பூமிப் பந்திற்கு ரஷ்ய சினிமா செய்த சகாயம் அளப்பரியது. 'பேட்டல்ஷிப் பொட்டம்கின்' திரைப்படத்தில் ஜார் அரசின் பயங்கரவாதத்தை தோலுரித்துக் காட்டியது. அதில் மாண்டேஜ் ஷாட் எனும் நவீன தொழில்நுட்பத்தை கொடையளித்தது ரஷ்யா. அந்நாடு முன்வைத்த உள்ளம் கொள்ளைகொள்ளும் இலக்கியங்களும் திரைக்காவியங்களும் சென்ற நூற்றாண்டின் உலக வரலாற்றை ஆழமாக அறிய உதவின. ஏனோ அதன்பின்னர் மோசமான படங்களின் நீண்ட மௌனம். 'சைபீரியா மோனமவுர்' என்ற திரைப்படம் ரஷ்யாவின் பெயரை காப்பாற்றவென்றே வந்திருக்கிறது என்று சொல்லலாம்.
தனிமையின் பிடியில்
சைபீரியாவின் ஓர் இலையுதிர்கால இறுதி. பேர்தான் தாய்கா கிராமமே தவிர ஒரு மைலுக்கு ஒரு வீடுதான். அதுவும் மரப்பலகைகளான வீடுகள். குடிலில் வயதான இவானும் அவரது பேரன் லெஷியாவும்தான். தந்தை வந்து அழைத்துச் செல்வார் என்கிற நம்பிக்கை சிறுவனுக்கு. ஆனால் ஆற்றங்கரை சாலையருகே மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகளோடு வசிக்கும் அவனது மாமா யூரிதான் அடிக்கடி குதிரை வண்டியில் வந்து அவர்கள் இருவருக்கும் உணவு கொடுத்துவிட்டுப் போகிறவர்.
பெரியவருக்கு மிகுந்த கடவுள் நம்பிக்கை. சிறுவனையும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுமாறு வற்புறுத்துகிறார். மாமன் யூரியுடன் சென்றுவிடும்படி அவர் கேட்டுக்கொண்டதை சிறுவன் மறுக்கிறான். அவன் பிரியத்திற்காக ஒரு காட்டுநாய் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே சுற்றிச்சுற்றி வருகிறது. மது அருந்தக்கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் மிக்க கடவுள் பக்தியைக் கண்டு அவர்களது உறவினரும் அங்கு ஒருமுறை வந்த ராணுவ வீரர்களும் வெறுக்கிறார்கள். சிறுவனை பாடாய் படுத்துவதாக முணுமுணுக்கிறார்கள்.
அவர்கள் வீட்டுக்கு வந்துசெல்லும் ராணுவ வீரர்கள் போகும்போது கடவுள் சின்னத்தை எடுத்துச் செல்வதை அறிந்து அதை தடுக்க முற்படும்போது அடித்து கீழே தள்ளிவிட்டுப் போய்விடுகிறார்கள். சிறுவனின் தாத்தா உடல்நலம் குன்றிவிட படுக்கையில் இருக்கும் அவருக்காக சிறுவன் இப்போது உள்ளார்ந்த அன்போடு அவன் வரைந்துவைத்திருக்கும் மேரிமாதாவை வணங்கத் தொடங்குகிறான்.
சிலநாட்களில் எழுந்து எப்போதும்போல் உற்சாகமாக இயங்கத் தொடங்குகிறார். ஆனால் சிறுவன் காட்டுநாய் ஒன்றிடம் நட்பு பாராட்டுவது பெரியவருக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் அவர் அந்த நாயை சுட்டுக்கொல்ல முயல்கிறார். சிறுவன் அதைப் பார்த்துவிட அவரிடமிருந்து விலகி ஓடுகிறான்.
