ஏவி.எம்.சரவணன் சார் அவர்களை ஒரு வாரம் கழித்து வந்து சந்தித்தார் விசு. அப்போது, ‘‘நீங்க சொன்ன மாதிரியே கதையில் நகைச் சுவை டிராக்கை சேர்த்துவிட்டேன். மனோரமாவை வைத்து அந்த டிராக்கை யோசிக்க சொன்னீங்க. அப்படியே கதையை எழுதியிருக்கிறேன். இனி, மனோரமாவை கதையில் இருந்து எடுத்துவிடுங்கன்னு சொன்னாக்கூட எடுக்க முடியாது. மற்ற கதாபாத்திரங்களோடு அவர் அப்படி ஒன்றிவிட்டார்’’ என்றார் விசு.
சரவணன் சார், “மனோரமாவை வைத்து எழுதிய டிராக்கை சொல்லுங்க’’ என்றார். விசு சொன்னதும் அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டது. அந்தப் படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்.’
படத்தில் மனோரமாவுக்கு நல்ல ரோல். அவர் வரும் பெரும்பாலான காட்சிகளில், ‘கம்முன்னு கெட’ன்னு ஒரு வார்த்தை தெறிக்கும். அது ரொம்ப பாப்புலர் ஆச்சு. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் ‘கம்முன்னு கெட’ ன்னு சொல்லிக் கொண்டே வருவார்கள். கதை கூட்டுக் குடும்பம் பற்றியது. கதையின் முடிவில் எப்பவுமே கூட்டுக் குடும்பமா இருக்க முடியலைன்னாலும் நல்ல நாட்கள், விஷேச நாட்கள் சேர்ந்து இருக்கிற மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கலாம்னு விசு சொல்லு வார். அதுதான் கிளைமாக்ஸ். ‘அது சரியா இருக்குமா?’ என்ற சந்தேகம் எனக்கும், பாலு சாருக்கும் வந்தது. ஆனால், ஏவி.எம்.சரவணன் சார் மட்டும், நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று உறுதியாக இருந்தார். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகளும் பாராட்டினர். அப்போதே படம் வெற்றி என்பது உறுதியானது.
என்னைத்தான் எல்லோரும் மினிமம் கேரண்டி டைரக்டர், பட்ஜெட்டில் படம் எடுக்கிற டைரக்டர்னு சொல்வாங்க. ‘திருப்பதிக்கே லட்டா!’ என்று என்னை முந்திக் கொண்டு டைரக்டர் விசு அவர்கள் முழு படத்தையும் 35 நாட்களில் எடுத்தார். அதேபோல் ஒரு படத்துக்கு குறைந்தது 50,000 அடி ஃபிலிம் ரோல் தேவைப்படும். இந்தப் படத்தை விசு சார், 34,000 அடியிலேயே எடுத்துவிட்டார். இது நான் எடுப்பதைவிட குறைவு. ‘என்னாலும் பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும்’ என்று விசு நிரூபித்த படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்.’
இந்தப் படத்ததுக்கு மத்திய அரசின் தங்கப்பதக்கம் கிடைத்தது. தங்கப் பதக்கம் வாங்கிய முதல் தமிழ்ப் படம் இது. அந்தப் பெருமையை ஏவி.எம் நிறுவனத்துக்கு பெற்றுத் தந்தவர் விசு.
இந்தப் படத்தை தெலுங்கில் இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இங்கே விசு நடித்த ரோலில் அங்கே கொல்லபுடி மாருதி ராவ் நடித்தார். விசு, சுவையாக இப்படத்தை தமிழில் எடுத்திருந்ததால் என்னால் தெலுங்கில் சுலபமாக எடுக்க முடிந்தது. படத்துக்குப் பெயர் ‘சம்சாரம் ஒகா சதாரங்கம்.’
தெலுங்கில் மனோரமா ரோலுக்கு யாரை போடுவது என்று பெரிய விவாதமே நடந்தது. முடிவில் சரவணன் சார், ‘‘சவுகார் ஜானகியை நடிக்க வைக்கலாம். அவருக்கு படத்தை போட்டுக் காட்டுங்கள்’’ என்றார். நான் தமிழ் படத்தை போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்துவிட்டு, ‘‘என்னால் மனோரமா அளவுக்கு நடிக்க முடியு மான்னு தெரியல. ஆனால், நீங்களும், சரவணன் சாரும் சொல்றதுனால நடிக்க ஒப்புக்குறேன்’ன்னு சொல்லி நடித்தார். ஆச்சி மனோரமாவின் நடிப்புக்கு துளியும் குறையாத நடிப்பை சவுகார் ஜானகி வெளிப்படுத்தினார். தமிழில் மனோரமா பேசிய, ‘கம்முன்னு கெட’ ங்கிற வார்த்தைக்கு இணையான தெலுங்கு வார்த்தையை வசனகர்த்தா கணேஷ் பாத்ருவால் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் அதற்கு சமமான ஒரு வார்த்தையை சவுகார் அவர்கள் ஒப்புக்கொண்டு மனோரமா ஸ்டைலில் சொன்னார்கள். அந்தப் படம் ஆந்திராவில் 100 நாட்கள் ஓடியது. அதுக்கு காரணம் விசுவின் படைப்புதான்.
அடுத்து நான் இயக்கிய படம் சத்யா மூவீஸின் ‘ராணுவ வீரன்.’ படத்தின் தயாரிப்பாளர் அரசியல், நாடகம், சினிமா, ஆன்மிகம், இலக்கியம் எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்கும் அண்ணன் அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். எம்.ஜி.ஆர் அவர்களை நடிக்க வைத்து அதிக படங்கள் எடுத்த ‘சத்யா மூவீஸ்’ நிறுவனத்துக்கு நான் படம் இயக்குகிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருந்தது.
அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் காரைக்குடியில் என்னுடைய தந்தையார் இராம.சுப்பையா அவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவரது நிறுவனத்தில் நான் படம் இயக்குவதை அவர் என் தந்தைக்குச் செய்த நன்றியாகவே நினைக்கிறேன். எந்த வேலையை செய்தாலும் அதில் மிக கவனமாக இருப்பதுடன், அந்த வேலை தரமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஆர்.எம்.வீ. எதையுமே மிகச் சரியாகவும், தரமாகவும் செயல் வடிவம் கொடுக்கும் ஏவி.எம் செட்டியார் அவர்களிடம் நான் வேலை கற்றுக்கொண்டவன். என்னாலயே, ஆர்.எம்.வி அவர்களைத் திருப்தி செய்ய முடியாது. ஆர்.எம்.வீ அவர்கள் நாடக அனுபவம் உள்ளவர் என்பதால், கதை ஞானமும் அவருக்கு உண்டு. கதை விவாதங்களில் சூடு பறக்கும் பல கேள்விகளை அடுக்குவார். அவருக்கு வரும் யோசனைகளை பகிர்ந்துகொள்வார்.
‘சத்யா மூவீஸ்’ கதை இலாகா பிரிவில் அப் போது ஜெகதீசன், ராதா வீரண்ணன், கிருஷ்ணா, தமிழழகன் ஆகியோர் இருந்தனர். நான் அந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அண்ணன் ஆர்.எம்.வீ அவர்கள் அமைச்சராக இருந்தார். ‘கதை விவாதத்துக்கு 6 மணிக்கு வந்துடுறேன்’ என்று சொல்வார். நாங்கள் தயாராக இருப்போம். மணி எட்டாகும். ஒன்பதாகும். அவரிடம் இருந்து போன் வரும். ‘‘கொஞ்சம் டைம் ஆகும். நீங்கள்லாம் சாப்பிட்டு ரெடியா இருங்க. நான் வந்துடுறேன்’’ என்று சொல்வார். நாங்க ரெடியாக இருப்போம். கடைசியில் 11 மணிக்கு வந்து சேர்வார். அந்த நேரத்திலும் கொஞ்சமும் சோர்வே இல்லாமல், கதை விவாவதத்துக்குள் படு சுறுசுறுப்பாகிவிடுவார்.
‘ராணுவ வீரன்’ படம் நக்சலைட் தீவிரவாதிகளைப் பற்றிய கதை. படத்தில் ராணுவ வீரராக தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நக்சலைட்டாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் நடித்தார்கள். ரஜினி, ‘அகிம்சைதான் சரியான வழி. தீவிரவாதம் கூடாது’ என்று வலியுறுத்தும் கதாபாத்திரம். சிரஞ்சீவி அதுக்கு நேர். தீவிரவாதத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தீவிரமாக நடித்தார். படம் பார்த்தவர்கள் ரஜினி ரோலில் சிரஞ்சீவியும், சிரஞ்சீவி ரோலில் ரஜினியும் நடித்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
வெளிப்புற படப்பிடிப்புகள் தமிழகத்தில் பல இடங்களிலும் நடந்தது. பொள்ளாச்சியில் நடக்கும்போது படக்குழுவினருக்கு உதவி செய்வதற்காகா ‘நெகமம்’ கந்தசாமி எங்களோடு வந்திருந்தார். டாப் சிலிப் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. அழகான பசுமையான இடம். சுற்றிலும் மலை. நடுநடுவில் காடுகள். இருட்ட ஆரம்பித்தால் மிருகங்கள் வந்துவிடும். அதனால் இருட்டுவதற்குள் எல்லோரும் வெளியே வந்துவிட வேண்டும். ஒருநாள் யூனிட்டில் பத்து பேர் வந்து சேரவில்லை. அவர்களை அழைத்து வர எந்த டிரைவருக்கும் தைரியமில்லை. ‘நெகமம்’ கந்தசாமி இதைப் பார்த்ததும் ஒரு ஜீப்பை எடுத்துக்கொண்டு அந்த 10 பேர்களை அழைத்துவர அந்த இருட்டில் புறப்பட்டார். ‘நெகமம்’ கந்தசாமி ஆட்களை அழைத்து வந்தாரா? மிருகங்களிடம் மாட்டிக்கொண்டாரா?
- இன்னும் படம் பார்ப்போம்...
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago