சினிமா எடுத்துப் பார் 79: எவன்தான் மனிதன்?

By எஸ்.பி.முத்துராமன்

’பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் பணிபுரிந்தபோது, கமல் அப்படி என்ன எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார்? என்ற கேள்வியோடு சென்ற வாரம் முடித்திருந்தேன். கமல், ஏவி.எம்.சரவணன் சார், குகன் சார் மூவரும் சேர்ந்து படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை படத்தில் பணிபுரிந்த ‘எங்கள் குழுவுக்கு’ கொடுப்பதாக முடிவு செய்தார்கள். அந்தத் தொகை படத்தில் பணிபுரிந்த எங்கள் குழுவுக்குக் கிடைத்த போனஸ் தொகையாக எண்ணி மகிழ்ந்தோம். கமலுக்கும், சரவணன் சாருக்கும், குகன் சாருக்கும் எங்கள் உளம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

அடுத்து நான் இயக்கிய படம், ஏவி.எம் நிறுவனம் தயாரித்த ‘மனிதன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பொருத்தமான தலைப்பு. சாதாரண நிலையில் இருந்து வளர்ந்து இன்றைக்கு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு உயரத்தில் இருக்கும்போதும் எந்த பந்தாவும் இல்லாமல் ஒருவர் இருக்க முடியுமா? முடியும். அது ரஜினியிடம் இருக்கிறது. அதற்கு மனப்பக்குவம் வேண்டும்.

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் அவரை எப்படி பார்த்தேனோ, அதேமாதிரிதான் இன்றைக்கும் பழகி வருகிறார். என்னோடு மட்டுமல்ல, எங்கள் படக் குழுவினர் ஒவ்வொருவரோடும் அப்படி ஒரு அன்போடு பழகுகிறார். அப்போதெல்லாம் படப்பிடிப்பில் இருக்கும்போது ஏவி.எம் ‘லைட் மேன்’ வீரப்பனைப் பார்த்ததும் அவரது தோள்களில் கை போட்டுக்கொண்டு நகைச்சுவையாக பேசு வார். அதேமாதிரி ‘மேக்கப் மேன்’ முத்தப்பா படத்தில் நடித்தால் ராசி என்று சொல்லி, அவருக்கு ஒரு ரோல் வாங்கிக் கொடுத்து விடுவார். என்றைக்கும், மாறாத அதே குணமும், அன்பும்தான் ரஜினியின் மனிதநேயம்.

ஏழை, பணக்காரர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் காட்டும் படம்தான், ‘மனிதன்’. ஏழைகள் எப்போதும் பணக்காரர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? என்பதை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பு. அந்த அமைப்புக்கு தலைவராக ரஜினி நடித்தார். பணக்காரர்கள் தரப்பில் வினு சக்ரவர்த்தி, ரகுவரன், சோ ஆகியோர் நடித்தனர். எங்களது பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இந்தப்படத்தில் இசையமைப்பாளர் சந்திரபோஸ் இணைந்தார். இனிமையாக இசையமைத்தார். கவிப்பேரரசு வைரமுத்து கருத்தோடு பாடல்கள் எழுதினார்.

ரஜினி நடித்த படங்களான ‘முரட்டுக்காளை’, ‘போக்கிரி ராஜா’, ‘பாயும்புலி’ உள்ளிட்ட படங்களின் பெயர்களை வைத்து ‘காளை காளை முரட்டுக்காளை’ என்ற பாடலை வைரமுத்து உருவாக்கினார். அந்தப்பாடலின் வரிகளைக் கேட்டுவிட்டு ரஜினி, ‘முத்துராமன் சார், என்ன இது? இந்தப்பாட்டு என்னை நானே பெரிதாக ஃபோகஸ் பண்ணிக்கிற மாதிரி இருக்கே! இது வேண்டாம்னு தோணுது!’ என்றார். நான், ‘அப்படியெல்லாம் இல்லை ரஜினி. பாட்டு இயல்பா இருக்கு. அதுவும் கதையோட சூழலுக்கு மிகவும் பொருத்தமா இருக்கு. கவிப்பேரரசர் படங்க ளின் பெயர்களை அழகாக கோர்த் திருக்கிறார். நிச்சயம் உங்களோட ரசிகர்கள் கொண்டாடுவார்கள்!’ என்று ரஜினியை சமாதானப்படுத்தி அந்தப் பாட்டை எடுத்தோம்.

படம் ரிலீஸானதும் அந்தப் பாட்டைப் பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி, விசில் அடித்து ‘ஒன்ஸ்மோர்.. ஒன்ஸ்மோர்’ என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால், தியேட்டரில் திரும்பவும் அந்தப்பாடலைப் போட்டார்கள். இப்படி பல ஊர்களிலும் நடந்தது.

ஒருநாள், ஏவி.எம் ஸ்டுடியோவில் ‘மனிதன்’ படப்பிடிப்பு முடிந்ததும், ரஜினிகாந்த் அங்கேயே இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. என் அறைக்கு வந்தவர், ‘முத்துராமன் சார், அடுத்து ஷூட்டிங் இங்கேயே இருக்கு. வீட்டுக்குப் போய் குளிச்சுட்டு வந்துடுறேன்!’’ என்றவர், என் அறையில் இருந்த பாத்ரூமை பார்த்ததும், ‘நான், இங்கேயே குளிச்சிடுறேன்!’ என்று கூறி, உதவியாளரை அழைத்து ஒரு கைலி, துண்டு எடுத்து வரச்சொல்லி குளித்து ரெடியாகி படப்பிடிப்புக்குக் கிளம்பினார்.

அப்போது ‘மனிதன்.. மனிதன் எவன்தான் மனிதன்’ என்ற பாடல் பக்கத்து அறையில் கேட்டது. அதை கேட்ட ரஜினிகாந்த், ‘இந்தப் பாட்டு எந்த இடத்துல இடம்பெறுது?’’ என்று கேட்டார். அதற்கு நான், ‘படத்துக்குள்ள அதுக்கு சரியான இடம் அமையலை. எங்கே வைக்கிற துன்னு யோசிச்சுக்கிட்டிருக்கோம்!’’ என்று, சொன்னேன். உடனே ரஜினி, ‘சாங் ரொம்ப நல்லா வந்திருக்கு. கண்டிப்பா படத்துல வச்சே ஆகணும்!’’ என்றார். எல்லோரும் கலந்துபேசி டைட்டில் சாங்காக இந்தப் பாட்டை வைக்க முடிவு செய்தோம். ரஜினியை வைத்து, பலவிதமான ஸ்டைல், ஆக்‌ஷன் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் எடுத்து சேர்த்தோம். அதன்மீது டைட்டில்களை போட்டோம். பாட்டோட கருத்தும், ஓபனிங்கில் சூப்பர் ஸ்டாரோட ஸ்டைல், ஆக்‌ஷன்ஸும் படத் துக்கே மிகப் பெரிய ஓபனிங்கை கொடுத்தது.

‘மனிதன்’ படத்தில் கார் சேஸிங்கோடு ஒரு சண்டைக் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். அதற்கு கார்களை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு உடைக்க வேண்டும். குகன் சார், பழைய கார்களை எல்லாம் ஒன்றுசேர்த்து ஆண்டுக்கொருமுறை நடக்கும் கண்காட்சிகளில் பங்குபெறும் பிரியம் கொண்டவர். விஷயத்தைச் சொன்னதும், ‘என்ன கார் வேணும்னு சொல்லுங்க. விலைக்கு வாங்கித் தர்றேன்’ என்று சொன்னார். ‘கார்களை பணம் கொடுத்து வாங்கி உடைக்க வேண்டுமா?’ என்று நான் சங்கடப்பட்டேன். குகன் சார், “காட்சியை அமைச்சிட்டீங்க? இப்ப யோசனை பண்ணா எப்படி?’’ என்று கூறி, கார்களை வாங்கிக்கொடுத்தார்.

கார்களை மோதவிட்டு எடுக்கும் சண்டைக் காட்சியை எடுக்க ஆரம்பித்தோம். படப்பிடிப்பு நடந்த அன்று அதிகாலை 3 மணி இருக்கும். கார் பல்டி அடிக்கிற மாதிரி காட்சியை எடுக்க வேண்டும்! காரை ஓட்டும் ஃபைட்டரிடம் விஷயத்தைச் சொன்னோம். அவரும், ‘ஓ.கே’ என்று கூறிவிட்டு தயாரானார். கார் பல்டி அடித்த காட்சி தத்ரூபமாக வந்தது. காட்சியை எடுத்து முடிந்ததும் சில விநாடிகள் வரைக்கும் கார் ஓட்டிய ஃபைட்டர் வெளியே வரவில்லை. பதற்றத் தோடு ‘அவருக்கு என்ன ஆச்சு?’ என்று போய் பார்த்தோம். அவர் வெளியே வர முடியவில்லை. காரின் கதவை உடைத்து அவரை வெளியே கொண்டு வந்தோம். ஃபைட்டர் கையில் இருந்து ரத்தம் வடிந்தது. கையைப் பிடித்து பார்த்தால் மூன்று விரல்கள் இல்லை. அடுத்து?

- இன்னும் படம் பார்ப்போம். | படம் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்