அருகிலுள்ள கிணற்றில் இறங்கிக்கொள்ள பெரியவர் வெளியேக் கொண்டுவர முயல்கிறார். உடல் முடியாத நிலையில் உதவிதேடி சிறுவனை மீட்க காடுமேடெல்லாம் ஆட்களைத் தேடி அலைகிறார், சிரமத்தோடு நடக்கிறார். ஆற்றில் கிடைக்கும் மரக்கிளையொன்றைப் பிடித்து அதன்போக்கில் மிதந்தவாறே செல்கிறார். சாலை தேடி மலையின் வளைவு தார்சாலை ஓரம் சென்றுவிழுகிறார். எதிரே பிரமாண்டமான அந்த கம்யூனிச அரிவாள் சுத்தியல் கான்கிரீட் சிலைகளின் பக்கவாட்டிலிருந்து எங்கிருந்தோ பாய்ந்துவந்து அவரைக் கடித்துக் குதற முற்படுகின்றன காட்டுநாய்கள்.
காட்சியின் பின்னால்
ஒரு நாட்டில் ஒருநூற்றாண்டையே ஆட்டுவித்த சோவியத் அரசின் கம்யூனிசக் கட்சியின் சின்னத்திலிருந்து நாய்கள் பாய்ந்துவரும் காட்சியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. 90களுக்குப் பிறகு ரஷ்யா உடையத் தொடங்கியதும் ஹங்கேரி, போலந்து நாட்டுப் படங்கள் மோசமான பல உண்மைகளை வெளியே கொண்டுவந்தன. அந்த உண்மைகள் வெடித்துச் சிதறி புகைமூட்டம் கிளம்பத் தொடங்கியது.
மகத்தான இலக்கிய, செல்லுலாய்ட், விஞ்ஞான, தத்துவார்த்த கொடைகளை தந்தருளிய ரஷ்யாவா இப்படி மனிதாபிமானமற்று நடந்துகொண்டது? சோவியத் இவ்வளவு கசப்புமிக்கதா? என்றெல்லாம் அதிர்ந்துபோன ரசிகர்கள் ஏராளம். எனினும் அமெரிக்காவின் ரஷ்ய வெறுப்போடு இதை பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை. இப்படத்தின் சைபீரிய வனப்பிரதேசத்தை வெவ்வேறு வகையில் காட்சிப்படுத்த கேமராவை கையாண்ட விதம் மிரள வைக்கிறது. மரப்பலகை ஆளற்ற நேரம்பார்த்து வந்து வரையாடுகளை கபளீகரம் செய்துவிட்டுபோகின்றன காட்டுநாய்கள். வேறொரு சமயம் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடிக்கிறார் பெரியவர்.
நாய்களின் துரத்தல்
இப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சி. சிறுவனது மாமா யூரி அவர் துப்பாக்கியின்றி ஒருநாள் குதிரை வண்டியில் செல்லும்போது வழக்கமாக எடுத்துச்செல்லும் துப்பாக்கியை மறந்துவிட்டுச் செல்கிறார். அப்போதே வீட்டிலிருந்து அவரது மனைவி குழந்தைகளிடம் அவரைக்கூப்பிடு எனக்கூறி துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்துபார்க்க வண்டி தொலைதூரம் போய்விட்டிருக்கும். மிகவும் சிறுவனது மாமா யூரியின் குழந்தைகளும் மனைவியும் கவலையோடு அவர் சென்ற பாதையை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
நடு காட்டில் பாதையில் மரங்கள் அடர்ந்த மலைப்பாதையில் குதிரை வண்டியோட்டிச் செல்லும் சிறுவனது மாமா யூரியை குறிவைத்து நாய்கள் பாய்ந்துவருகின்றன. குதிரையின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை நாய்களால். அதனால் பாய்ச்சலின் வேகம் கூடி தொடர்ந்து பாய்ந்து ஓடிவருகின்றன. ஒரு கட்டத்தில் நாய்கள் வண்டியைத் தொட்டு அவரை கீழே இழுத்துப்போட்டு அவரைக் கொன்று சதைகளை எடுத்துச்செல்கின்றன.
