நீண்ட இரவின் விடியலாய், சசிகுமார் சாரிடம் ‘பசங்க’ படத்தின் கதையை சொல்லி, ஓகே ஆனதும் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு அப்பாவை பார்க்க கிளம்புகிறேன். அதற்கு இரண்டு மாதம் முன்பு வரை, ‘இந்த சினிமாவெல்லாம் நமக்கு ஒத்து வராது ராசா.. ஊரோட வந்திடுய்யா’னு அழைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய், ‘அப்பா நான் டைரக்டர் ஆகிட்டேன்’ என ஆசீர்வாதம் வாங்கும் கனவுகளோடு ஊருக்குள் நுழையும் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
என்னை பார்த்ததும் என் அப்பா கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? “யார் நீ” என்பது தான். சில்லு சில்லாய் தெறித்து விட்டேன். “ஒரு மாசமாவே இப்படித்தான் இருக்கார்” என்று சொல்லி அண்ணன் உடைய, என்ன செய்வதென்றே தெரியாமல் விக்கித்துபோய் உட்கார்ந்துவிட்டேன். அம்மாவின் மறைவின்போதே அப்பா பாதி இறந்துவிட்டார். யாருடனும் பேசாமல், எப்போதும் எதையோ நினைத்தபடியே உட்கார்ந்திருப்பார். அப்பாவிற்கு நெருங்கிய நண்பர்கள் இருவர், முத்துக்கருப்பன் அண்ணன் மற்றும் முருகப்பன் மாமா. ஆனால், அவர்களையும் கால(ன்)ம் அப்பாவிடம் இருந்து பிரித்தது. அம்மா இறக்கும் முன்னரே முருகப்பன் மாமா இறந்து போய்விட எஞ்சியிருந்தது முத்துக்கருப்பன் அண்ணன் தான். அம்மா இறந்த அடுத்த சில மாதங்களில் முத்துக்கருப்பன் அண்ணன் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி மரணமடைந்தார். இப்படி என் அப்பாவை மீண்டும் தனிமை துரத்த, கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு தப்ப தொடங்கியிருக்கக்கூடும்.
மனதை கல்லாக்கி கொண்டு, எனது ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் லொக்கேஷன் பார்க்க கிளம்புகிறேன். தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டி ருக்கிறது. திடீரென்று பார்த்தால் என் அப்பாவை காணவில்லை. லொக்கேஷன் பார்ப்பதை நிறுத்தி விட்டு அப்பாவை தேடுகிறோம். சரியாக தீபாவளி நாளன்று என் அண்ணன் மகள் ஓவியா கண்ணிற்குள் ராக்கெட் பட்டாசு பாய உடனடி யாக ஆபரேஷன் பண்ணவேண்டிய சூழல். இன்னொரு பக்கம் எங்கள் வள்ளி அக்கா இறந்து போய்விடுகிறது. நான் அங்கே போகவேண்டிய கட்டாயம். இப்படி ஒரு கடுந்துயர சூழல், என் எதிரிக்கும் வரக்கூடாது என மனதிற்குள் நினைத்துக்கொள்கிறேன்.
எனது தந்தையின் பெயர் சின்னையா. டெல்லி பாண்டி சின்னையா என்றால் எல்லோருக் கும் தெரியும். எனது தாத்தாதான் எங்கள் ஊரிலேயே முதன்முதலில் டெல்லிக்கு போய் விட்டு வந்தாராம். அதனால், எங்கள் வீட்டை எல்லோரும் டெல்லி பாண்டி வீடு என்றுதான் சொல் வார்கள். என் அப்பாவை பலரும் டெல்லி என்று தான் அழைப்பார்கள். அந்த வகையில் என்னையும் ஒரு சிலர் டெல்லி என்று கூப்பிடுவார் கள். ஆனால் அப்படி கூப்பிட்டால் எனக்கு கடுங் கோபம் வரும். எங்க அப்பாவிடம் போய் முறை யிட்டால்.. “உன் தாத்தாதான் நம்ம ஊருலயே முதன் முதலா டெல்லிக்கு போனவரு.. இது நமக்கு கவுரவம் ராசா” என்று சமாதானம் சொல்வார்.
நான் பார்த்து ரசித்த முதல் ஹீரோ அப்பாதான். அப்படி ஒரு உயரம். கருகரு தேகம், உழைத்து உழைத்து இறுகிப்போன 6-பேக், இல்லை இல்லை, 8-பேக் உடம்பு அவருடையது. அடி பிடித்தால் வார் வாராக உரித்துவிடுவார். பயம் என்றால் என்னவென்றே அறியாத மனிதர். ஒரு முறை வயலில் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சப் போனவர், தூம்பு அடைத்திருக்கவே என்னடானு மண்வெட்டியை விட்டு ஆட்டி பார்த்திருக்கிறார். சடாரென ஒரு நல்ல பாம்பு மண்வெட்டி பிடியில் ஏறியிருக்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பாம்பை பிடித்து தலையை சுற்றி தரையில் அடித்து கொன்று விட்டார். நல்ல பாம்பை கொன் றால் ஐதீகமாய் புதைக்கவேண்டும் என்பதால் குழி வெட்டி பச்சரிசி போட்டு, பசும்பால் ஊற்றி வெள்ளைத்துணியால் மூடி அந்த பாம்பை புதைத்த அன்று அப்பா என் கண்களுக்குள் ஒரு ஹீரோ வாக பதிந்து போனார். இதேபோல மற்றொரு முறை ஒரேநேரத்தில் மூன்று நான்கு கதண்டுகள் என் அப்பாவை கொட்டி விட்டன. சட்டென்று அரு கில் இருந்த துண்டை எடுத்து தலையில் உருமா கட்டிக்கொண்டு, ஆனாந்தழையை பறித்து கையில் வைத்து கசக்கி, வாயில் அதக்கிக் கொண்டு விறுவிறுவென ஓடுகிறார். ஆஸ்பத்தி ரிக்கு போய் ஒரே ஒரு ஊசி தான் போட்டுக் கொண்டார், எல்லாம் சரியாகிவிட்டது. இது அனைத்தையும் அவர் நிகழ்த்தி காட்டியது சில நிமிடங்களில் என்பதே ஹீரோயிசத்தின் உச்சம்.
