பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பு வெளியிட்டு வாழ்த்தும் அளவுக்கு இம்முறை கான் சர்வதேசத் திரைப்பட விழா கவனத்தை ஈர்த்துள்ளது. கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன் ராதாகிருஷ்ணன், மாதவன், பா.இரஞ்சித், தமன்னா, நயன்தாரா என இருபதுக்கும் அதிகமான தமிழ் சினிமா கலைஞர்களுக்கு கானில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்படவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள ‘லீ மாஸ்க்’ என்கிற 36 நிமிட குறும்படமும் பார்த்திபன் இயக்கியுள்ள ‘இரவின் நிழல்’ என்கிற உலகின் முதல் ‘நான் - லீனியர் சிங்கிள் ஷாட்’ திரைப்படமும் பிரீமியராக திரையிடத் தேர்வாகியுள்ளன.
இது சமந்தாவின் ‘குஷி’
கடந்த 2000இல் விஜய் - ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘குஷி’. தற்போது இதே தலைப்பில் உருவாகியிருக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ‘இதுவொரு உற்சாகமான, வண்ணமயமான காதல் கதை’ என்கிறார் படத்தின் இயக்குநர் ஷிவா நிர்வாணா. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்துக்கு, சமீபத்தில் ஹிட்டடித்த ‘ஹிருதயம்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ள ஹீஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
தீபாவளிக்கு அஜித்!
‘நேர்கொண்ட பார்வை', ‘வலிமை' ஆகிய படங்களைத் தொடர்ந்து, அஜித்தை மூன்றாம் முறையாக இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு, சென்னையிலும் பெரும்பகுதி ஹைதராபாத்திலும் நடைபெற்று வருகிறது. அஜித்துடன் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், செப்டம்பர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து, வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இணையத்தில் ‘முத்துநகர் படுகொலை’
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி, கடந்த 2017இல் நடந்த தன்னெழுச்சிப் போராட்டத்தை ‘மெரினா புரட்சி' என்கிற தலைப்பில் ஆவணப்படமாக தயாரித்து, இயக்கியவர் எம்.எஸ். ராஜ். இயக்குநர் சேரனின் உதவியாளரான இவர், தற்போது இயக்கியிருக்கும் ஆவணப்படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடந்த மக்கள் போராட்டத்தைப் புலனாய்வு முறையில் அணுகியுள்ள ஆவணப்படம் இது. டெல்லியில் நடந்த தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான சிறப்பு விருதையும் சிங்கப்பூர் சர்வதேசத் திரைப்பட விழாவில் விமர்சகர்கள் விருதையும் வென்றுள்ளது. ‘தமிழ்சாட்’ (tamilsott) என்கிற தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது இந்த ஆவணப்படம்.
‘கன்னித்தீவு’ இசை வெளியீடு
வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா ஸவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா ஆகிய நான்கு கதாநாயகிகள் இணைந்து நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் படம் ‘கன்னித்தீவு’. த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு தயாரித்து, இயக்கியிருக்கும் இரண்டாவது படம். இப்படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “மற்ற மொழிப் படங்கள் 30 சதவீதம் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்.
ஆனால், ‘பான் இந்தியா படம்’ என்று சொல்லிவிட்டு எல்லாக் குப்பைகளையும் இங்கே கொண்டுவந்து கொட்டுகிறார்கள். ‘பான் இந்தியா’ என்றால் அவற்றை ஓடிடியில் வெளியிடுங்கள். சிறிய முதலீட்டில் உருவாகும் தரமான, சிறியத் தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வழிவிடுங்கள்.” என்று பேசினார். இயக்குநர் பேரரசு பேசும்போது “ சில படங்களின் டிரைலரைப் பார்த்தால் இதுதான் கதை என்று ஊகிக்க முடியும். ஆனால், ‘கன்னித்தீவு’ படத்தின் டிரைலரைப் பார்த்துக் கதையை ஊகிக்க இடம் தராதது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது” என்று பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago