ரஜினியை இயக்கத் தயாரா?: லிங்குசாமி நேர்காணல்

By கா.இசக்கி முத்து

ஒருபுறம் வணிக ரீதியில் அமைந்த படங்களை இயக்கிவந்தாலும், மறுபுறம் மாறுபட்ட படங்கள், பெரும் முதலீட்டு படங்கள் எனப் படங்களைத் தயாரித்தும், பல படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. 'அஞ்சான்' படத்தின் இறுதிக்கட்டப் பணியில் இருந்தவரிடம் உரையாடியபோது...

‘திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனத்தில் எவ்வளவு படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க..

‘மஞ்சப்பை' வெளியாகி மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு பெற்றிருக்கு. அடுத்து சூர்யா நடித்துவரும் ‘அஞ்சான்', கமல் சாரோட ‘உத்தம வில்லன்', சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்', பாலாஜி சக்திவேலின் ‘ரா.. ரா.. ரா.. ராஜசேகர்', பன்னீர் செல்வத்தின் ‘நான்தான் சிவா' ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கு. அடுத்து மீண்டும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' டீமை வைச்சு ‘ரஜினி முருகன்' ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகுது.

‘உத்தம வில்லன்' எந்தக் கட்டத்தில் இருக்கு?

80% முடிச்சிட்டோம். இன்னும் 15 நாட்கள்ல முழு படப்பிடிப்பும் முடிஞ்சிடும். படத்தைப் பற்றி இயக்குநர் சொன்னாதானே நல்லா யிருக்கும்.

ஒரு படத்தை வாங்கி வெளியிட அந்தப் படத்துக்கு உங்க அளவுகோல் என்ன?

படம் எனக்கும் என்னோட டீமுக்கும் பிடிச்சிருக்கணும். நான் ரொம்ப மரியாதை வெச்சிருக்கிற பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன் போன்ற இயக்குநர்கள், ரவி, சுரேஷ் எல்லாரும்தான் என்னோட டீம். ஒரு படத்தை வாங்குவதற்கு முன்னாடி, எல்லாரும் என் படத்தைப் பாத்துட்டு எப்படின்னு ஆலோசனைகள் சொல்லுவாங்க. ஒரு படத்தை வாங்கின பிறகு, ஏழு எட்டு முறையாவது திரும்பத் திரும்பப் பார்ப்போம். இன்னும் சிறப்பா வர்றதுக்கு என்ன மாற்றங்கள் பண்ண முடியும்னு யோசிப்போம். ‘மஞ்சப்பை' படத்துல எல்லாப் பாடல்களுக்குமே மறுபடியும் படப்பிடிப்பு நடந்தது. எங்களைப் பொறுத்தவரை படத்தோட வெற்றிதான் முக்கியம்.

ஒரு படத்தைத் தயாரிக்கிறதுக்கு என்ன வரைமுறைகள் வைச்சிருக்கீங்க?

முதல்ல இயக்குநர் சொல்ற கதைய முழுசா கேட்பேன். எனக்கு என்ன தோணுதோ அதெல்லாம் சொல்லுவேன். நான் சொல்றதைக் கேட்டுட்டு சில காட்சிகளை இயக்குநர் மாற்றலாம். இரண்டாவது முறை சந்திக்கும்போது, எனக்குப் பிடிச்ச மாதிரி கதை இருந்தா போதும். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிடுவோம்.

நீங்க இயக்குறது கமர்ஷியல் படங்கள். தயாரிக்கிறது எல்லாம் வேற பாதையில் இருக்கே?

மாறுபட்ட படங்கள் எனக்கு எப்பவுமே பிடிக்கும். ‘கோலி சோடா', ‘வழக்கு எண் 18/9' போன்ற படங்கள் ஒரு பெரிய ஹீரோ நடிக்கிற மாதிரியான மாஸ் படங்கள்தான். அந்தப் படங்கள்ல எல்லா அம்சங்களும் இருக்கு.

வெவ்வேறு விதமான படங்களோட கதைகளைக் கேட்கும்போது, இப்படியெல்லாம் புது விதமா யோசிக்கிறாங்களேன்னு தோணும். அது என்னை இன்னமும் என் கற்பனையைப் புத்துணர்ச்சியோட வெச்சிக்க உதவுது. எனக்கும் அடுத்த படத்துக்கான கதைக்குப் புதுசு புதுசா ஐடியா கிடைக்குது.

கமலை வைத்துப் படம் தயாரிக்கி றீங்க. ரஜினியை வைத்து எப்போ படம் இயக்கப் போறீங்க?

ரஜினி சாருக்கான கதை எனக்கு இன்னும் தோணவே இல்ல. நான் அவருக்காக என்ன கதை யோசிச்சாலும், அவரோட நட்சத்திர செல்வாக்கை மேல ஒருபடி தூக்கிப்பிடிக்கிறமாதிரி அமைய மாட்டேங்குது. அவரை வெச்சிப் படம் பண்ணா சரியான படமா எடுக்கணும் இல்லன்னா அவரோட ரசிகனாகவே இருந்திடணும். அவருக்கான கதை எல்லாம் எழுதி, எல்லாம் சரியா அமைஞ்சா கண்டிப்பா அவரைச் சந்தித்துப் பேசுவேன்.

ஊர்ல இருந்து கிளம்பி வரும்போது இயக்குநர் ஆகணும் நினைச்சு வந்தீங்களா, தயாரிப்பாளர் ஆகணும்னு வந்தீங்களா?

இயக்குநராகணும்னு நினைச்சு தான் வந்தேன். அந்தக் கனவு நிறைவேறின பிறகு தயாரிப்பாளர் ஆனது தானா நடந்ததுதான். எனக்கு படம் தயாரிக்கலாம்னு தோண்றதுக்கு முக்கிய காரணம் பாலாஜி சக்திவேல்தான். அவர்தான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க சொன்னார். இப்படி நண்பர்கள் வட்டாரத்துல பேசி விளையாட்டா ஆரம்பிச்சதுதான்.

இப்போ எல்லாம் படத் தயாரிப்பை விட விளம்பரத்திற்கு நிறைய செலவு பண்றாங்களே?

நிறைய படங்கள் வருது. ரசிகர்களுக்கு எந்த படம் பார்க்கலாம்னு ஒரு நினைப்பை உருவாக்க வேண்டியது இருக்கு. அதனால முதல்ல இரண்டு வாரத்திற்கு கண்டிப்பா விளம்பரம் தேவைப்படுது. ரசிகர்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் நம்ம படத்தோட சத்தம் கேட்டுட்டே இருக்கணும். அதுக்காக மூணு கோடி, நாலு கோடி மாதிரி நிறைய செலவு. பெரிய படங்களுக்கு அவ்வளவு தேவைப்படுது. ‘கோலி சோடா' மாதிரியான படங்களுக்கு பெரிய விளம்பரங்கள் தேவைப்படுறது உண்மைதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்