மால் தீர்மானிக்க இயலாது. ஆனால் சினிமாவில் வாழ்க்கையை ஒரு திரைக்கதையாசிரியரால், இயக்குநரால் தீர்மானிக்க இயலும். எப்படியோ சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு இடைவிடாத பந்தம் இருப்பதை மறுக்க முடியாது. சினிமாத் துறையின் பெரும்பாலான மர்மங்கள் வெளியுலகுக்குக் காட்சியாகிவிட்ட இந்தக் காலத்தில்கூட சினிமா மீதான ஈர்ப்பு மானிடர்களுக்குக் குறைந்துவிடவில்லை. சினிமாவை ஆச்சரித்துடன்தான் அணுகுகிறார்கள்.
சினிமா அளவுக்கு சினிமாவின் படப்பிடிப்பு சுவாரசியமானதல்ல. அது ஒரு பணி. ஆனாலும் எங்கேயாவது ஷூட்டிங் நடைபெற்றால் என்ன, ஏது என்ற சுவாரசியத்துடன் எட்டிப் பார்த்துவிட்டுத் தான் போகிறோம். இத்தகைய சினிமா படப்பிடிப்பைக் கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழில் சினிமாவைக் களமாகக் கொண்டு வந்த படங்கள் எனத் ‘தாவணிக்கனவுகள்’, ‘நீங்களும் ஹீரோ தான்’, ‘அழகிய தீயே’, ‘வெள்ளித்திரை’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சமீபத்தில் வெளியான ‘உப்புக் கருவாடு’ போன்ற பல படங்களைச் சொல்ல முடியும்.
கல்லுக்குள் ஈரம்
இத்தனை படங்கள் வந்தபோதும் பாரதிராஜாவின் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வையில் வெளியான ‘கல்லுக்குள் ஈரம்’ இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி மனத்தின் மேல் தளத்தில் மிதக்கிறது. பாரதிராஜாவின் முத்திரைக் களமான காதல்தான் இதன் மையம். காதலில் தோல்வி கண்ட காதலன் இயக்குநராகிறான். தன் காதல் கதையையே படத்தின் கதையாக உருமாற்றுகிறான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு கிராமத்தில் நடைபெறுகிறது. கிராமத்தின் பண்பாட்டுச் சடங்கு, தெருக்கூத்து, கிராமத்து வாழ்க்கை போன்றவை இருந்தபோதும் ‘கல்லுக்குள் ஈரம்’ யதார்த்த வகைப் படமல்ல. இது முழுக்க முழுக்க சுவாரசியமான சம்பவங்களால் பொதியப்பட்ட சினிமா.
கரை சேராத காதல் பயணம்
காதல் உணர்வு படத்தின் பல காட்சிகளில் மேகங்களாகச் சூழ்ந்திருக்கும். காதலின் ஆற்றாமையைக் கட்டியெழுப்பும் சினிமாவுக்கேயான பின்னணியிசை, வசனங்கள் போன்ற அம்சங்கள் படத்தில் உண்டு. கிராமத்தின் சலவைத் தொழிலாளியின் மகள் சோலை அந்த இயக்குநர் மீது கொள்ளும் காதலும் கூத்துக் கலைஞரின் மகள் அந்தக் கதாநாயகன் மீது கொள்ளும் காதலும் படத்தின் இரு கரைகள். அவற்றின் இடையே படத்தின் நீரோட்டம். காதலுக்கு எப்படி எதிரிகள் தோன்றுகிறார்கள் என்பது பெரும் புதிர். இந்தப் படத்தில் எந்தக் காதலும் திருமணம் என்ற நிலைக்கு நகர்வதேயில்லை. வெவ்வேறு எதிரிகளால் காதல் பயணம் பாதியிலேயே முடிவுக்கு வருகிறது.
சோலை இயக்குநர் மீது கொண்ட பித்துக்குளித்தனமான காதல் உருவாகும் விதமும் பூத்துக் குலுங்கும் அழகு உதிரும் கணமும் கவிதைத் தருணங்கள். பித்துப் பிடித்த ஒருவனால் இந்தக் காதல் முறிக்கப்படும். அந்தப் பித்துப் பிடித்தவனுக்கு சோலை மீது பிரியம். காதல், காதல் சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினம் என்பதையும், உலகின் எல்லாக் காதல்களும் ஏதோவொரு பித்துக் கொண்டவர்களாலேயே முறிக்கப்படுகிறது என்பதையும் உணர்த்திப் படம் முழுமைபெறும்.
த்ரூ தி ஆலிவ் ட்ரீஸ்
இதே போன்று ஒரு கிராமத்துக்குப் படமெடுக்க வரும் படக்குழுவைப் பற்றிய படம் ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமியின் ‘த்ரூ தி ஆலிவ் ட்ரீஸ்’. இது முழுக்க முழுக்க ஒரு யதார்த்த வகைப் படம். எந்தக் காட்சியிலும் அதீத உணர்வைத் தூண்டும் வகையிலான பின்னணியிசையோ வசனங்களோ இடம்பெறுவதில்லை. ஓராண்டுக்கு முன்னர் நிகழ்ந்த பெரும் பூகம்பத்தால் அந்தக் கிராமத்தினருக்கு ஏற்பட்ட இழப்பையும் வலியையும் அதையும் மீறி அவர்களது வாழ்வுப் பயணம் தொடர்வதையும் படம் எடுத்துக் காட்டும். ஆனால் அது தொடர்பான காட்சிகளில் அந்த இழப்பும் வாதையும் யதார்த்தத்தின் விளிம்பை மீறாமல் தளும்பிக்கொண்டே இருக்கும். இந்தத் தளும்பல் அந்தப் பூகம்பத்தாலான பாதிப்பைச் சுருதி சுத்தமாக உணர்த்தும்.
இந்தப் படத்திலும் ஒரு காதல் உண்டு. ஹுசைன் எனும் கட்டிடத் தொழிலாளிக்கும் அவன் வேலை செய்த இடத்துக்கு அருகே வசித்த தஹிரா என்ற பெண்ணுக்கும் இடையேயான காதல் அது. தஹிரா பூகம்பத்தில் தன் பெற்றோரை இழந்திருப்பாள். பெற்றோரின் கல்லறையில் வைத்து அவள் பார்த்த ஆழமான பார்வையில் தன் மீதான காதலைக் கண்டுகொண்டதாக ஹுசைன் நம்புவான். ஆனால் அவனுக்குச் சொந்தமாக ஒரு வீடில்லை. அவன் படிப்பறிவற்றன். இந்தக் காரணங்களால் தஹிராவின் பாட்டி அவனை மறுப்பாள்.
இந்த ஜோடி ‘த்ரூ தி ஆலிவ் ட்ரீஸ்’ படத்தில் படமாக்கப்படும் படத்தில் பூகம்பத்துக்கு மறுநாள் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியாக நடித்திருக்கும். பூகம்பத்தில் தன் உறவினர் சுமார் 25 பேரை இழந்திருப்பான் ஹுசைன். ஆனால் படத்தில் அதை 65 என்று சித்தரிப்பார் இயக்குநர். அந்த எண்ணிக்கையின் மாற்றத்தை உள்வாங்கச் சிரமப்படுவான் ஹுசைன். அதே போல் ஒரு காட்சியில் ஹுசைன் மரியாதையுடன் விளிக்கப்பட வேண்டும் எனப் பல முறை இயக்குநர் வலியுறுத்தியும் தஹிரா வெறுமனே ஹுசைன் என்றே விளிப்பாள். வேறு வழியின்றி அப்படியே படமாக்குவார் இயக்குநர். சினிமாவுக்கும் வாழ்வுக்குமான இடைவெளியை உணர்த்துவது போல் இந்தக் காட்சிகளை இயக்குநர் அமைத்திருப்பார்.
தொடர் படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் சிறு இடைவெளிகளில் தன் காதலைத் தெரிவித்து தஹிராவின் இசைவைக் கோருவான் ஹுசைன். ஆனால் அவளிடம் அனுசரணையான எந்தச் சைகையும் வெளிப்படாது. படமாக்கம் முழுமை பெற்ற பிறகு வீட்டுக்கு நடந்து செல்லும் வழியில் தஹிராவை ஹுசைன் பின்தொடரும் காட்சியில் தென்படும் அழகும் பூடகமும் படத்தின் தரத்தை உயர்த்துபவை. ஹுசைன் தன் மீது அவளுக்குக் காதல் இருக்கிறதா இல்லையா, அவளுடைய பெற்றோரின் கல்லறையில் என்னைப் பார்த்த பார்வைக்குப் பொருளென்ன என்று கேட்டுக்கொண்டே செல்வான். அவர்களைத் தொடர்ந்து வந்த அந்தப் படத்தின் இயக்குநர் ஓரிடத்தில் நின்றுவிடுவார்.
திரைப்படத்தின் எல்லை
இக்காட்சியின் இறுதி ஷாட் மிக நீளமானது. தஹிரா நடந்து சென்று கொண்டேயிருப்பாள். ஹுசனின் கேள்விக்கு தஹிரா எந்தப் பதிலும் சொல்லாமல் நடந்துகொண்டேயிருப்பாள். அவர்கள் காற்றடிக்கும் ஆலிவ் மரங்களுக்கிடையே, வயல்வெளிக்கிடையே நடந்து செல்வது சிறிய உருவமாக மட்டுமே புலப்படும். ஆனால் தொலைதூரம் அவர்கள் செல்லும்வரை காட்சி அப்படியே தொடரும். மிக நீண்ட தொலைவு சென்ற பின்னர் அவன் மட்டும் திரும்ப ஓடி வருவான். தஹிரா காதலை ஏற்றாளா இல்லையா என்பதை வெளிப்படையாகச் சொல்லாமலே படம் நிறைவுபெறும். சினிமா என்பது ஒரு கட்டத்துக்கு மேல் யதார்த்த வாழ்வை ஊடுருவும் திறனற்றது என்பதை உணர்த்துவது போல் படத்தின் முடிவு அமைந்திருக்கும்.
இரண்டு படங்களிலும் ஷூட்டிங் நடைபெறும் நாட்களில் படத்தின் சித்தரிப்புச் சம்பவங்களும் கிராமத்தினரின் வாழ்வுச் சம்பவங்களும் மாறி மாறி இடம்பெறும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்த ஒரு நூலின் இரு சரடுகளாகக் காணப்படும். ‘கல்லுக்குள் ஈரம்’ நல்ல சினிமாவாக மிளிரும் அதே நேரத்தில் ‘த்ரூ தி ஆலிவ் ட்ரீஸ்’ கலைப் படைப்பாகக் காட்சி தரும். இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை விளங்கிக்கொள்ள இந்தப் படங்களைப் பார்ப்பது உதவும்.
தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago