சினிமா எடுத்துப் பார் 78: குளிரால் ரஜினி கால்மீது ஏறிக்கொண்ட அமலா!

By எஸ்.பி.முத்துராமன்

‘வேலைக்காரன்’ படத்துக்காக ஸ்ரீநகர் பனி மலையில் பட மாக்கிய ‘வா வா வா… கண்ணா வா’ பாடலுக்கு பரதநாட்டிய உடையில் அமலா வெறும் காலோடு நடனம் ஆடியதால், அவருடைய கால்கள் நடுங்கத் தொடங்கின. ஒரு ஷாட் எடுப் பதற்குள்ளேயே பனிக் கட்டிகளில் அவரது கால்கள் இழுத்தன. பெரிய கம்பளி விரிப்பை விரித்து அதன்மேல் அவரை நடனம் ஆட வைத்தோம். கொஞ்ச நேரத்துக்குள் அந்தக் கம்பளி யிலும் ஜில்லென குளிர் படர்ந்து பனியாகி விட்டது. சின்னச் சின்ன ஷாட்டுகளாக எடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

அப்படி படமாக்கும்போது அமலா பனியில் நின்று நடனம் ஆடிவிட்டு ஓடிவந்து ரஜினி அணிந்திருக்கும் ஷூ கால்களின் மீது ஏறி நின்று கொள்வார். அந்தப் பரதநாட்டிய காட்சி முழுக்க அமலா, ரஜினியின் ஷூ கால் உபயத்தோடு ஆடி முடித்தார். பாடல் படப்பிடிப்பு முடிந்ததும் அமலா, ‘‘இப்படியெல்லாம் ஆட வேண்டிய நிலை வரும் என்று தெரிந்திருந்தால் இந்தப் பரத நாட்டியத்தையே கற்றிருக்க மாட் டேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆனால், அந்த நடனத்தை படத்தில் பார்த்தபோது எங்கள் மனம் குளிர்ந்து போனது. உங்கள் மனமும்தான்.

மூன்று தலைமுறை நடிகர் வி.கே.ராம சாமி என் படங்களில் நடிக்கும்போது, ‘‘முத்துராமன் சார் படங்கள்னா நாள் கணக்குன்னு பேசி நடிக்கக் கூடாது. ஒரு படம்னு கான்ட்ராக்ட் போட்டுத்தான் நடிக்கணும். மூணு நாட்கள்ல என் காட்சி களை எல்லாம் ஷூட் பண்ணி முடிச்சுட்டு, உங்க வேலை முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிடுவார். அந்த அளவுக்கு சுறுசுறுப்பா எடுத்துடுறார்’’னு என்னைப் பாராட்டுவார். அந்தப் பாராட்டுக்குள்ள ஒரு சின்ன வருத்தமும் இருக்கும்.

அடுத்து, ஏவி.எம் தயாரிப்பில் நான் இயக்கிய படம் ‘பேர் சொல்லும் பிள்ளை’. அந்த பேர் சொல்லும் பிள்ளை யார்? ஏவி.எம் வீட்டுப் பிள்ளை கமல் தான்! அந்தப் படத்தில் அவருக்கு ஜோடி ராதிகா. முக்கியமான ரோல் களில் கே.ஆர்.விஜயா, ஜெய் கணேஷ், மனோரமா, ரவீந்தர், கவுண்டமணி நடித்தனர். சொந்தப் பிள்ளைகள் எல்லாம் சரியில்லை. வேலைக்கார கமல் நல்ல பிள்ளை. அவர் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கும் கதாபாத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு. அந்தப் பாசம்தான் கதையின் மையக் கரு.

படத்தின் கதையை வி.சி.குகநாதன் எழுதியிருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘படிக்காத மேதை’ படத்தின் சாயல் கதையில் இருந்தது. சரவணன் சார், ‘‘இந்தப் படத்துக்கு ‘படிக்காத மேதை’ படத்துக்கு வசனம் எழுதிய கே.எஸ். கோபாலகிருஷ்ண னையே வசனம் எழுத வைக்கலாமே?’’ என்று சொன்னார். விஷயத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் போய் சொன்னோம். மகிழ்வோடு ஒப்புக்கொண்டார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன் வசனத்தால் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். கே.ஆர்.விஜயாவை அறிமுகம் செய்து ‘கற்பகம்’ என்ற படத்தை இயக்கிய அவர், அந்தப் படத்தின் வெற்றியில் கிடைத்த பணத்தை வைத்து சென்னையில் ‘கற்பகம்’ ஸ்டுடியோவை நிறுவினார். அந்த அளவுக்கு திறமைசாலி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். தினமும் நான் வீட்டில் இருந்து கிளம்பி வரும்போது, ‘கற்பகம்’ ஸ்டுடியோ வழியேதான் வருவேன். இன்றைக்கு அந்த ‘கற்பகம்’ ஸ்டுடியோ அடுக்கு மாடிக் கட்டிடங் களாக உயர்ந்து நிற்கிறது. சினிமா உலகத்தின் நிலை இப்படித்தான் நிறைய மாறிவிட்டது!

எப்போதுமே கமலுக்கு டான்ஸ் என்றால் அவ்வளவு ஆர்வம். உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிப்புக்குள் வந்தவராச்சே, இருக்காதா! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்துக்கு புலியூர் சரோஜாதான் டான்ஸ் மாஸ்டர். ‘‘மாப்ளே... மாப்ளே’’ என்றுதான் கமலை செல்லமாக அவர் அழைப்பார். அதுக்கு கமல், ‘‘ நீங்க, ஒரு பெண்ணை பெத்து கொடுத்திருந்தா நான் கல்யாணம் செய்திருப்பேன்’’ என்று சொல்வார். இருவரும் உறவுமுறை கொண்டாடும் அளவுக்கு அப்படி ஒரு நட்பு!

‘அம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி’ என்ற பாடலில் கமல் வேலை பார்த்துக் கொண்டே நடனம் ஆடி, தத்ரூபமான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார். அந்தப் பாடலுக்கு நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களை வரவழைத்து கமலோடு சேர்ந்து ஆட வைத்தோம். இளமை துடிப்போடு ஆடிய இளைஞர்களில் பலர் இன் றைக்கு டான்ஸ் மாஸ்டர்கள். இந்தப் பெருமை புலியூர் சரோஜாவை சேரும்.

‘விளக்கேத்து விளக்கேத்து வெள் ளிக்கிழமை’ பாடலுக்கு கமலோடு சேர்ந்து ரம்யா கிருஷ்ணன் நடனம் ஆடுவார். மத்தாப்பு, பட்டாசு என்று வாணவேடிக்கைக்கு இடையே பாடல் படமாக்கப்பட்டது. இரவு 12 மணி இருக்கும். புரொடெக்‌ஷன்ல ஒரு பையன் ஓடி வந்து, ‘‘சார்... பட்டாசு, மத்தாப்பு எல்லாம் தீரப் போகுது?’’ன்னு சொன்னார். எனக்கு ஒரே அதிர்ச்சி. இந்த விஷயம் ஆர்டிஸ்ட்டுக்கு தெரியக் கூடாது. தெரிந்தால் ‘‘என்ன சார் இது?’’ என்று அலுத்துக்கொள்வார்கள்.

அந்த நடுராத்திரியில் எங்கே போய் பட்டாசு வாங்க முடியும்? தீபாவளி முடிந்த நேரம் அது. யூனிட் ஆட்களில் சிலரை அனுப்பி தேடச் சொன்னோம். ஒரு வழியாக வடபழனியில் மூடி இருந்த ஒரு கடையைக் கண்டுபிடித்தனர். அந்தக் கடைக்காரரை வீட்டுக்குப் போய் அழைத்து வந்து கார்த்திகை தீபத் திருநாளுக்காக விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகளை எல்லாம் வாங்கி வந்தனர். அன்றைக்கு பட்டாசு கிடைக்காமல் போயிருந்தால் அதற்கு மேல் படப்பிடிப்பே நடத்தியிருக்க முடியாது. இயக்குநருக்குத்தான் கெட்டப் பேர். என்னதான் தெளிவாக திட்டம்போட்டு ஷூட்டிங் நடத்தினாலும் இப்படி சில நெருக்கடிகள் வரத்தான் செய்யும். அதுதான் ‘சினிமா எடுத்துப் பார்’!

‘விளக்கேத்து… விளக்கேத்து’ பாட லுக்கு நடனமாடிய ரம்யா கிருஷ்ணன் தான் பின்னாளில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு சவால் விடும் ‘நீலாம்பரி’ ரோலில் நடித்தார். அதில் அவரது அபார நடிப்புத் திறமை வெளிப்பட்டது. பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது ‘படையப்பா. அவருக்கு நம் பாராட்டுகள்!

‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் ஆச்சி மனோரமா, ஆச்சியாகவே நடித்தார். அவரது மகள் ராதிகா. அவரும் செட்டிநாட்டு பாஷையில்தான் பேசுவார். ராதிகாவின் செட்டிநாட்டு பேச்சு அவ்வளவு தத்ரூப மாக இருந்தது. அதற்கு துணை ஆச்சி தான். படத்தில் ராதிகா கிராமத்துப் பெண். அவர் பேசுவது போலவே கமலும் கிராமத்து பாஷை பேசி ராதிகாவை கேலிசெய்வார். அவர் களுக்கு இடையே காதல் வளரும். கமலின் கலகல கலாட்டா ராதிகா வுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும்தான் உற்சாகமளித்தது. அப்படியென்ன கமல் உற்சாகமளித்தார் என்பதை வரும் வாரம் சொல்கிறேனே!

- இன்னும் படம் பார்ப்போம்... | படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்