என்னை ஒரு முறை பக்கத்து வீட்டு ஆள் கல்லால் அடித்துவிட்டான். அவ்வளவுதான்.. அடுத்த நிமிஷம், என்ன நினைத்தாரோ, நேராக சென்று முத்துக்கருப்பன் அண்ணனையும் கூட்டிக் கொண்டு அவனை துரத்த ஆரம்பித் தார். அவன், தெறிச்சு ஓட, விடா மல் துரத்தி துரத்தி, ‘எதுக்குடா என் மவன அடிச்ச’னு, அவனை பிரித்து எடுத்தார். அன்றைக்கு தான், என் அப்பாவுக்கு என்னை எவ்ளோ பிடிக்குமென நான் தெரிந்துகொண்டேன். என் அப்பா எங்கள் வீட்டுக்கு உழைத்ததை விட ஊரார்களுக்கு வேலை பார்த்ததுதான் அதிகம். எந்த வீட்டில் நல்லது கெட்டது என்றாலும், முதல் ஆளாய் நின்று எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு பார்ப்பார். எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பலருக்கும் உழைத்த ஒரு வெள்ளந்தி மனிதர் அவர்.
என்னை ஒரு நிழல் மாதிரி தொடர்வார். எப்போ ஸ்கூல் கட் அடிக்கிறேன், எந்த வாத்தியார் கிட்ட எகிடு தகிடா பேசுனேன், எந்த படத்துக்கு யார் கூட போனேன், எப்படி ஃபிராடுத்தனம் செஞ்சு அதி கமா மார்க் வாங்குனேன்னு எல்லாமே, அவருக்கு தெரியும். நான் எவ்ளோதான் ரகசியமா பிளான் போட்டாலும், ஒரு சிஐடி ஆபீசர் கணக்காக, எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டு என்னை துரத்தி துரத்தி அடிப்பார். ஒரு சில முறை, என்னை கட்டிவைத்தெல்லாம் அடித்திருக்கிறார். இதை படிக்கும்போது, ஒரு சிலருக்கு, என்னடா இவ்ளோ கொடுமையான அப்பாவா என்று தோன்ற லாம். தப்பு அவர் மேல் அல்ல, நான் செய்த சேட்டைகளெல்லாம் அப்படிபட்ட ரகம். அதனால், என் அப்பாவுக்கு நான் எங்கு வழி தவறி போய் விடுவேனோ என்ற பயம். அதற்காகத்தான் அந்த கண்டிப்பு!
இப்படி என்னைக் கண்ணும் கருத்துமாய் வழிநடத்தியவர் எங்கிருக்கிறாரோ என்று தெரி யாமல் தேடல் தொடர்கிறது. ஒரு வழியாய், இரண்டு மூன்று நாட்கள் கடந்து என் அப்பாவை ரங்கத்தில் கண்டுபிடித்து டாக்டரி டம் கூட்டிவந்து காட்டுகிறோம். “இன்னும் அதிக பட்சம் பதினைந்து நாள் தாக்குபிடிச்சா அதிகம், பத்திரமா பார்த்துக்கோங்க” என்கிறார் டாக்டர். மறுநாளில் இருந்து நான் ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டும். வேறுவழியில்லாமல் அண்ணி மற்றும் அக்காவிடம் அப்பாவை பார்த்துக்க சொல்லி விட்டு, ‘பசங்க’ படத்தின் ஷூட்டிங்கை தொடங்கு கிறேன்.
ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கையும் அப்பா இருப் பாரோ, இல்லை இறப்பாரோ என்ற பதட்டத் தோடுதான் நடத்த வேண்டியிருக்கும். அம்மா தான் நம்ம முதல் படத்தை பார்க்க உயி ரோட இல்லை, முதல் படத்தை முடித்து அப்பாவை யாவது பார்க்க வைத்துவிட மாட்டோமா, என்று தவிப்போடுதான் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் நடந்தது. நமக்காக வாழும் அப்பாக்களுக்கு நம்மால் என்ன கைம்மாறு செய்து விட முடியும், இப்படிப்பட்ட சின்ன சின்ன சந்தோசங்களை பரிசளிப்பதை தவிர..! ஆனால் அதாவது எனக்கு வாய்த்ததா... என் அப்பா என் முதல் படத்தை பார்த்தாரா? அடுத்த வாரம் தொடர்கிறேன்.
குடும்பத்தைக் காக்க தன்னையே உருக்கும், நேரம் பாராமல் உழைக்கும், ஒவ்வொரு தந்தைக் கும், இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!!!!
இயக்குநர் பாண்டிராஜ்- தொடர்புக்கு: pandirajfb@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago