மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்.
மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) - செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். அவரால் கடத்தி வரமுடிந்ததா, காதலர்களைச் சேர்த்துவைக்க அவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணி என்ன ஆகிய கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை வழியே பதில்தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரத்னசிவா. அந்த முயற்சியில் கால்வாசிக் கிணற்றை மட்டுமே அவரால் தாண்ட முடிந்திருக்கிறது.
இயக்குநர் சறுக்கிய முதல் இடம் கதைத் தேர்வு. காதலர்களைச் சேர்த்து வைக்கும் கதாநாயகன், வில்லனுக்கு நிச்சயிக்கப்பட்ட கதாநாயகியைக் கடத்தும் கதாநாயகன், வில்லனின் கைப்பாவையாகி மீளும் கதாநாயகன் என நாம் பார்த்துப் பார்த்துப் சலித்துப்போன பழைய பிம்பங்களையே பயன்படுத்திக்கொண்டதில் தவறில்லை. ஆனால் அவற்றைப் புதிய காட்சிகளோடும், மாறுபட்ட திரைக்கதையுடனும் பொருத்தியிருந்தால், இதுபோன்ற வழக்கமான நிகழ்வு களை எதிர்பாராத தடத்தில் பயணிக்க வைத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் அதற்கு மெனக்கெடவில்லை.
என்னதான் மசாலா படம் என்றாலும் சில காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக லட்சுமி மேனனைக் கடத்தும் காட்சிகளும், இறுதிக் காட்சியும் ரசிகர்களின் அறிவுத் திறனை அவமதிப்பவை.
ஒரு குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி கட்டி, வீச்சரிவாளைத் தூக்கிக்கொண்டு லாரி, வேன், சுமோக்களில் மந்தைகள்போல் கிளம்பி வருவார்கள் என்ற சித்தரிப்பு தமிழ் சினிமாவில் இருந்து எப்போது ஒழியுமோ?
விஜய் சேதுபதியை வித்தியாச மாகக் காட்டும் முயற்சி எடுபடுகிறது. அதீதமான சண்டைக் காட்சிகளும், சண்டையின்போது அவர் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களும் திரையரங்கில் ஆரவாரத்தைக் கிளப்புகின்றன.
முதல் பாதியின் இறுதிவரை ஹீரோ, வில்லன்களின் பராக்கிரம புராணம் பாடி நம்மைத் தூங்க வைத்துவிடுகிறார் இயக்குநர். செல்வம் – மாலா அக்கா காதலும், சிவா – மாலா அக்கா இடையிலான அன்பும் ஆறுதலான அம்சங்கள்.
கதையம்சமும் வலுவான பாத்திர வார்ப்பும் உள்ள படங்களிலேயே அதிகம் நடிக்கும் விஜய் சேதுபதி இதில் ‘நானும் ஆக்ஷன் ஹீரோதான்’ என்று அதிரடி காட்டுகிறார். பலவீனமான திரைக்கதை, புளித்துப்போன பாத்திரம் ஆகியவற்றையும் மீறித் தன் அடையாளத்தைப் பதிக்கிறார்.
கவிதை வாசிக்கிறேன் என்று மேடையேறும் கதாநாயகி பாட்டுப் பாடி அசத்தும் அற்புதத்தில் (?) தொடங்கி, வெகுளித்தனமாக விஜய் சேதுபதியுடன் கிளம்பி வருவது வரை லட்சுமி மேனன் கதாபாத்திரம் கருணாகரனைவிட நன்றாகவே நகைச்சுவை செய்கிறது.
வழக்கமாக முரட்டுக் கதா பாத்திரங்களில் வரும் கிஷோர் இதில் மென்மையான கதாபாத்திரம் வழியாகக் கவர்கிறார். அவரது காதலியாக நடித்திருப்பவரும் இயல்பாக வந்து நம்மை ஈர்த்துவிடுகிறார்.
டி.இமான் பின்னணி இசையில் இரைச்சலை வாரி இறைத்திருக்கிறார். ‘விர்று விர்று’ பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. இந்தப் படத்திலும் இளையராஜாவின் பழைய மெட்டுக்களை மாற்றித் திரும்பத் திரும்ப ஒலிக்கவிடுகிறார்.
மசாலா சினிமா என்று முடிவு செய்துவிட்டு, தர்க்க நியாயம் எதையும் பார்க்காமல் இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர். மசாலா படம் என்றால் காட்சியை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், கதாபாத்திரங்களை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்று கருதிவிட்டதுதான் ஏமாற்றமளிக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago