திரைப் பார்வை: நிலை மறந்தவனின் பின்னால்…!

By ஆர்.சி.ஜெயந்தன்

கடந்த 2020 பிப்ரவரியில் மலையாளத்தில் வெளியாகி, கேரளத்தில் எதிர் விமர்சனங்களை கண்ட படம் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ‘ட்ரான்ஸ்’. மதத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தைப் பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டிய இந்தப் படம், பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மறு தணிக்கையில் சிக்கியும் வெளியீடு தாமதமானது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்க்கும் படமாக இருந்தபோதும், தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்கிற தலைப்புடன் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக, எந்தவொரு பெரு மதம் குறித்தும் வீச்சு மிகுந்த திரைப்படம் வழியாக விமர்சிக்கப்படுவது அபூர்வம். காரணம், விமர்சிக்கப்படும் பெரு மதத்தைப் பின்பற்றும் வெகு மக்களின் உணர்வை அது காயப்படுத்தும் என்று கூறி விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டே வந்திருக்கின்றன.

ஆனால், புத்தாயிரத்துக்குப் பிறகு இந்த நிலை படைப்பாளிகள் மத்தியில் மாறியிருக்கிறது. பார்வையாளர்களும் ‘இருப்பதைத்தானே எடுத்துக் காட்டுகிறார்கள்’ என்று ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கத்தை ரசிக மனநிலையில் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். அதனால்தான், ‘ட்ரான்ஸ்’ போன்ற படங்கள் வரவேற்பைப் பெற்றுவிடுகின்றன.

வின்சென்ட் வடக்கன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அன்வர் ரஷித் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் தமிழ் மொழிமாற்றுப் பதிப்பில், தமிழ் வசனங்கள் படத்தின் உள்ளடக்கத்தை இன்னும் கூடுதலாகத் துலங்கச் செய்திருக்கின்றன.

தாய், தம்பியின் தற்கொலைக்குப் பின்னர், மனநிலை சிதைந்து தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாறுகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜு பிரசாத். அவருடைய தோற்றம், ‘பப்ளிக் ஸ்பீக்கிங் ஸ்கில்’ ஆகியவற்றைக் காணும் கார்ப்பரேட் மாபியா மனிதர்களான சாலமன் டேவிஸ் (கௌதம் மேனன்), ஐசக் தாமஸ் (செம்பன் வினோத்) ஆகிய இருவரும், விஜுவை அழைத்து வந்து ‘ஜோஸ்வா கால்டன்’ என்று பெயரை மாற்றுகிறார்கள்.

அவருக்குப் பயிற்சியளித்து ஒரு மதபோதகராக மாற்றுகிறார்கள். வறுமை, குடும்பத்தின் அழிவு என வாழ்வில் சிதைந்த ஒருவரே, பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளால் மனம் சிதைந்து ஆறுதல் தேடும் ஆயிரக்கணக்கான மனிதர்களை மதத்தின் பெயரால் போலியாக ஆற்றுப்படுத்தும் வணிகத்தின் தூண்டிலாக மாறுகிறார். பின்னர் அதிலிருந்து அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் விடுபட முன்வந்தார், அதற்காக அவர் என்ன செய்தார் என்பதுதான் படம்.

‘எஸ்தர்’ என்கிற கதாபாத்திரத்தில் வரும் நஸ்ரியா தொடங்கி, தொலைக்காட்சிப் பேட்டியாளராக வரும் சௌபின் ஷாகீர் வரை நிறைய திறமையான நடிகர்கள். என்றாலும் ஃபகத் ஃபாசில் என்கிற அசலான கலைஞனே படம் முழுவதும் வியாபித்திருக்கிறார்.

மனச்சிதைவு நோயில் அல்லாடும் நாட்கள், மதபோதகராக பயிற்சி பெறும் நாட்கள், ஜோஸ்வா கால்டனாக மாறிய பின் மதக் கூட்டங்களில் பிரசங்கிக்கும் நாட்கள், வறுமையை உதறியெழுந்த உலகப் புகழ் போதகராக உலகம் சுற்றும் நாட்கள் எனக் கதாபாத்திரத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் உடல்மொழியிலும் முக பாவங்களிலும் ஃபகத் ஃபாசில் வெளிப்படுத்திக்கொண்டு வரும்போது அவரை மகா கலைஞன் என்றே சொல்லவேண்டியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் வெகுஜன சினிமாவின் ‘சினிமாடிக்’ தருணங்களுக்கு படம் நகர்ந்தாலும் மதத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தின் முகத்தை துணிவாக திரைவிலக்கிக் காட்டியதில் ‘நிலை மறந்தவன்’ கெத்து காட்டுகிறான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்