உயிர்ச்சதைகளின் வாசனையைக் குறிவைத்து காடெங்கும் பாய்ந்துவரும் நாய்களுக்கு முன்னிருந்து பாய்ச்சலாக பின்னோட வேண்டிய யூரீரேஸ்கீயின் ஒளிப்பதிவு வேலைகளை நினைக்கும்போது குலைநடுங்குகிறது. எதேச்சதிகாரத்திற்கெதிரான இருத்தல்மீதான அச்சுறுத்தல் சார்ந்த வேறுபல அர்த்தங்களையும் இப்படத்தின் நுட்பமான திரைக்கதை நமக்குத் தருகிறது.
கேப்டனின் மனிதநேயம்
கேப்டன் தனக்கு வேண்டிய இணக்கமான பெண்ணிடம் அவள் விரும்பாத நேரத்தில் மோசமாக நடந்துகொள்ள முற்படுவதைக்கூட பொறுக்காத இளைய ராணுவ வீரன் துப்பாக்கியால் வேறுதிசையில் சுட்டு கோபத்தைக் காட்டி தடுத்துநிறுத்துகிறான். ஆனால் அவளோ கேப்டன் பிரியும்நேரத்தில் படையினரிடம் அவன் செல்லும்போது கவலையோடு முத்தமிட்டு அனுப்புகிறாள். லெப்டினென்ட் காட்டு மருத்துவமனை செவிலியரை முறைகேடாக நடக்கும் சமயமொன்றில் அங்குவந்த அந்த முரட்டுக் கேப்டனே தன் உயரதிகாரியிடம் முறைத்துக்கொள்கிறான். ''இனி உனக்கு ட்ரான்ஸ்பர்தான்'' என சொல்வதையும் கேளாமல் இளம் செவிலியரை காப்பாற்றி மீட்டுச்செல்கிறான்.
இளம் செவிலியரை தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சாலையில் நாய்கள் குதறத் தொடங்கியவுடனே அங்கு வரும் அவர்கள் பெரியவரை காப்பாற்றி சிகிச்சையளிக்க ஜீப்பில் ஏற்றிக்கொள்கிறார்கள். பெரியவரிடமிருந்து கடவுளைத் திருடிவந்த அதே கேப்டன்தான் இப்போது அவரை காப்பாற்றவும் செய்கிறார்.
பின்தொடரும் காட்டு நாய்
மனிதர்களைப் பற்றி மட்டுமல்ல காட்டு நாய்களைப் பற்றிய நமது கணிப்புகளையும் புரட்டிப்போடுகிறது படத்தின் பின்பாதி. ஆடுகளை மட்டுமல்ல மனித ரத்தத்தின் ருசியையும் கண்டுவிட்டன சைபீரிய காட்டு நாய்கள். சிறுவனின் அத்தை காட்டுநாய்களால் கொல்லப்பட்டதை அறியாமல் தன் கணவனைத் தேடியும் சிறுவனையும் பெரியவரையும் தேடி வருகிறாள். அவளிடம் சிறுவன் கிணற்றில் இருப்பதை உணர்த்தும் விதமாக சைகைகளால் முறையிட்டு கிணற்றருகே ஓடிக் காட்டும்போதும் சரி, கடைசிக் காட்சியில் பெரியவரையும் சிறுவனையும் செவிலியின் உதவியோடு காப்பாற்றி ராணுவ வீரர்கள் ஜீப்பில் ஏற்றிச் செல்லும்போதும் சரி அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிவந்துகொண்டேயிருக்கிறது சிறுவனுக்குப் பிரியமான அந்த காட்டு நாய்.
பரிவுக்கும் குரூரத்திற்குமான இடைவெளியை சூழ்நிலைகள் தீர்மானிக்கும் யதார்த்ததை புரிந்துகொள்ளச் சொல்கிறது படம். மனிதனுக்கும் விலங்குகளுக்குமான கிளைக்கதைகளின் ஒப்பீட்டுக் காட்சிகள் திகைப்பூட்டுகின்றன. ரஷ்ய இயக்குநர் வியாச்சேஸ்லவ் இப்படத்தின்மூலம் நம் தேடலின் நெடிய பாதையில் புதியதொரு வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago