நட்பைப் பற்றிய கதைகளுக்குத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மரியாதை உண்டு. தாய்ப் பாசம், தந்தையின் பாசம், சகோதரப் பாசம், முக்கியமாகக் காதல் இவை எல்லாவற்றையும்விடத் தமிழ்த் திரையில் அதிகம் விவாதிக்கப்பட்டது நட்புதான். நான் நட்பின் முக்கியமான முகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று வார்த்தைகளை அளவாகக் கோத்துப் பேச ஆரம்பித்தார் ‘கப்பல்’ படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகக் களம் காண இருக்கும் கார்த்தி ஜி.கிருஷ். இவரது சிறப்பு, பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் முதன்மை உதவியாளர் என்பது..
ஷங்கர் தனது உதவியாளர்களை எப்படித் தேர்வு செய்கிறார்? அவர் வேலை வாங்கும் விதமே தனி என்பது உண்மைதானா?
நூறு சதவிகிதம் நேர்முகத் தேர்வு மூலமே தேர்வு செய்வார். திறமை இருந்தால் மட்டுமே அவரிடம் உதவியாளராகச் சேரமுடியும். நான் சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களில் பணிபுரிந்தேன். எந்திரன் அனுபவங்களைப் பற்றி மட்டும் இரண்டு புத்தகங்கள் எழுதலாம். அவருடன் இணைந்து எந்திரன் படத் திரைக்கதையின் முதல் பிரதியை எழுதும் வாய்ப்பைக் கொடுத்தார். உதவியாளர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கமாட்டார். அவரிடம் சேர்ந்த புதிதில் எல்லா வேலைகளையுமே கொடுப்பார். யார் எந்த வேலையைத் திறமையாகவும் நேர்த்தியாகவும் செய்கிறார்களோ பிறகு அவரிடம் அந்த வேலையை முழுவதுமாக நம்பி ஒப்படைத்து விடுவார். கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்கும் யாருக்கும் ஷங்கர் சார் ஒரு நூலகம். தன்னைப் புதிய தலைமுறைக்கு இணையாக அப்டேட் செய்துகொள்வதில் அவரை அடித்துக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு படத்துக்கும் அவரது திட்டமிடல் எந்தப் பாணியில் இருக்கும்? நான் கேட்பது அவர் பின்பற்றும் புரொடெக்ஷன் டிசைன்?
அது அலாதியானது. ஹாலிவுட் பாணியை நம்மூர் கண்ணம்மாபேட்டைக்கு இணைப்பதுதான் அவரது புரொடெக்ஷன் டிசைன். எந்திரனில் சிட்டி ரோபோ என்றதும் நீங்கள் ஹைடெக்காக யோசித்திருக்கலாம். ஆனால் சிட்டி ரோபோ குடிசைப்பகுதியில் போய்த் தீ விபத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதும், அதே பகுதியில் போய்ச் சண்டைபோடுவதும் என்று கடைக்கோடி ரசிகனையும் மனதில் வைத்துத் தனது திரைக்கதைகளை வடிவமைப்பவர். சொல்லவரும் கதையை எளிய மக்களோடு தொடர்புபடுத்த விரும்புவதுதான் அவரது வெற்றியின் ரகசியம் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவரது புரொடெக்ஷன் டிசைனில் மிக முக்கியமான ஆரம்ப வேலை திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டதும் மொத்தப் படத்துக்குமான காட்சியமைப்புகளை உருவாக்குவது. இதை நாங்கள் ’ப்ரிவைஸ்’ அதாவது ப்ரி விஷூவலைசேஷன் என்போம்.
ஹாலிவுட்டின் வின்ஸ்டேன் ரோபோட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் பணியாற்றிய வகையில் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அவர்களெல்லாம் பெரிய ஆட்கள் என்று. அங்கேயும் திறமையாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒரு டெம்பிளேட்டுக்குள் செயல்பட்டே எங்களுக்குப் பழகிவிட்டது. ஆனால் நாங்கள் நினைத்ததுபோல் இல்லை. உங்கள் காட்சிக் கற்பனைத்திறன் (விஷூவலைசேஷன்) அபாரமானது என்று வியந்துபோய்ச் சொன்னார்கள். இது ஷங்கர் சாருக்கும் தமிழர்களின் திரைக்கதை அறிவுக்கும் கிடைத்த பாராட்டு என்றே நான் நினைக்கிறேன்.
ஷங்கரிடம் கற்றுக்கொண்டதை உங்கள் படத்தில் எதிர்பார்க்கலாமா?
அவரது எந்தச் சாயலும் என்னிடம் இருக்காது. தனித்துவமாக இரு என்பதுதான் ஷங்கர் சாரின் பாலபாடம். அவரிடமிருந்து கற்றுக்கொண்ட வெகுஜன அழகியல் என்னையும் மீறி என் படத்தில் தென்படலாம். ஆனால் நான் அனைத்து வயதினருக்குமான ஓரு படத்தை உருவாக்க விரும்பியே நட்புக் கதையை எடுத்துக்கொண்டேன்.
உங்கள் கப்பல் படத்தைப் பற்றி சொல்லுங்கள்?
கப்பல் என்ற தலைப்பே நான் அங்கதமாக வைத்ததுதான். தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டால் நட்பு மூழ்குமா, மூழ்காதா என்பதுதான் ஒருவரிக் கதை. வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற இந்தக் காலகட்டத்தில் நட்பு மட்டுமே ஒரு பிள்ளையின் குணாதிசயத்தை, வளர்ந்த பின்னரும் தீர்மானிக்கிறது. தனக்கு மட்டுமே உரியவர் என்ற மனப்பான்மை எல்லா உறவிலும் தழைத்தாலும், நட்பில் அந்த உணர்வு மேலிடும்போது வரும் பிரச்சினையை விவாதிக்கும் படம்தான் இந்த ‘கப்பல்’. இதில் நான் மறந்தும் கருத்து சொல்ல வரவில்லை. ஆனால் படம் பார்க்க வருகிறவர்கள் இரண்டரை மணி நேரச் சந்தோஷத்துக்குப் பிறகு மனதில் ஒரு உண்மையை ஏந்திச் செல்ல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். அதைக் கப்பல் கண்டிப்பாகக் கடத்தும். கதையோடு இணைந்த நகைச்சுவைக்கு இதில் மரியாதை செய்திருக்கிறோம்.
உங்களது நட்சத்திரங்கள்?
வைபவ் என்னுடைய கதையின் நாயகன். பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார். ‘மங்காத்தா’ படத்தில் வைபவை பார்த்தபோதே இதை உறுதி செய்துவிட்டேன். அவரது மற்ற படங்களில் ஒரு நண்பனாக அவர் நடித்த விதம் என்னைக் கவர்ந்தது.
சோனம் ப்ரீத் பஜ்வா நாயகியாக அறிமுகம் ஆகிறார். அவர் இருக்கும் இடமெல்லாம் சந்தோஷம் பொங்கும். ‘கப்பல்’ சிரிப்புக்கும், சந்தோஷத்துக்கும் உத்திரவாதம் அளிக்கும் படமாக இருக்கும். விடிவி கணேஷ், கருணாகாரன், அர்ஜுன் நந்தகுமார் மற்றும் ரோபோ ஷங்கர் இந்த நகைச்சுவை பயணத்தில் கலக்கியிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago