சர்வதேச சினிமா: இயற்கையைப் புரிந்துகொள்ளாத உலகம்!

By பால்நிலவன்

அல்பிநொய் (ஐஸ்லாந்து)

நாளுக்குநாள் உலகம் மாறிவருகிறது என்பதே, மனிதர்கள் இடையிலான புரிதலை நோக்கி உலகம் நகர்வதின் தேவையை உணர்வதுதான் என்கிறது ‘அல் பி னோய்' எனும் ஐஸ்லாந்துத் திரைப்படம்.

ஐஸ்லாந்து நாட்டின் மேற்கு ஃஜோர்ட்ஸ் பகுதியின் ஒரு சிறிய நகரம். கடலையும் மலையையும் தொட்டுக்கொண்டு இருக்கும் ஊரில் இரவெல்லாம் பனிப் பொழிவு. உறை பனி வீட்டுவாசலை அடைத்துக்கொள்ள, காலையில் எழுந்து அதை அகற்றினால்தான் வீட்டைவிட்டு வெளியே வரமுடியும். நொய் எனும் டீன்ஏஜ் பையனுக்கு ஒவ்வொரு நாளும் இது பெரிய மெனக்கெடல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு நீளக் கம்புப் பிடிகொண்ட மண்வெட்டியை எடுத்துவந்து வாசலை அடைத்து நிற்கும் உறைபனியைச் சிறிதுசிறிதாக வெட்டத் தொடங்குவான். முழுவதும் அகற்றி வழி சமைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். உண்மையில் இதைக்கூட அவன் ஒரு கை பார்த்துவிடுவான். ஆனால் மோசமாக நடந்துகொள்ளும் மனிதர்களை?

பள்ளிக்கு வெளியே...

கணக்குப் பாடமென்றால் கசக்கும் நொய், பள்ளியில் கணிதத் தேர்வுகளில் அடுத்தடுத்து மட்டமான மதிப்பெண் பெறும் அவனது பிரச்சினை தலைமையாசிரியருக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. மாணவர்களுக்கான மனநல ஆலோசகரும் வரவழைக்கப்படுகிறார்.

அவரோ கேவலமான கேள்விகளை இவனிடம் கேட்கிறார். இவனும் பதிலுக்கு அதே கேள்விகளை அவரிடம் ஏடாகூடமாகத் திருப்பிக் கேட்கிறான். வந்தவர் ஒருகணம் தடுமாறிவிட்டுப் பின்னரும் கேள்விகளை தொடர்கிறார். வெவ்வேறு கேள்விகளில் ஒரேயொரு கேள்விக்குத்தான் ஒழுங்காகப் பதில் வருகிறது அவனிடமிருந்து.

பொது அறிவைப் பரிசோதிக்க கேட்கப்படும் கேள்விகளில் எந்தப் பிரச்சினையுமில்லை. பொதுஅறிவு மற்றவர்களைவிட அதிகம் பெற்றவன் அவன். அவனைப் போன்றவர்களை என்ன செய்ய வேண்டும் எப்படி வழிக்குக் கொண்டுவரவேண்டுமென்பதில் உள்ள சிக்கல்களை வித்தியாசமாகவே அணுக வேண்டும். பல நேரங்களில் பாடம் கற்பிக்கும் விதங்களில் சலிப்பையே காணும் அவன், அடிக்கடி செல்லுமிடம் கடற்கரை அருங்காட்சியகம். அதற்கடுத்து பெட்ரோல் பங்க் அருகிலுள்ள கேம் ஷோ கடையொன்றில் போய் உட்கார்ந்துவிடுகிறான். அதில் ஏதாவது பரிசு விழுந்தால் அதிலும் ஒரு அற்ப மகிழ்ச்சி.

உண்மையில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆர்வக் குறைபாடுள்ள மாணவர்களை வழிக்குக் கொண்டுவர கண்டுபிடிக்க வேண்டிய புதிய வழிகளை விவாதப்படுத்தவே இக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் நொய் என்பவனின் பள்ளி வாழ்க்கை தவிர, பல்வேறு உலகங்கள் காட்டப்படுகின்றன. அது மட்டுமின்றி அவன் பொருட்டு இயற்கையோடு மனிதனுக்கு இருக்க வேண்டியுள்ள கவனத்தையும் இப்படம் சர்-ரியலிசத் தன்மையோடு முன்வைக்கிறது.

நிலவறை எனும் தாய்மடி

தாயை இழந்த நொய்க்கு பாட்டிதான் எல்லாம். உள்ளூரில் டாக்ஸி ஓட்டும் நேரம் போக எந்நேரமும் மதுவின் மயக்கத்தில் இருக்கும் தந்தையின் அரவணைப்பு எதிர்பார்க்க முடியாதது. நண்பர்களிடமும் முரண்பாடுகள். எல்லோராலும் தனித்துவிடப்படும் நொய், சென்று தஞ்சமடையும் வேறு சில இடங்களும் உண்டு. அதில் ஒன்று உள்ளூர் புத்தகக் கடை. அடுத்தது பாட்டி வீட்டில் தரைக்குக் கீழுள்ள நிலவறை. பாட்டி அவனுக்குப் பரிசாகக் கொடுத்த பூதக்கண்ணாடிதான் அவனது பிறிதொரு உலகம். அதைக்கொண்டு ஊருக்கு வெளியேயுள்ள கடலையும் மலையும் ரசிப்பான்! நிகழப்போகும் மாற்றத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பான்.

மனிதநேசம் குறித்து ஏமாற்றங்களையே சந்திக்கும் ஒருவன் தஞ்சமடையும் இடம் புத்தகங்கள். அடுத்தது பூமிக்குக் கீழுள்ள நிலவறை.அதன் பின் இயற்கைக் காட்சிகள்.

அவனைப் புரிந்துகொள்ளாத உலகம் விரும்புவதோ லாடம் கட்டிக்கொண்ட அட்டவணை வாழ்க்கை. பாடப் புத்தகங்களைத் தாண்டாமல் இருந்தால் பெரிய பெரிய உயரத்துக்குப் போகலாம் என்கிற கணக்கு. அசாதாரண தேடல்கள் எதுவும் தேவையில்லை. இதிலிருந்து முற்றிலும் மாறுபடும் நொய்யின் பாத்திரத்தை வடித்த விதம் இயக்குநரின் சூழல் சார்ந்த வலிமையான நம்பிக்கையை உணர முடிகிறது.

இப்படத்தில் வலி மிகுந்த காட்சிகளும் நகைச்சுவையான காட்சிகளும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. ஒருநாள் பள்ளிக்கு விளையாட்டுத்தனமாய் டேப்ரிக்கார்டர் கொண்டுவந்து பையன்களிடம் காட்ட அதைக் கண்டு கணக்கு ஆசிரியர் வெகுண்டெழுந்து தலைமை ஆசிரியரிடம் போய் போட்டுக் கொடுப்பதோடு அவனைப் பள்ளியிலிருந்து தூக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.

தலைமையாசிரியர் தயங்குகிறார். “ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவன் இருக்கவேண்டும்'' என்றுகூறுவதால் ‘நொய்'க்கு பள்ளியிலிருந்து சீட்டு கிழிக்கப்பட வேண்டிய நிலை. மனமுடைந்துபோன நொய், என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளியைவிட்டு வெளியேறும்போது அதுவரை அவனைப்பற்றிய கவலையில்லாமல் இருந்த அவனது தந்தை, அவனிடம் பிரியமாக நடந்துகொள்ளும் விதம் அருமை. ஒரு மதுவிடுதிக்கு அவனை அழைத்துச்செல்ல அந்த விடுதியாளர் “விடலைப் பையனை இங்கே அழைச்சிட்டுவரியே அறிவில்லை உனக்கு?” என அடித்து உதைத்துத் தூக்கியெறிய, இருவரும் சாலையில் வந்து விழும் காட்சிகள் சிரிப்பையும் சோகத்தையும் ஒரேநேரத்தில் வரவழைக்கக்கூடியன.

வாழ்க்கைக் கணக்கு

அவனை ஒரு வேலையிலும் சேர்த்துவிடுகிறார் அவனது தந்தை. அது பனிமண்டிய நிலத்தில் பிணம் புதைக்க குழிவெட்டும் வேலை.

அந்த நேரம் பார்த்து பாட்டியோ அவனது எதிர்காலம் குறித்து அறிய ஜோதிடரைத் தேடிச் சென்று பார்த்துத் திரும்பியபின். அவனை ஜோதிடரை போய்ப் பார்க்கும்படி கூறுகிறாள். இவனும் உணவு இடைவேளையில் அவரைப் பார்க்கப் போக அவர் உனக்கு விரைவில் மரணம் நிச்சயம் என்று கூறுகிறார். என்னடா இது கொடுமை என அவன் அந்தப் பிணக்குழி தோண்டும் வேலையையும் விட்டுவிடுகிறான்.

ஏற்கனவே இவன் கணக்கு வைத்துள்ள வங்கிக்குத் திருடப்போகிறான். வங்கியில் நுழைந்ததும் துப்பாக்கியைக் காட்டி மிரட்ட, “அவர்களோ நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட முடியாது. போய் வேறு வேலை இருந்தால் பார்” என்று கூறி துப்பாக்கியை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிடுகின்றனர். தன் வீரதீரத்தை அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கும் நொய், வங்கிக்குத் திரும்பி வந்து தனது சேமிப்புக் கணக்கை இத்துடன் முடித்துக்கொள்வதாகக் கூறி தனது கணக்கில் இருந்த பணத்தை வாங்கிக்கொள்கிறான். அந்தப் பணத்தில் ஒரு கோட்சூட் வாங்கி அணிந்துகொண்டு ஒரு காரையும் திருடிக்கொண்டு தன் பழைய தோழியைத் தேடிச் செல்கிறான். அவளோ இவன் மீது நம்பிக்கையின்றி வர மறுக்கிறாள்.

“காரைத் திருடியதற்காக ஜெயிலுக்குப் போனவனை அப்பா மீட்டு வருகிறார் என்று தொடரும் காட்சிகளில் இயக்குநர் டாகூர் காரி முத்தாய்ப்பாக வைத்திருக்கும் காட்சிதான் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவது. ஊரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட, அவனுக்கு மரணம் சம்பவிப்பது நிச்சயம் என்று சொன்ன ஜோதிடர், பள்ளியை விட்டுத் தூக்கிய ஆசிரியர், பிணக்குழி தோண்டும் வேலையில் அவனைக் கடுமையாக வேலை வாங்கிய மதகுரு, பாட்டி, தந்தை, ஊர்மக்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளில் நசுங்கி இறந்துவிடுகிறார்கள். நிலவறைக்குள் மாட்டிக்கொண்ட இவன் மட்டும் சுரங்க வழியாகத் தப்பித்து கடற்கரை செல்கிறான். தனக்குப் பிடித்தமான பூதக்கண்ணாடி வழியே அங்கு அவனோடு உரையாடும் இயற்கையை ரசிக்கத் தொடங்குகிறான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்