தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் செவிகளை கிறிஸ்தவத் தேவாலயங்களில் இருந்து காற்றில் கலந்து வரும் ஸ்தோத்திரப் பாடல்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் காதுகளை நிரப்பும். ஜிக்கி, ஏ.பி. கோமளா, ஏ.எம். ராஜா, ஜாலி ஆபிரகாம் போன்ற எல்லோருக்கும் தெரிந்த பாடகர்களுடன், முகம் தெரியாத ஏராளமானவர்கள் இயேசுவின் கருணையை இசையோடு இயம்புவார்கள். அந்த இசையிலும் பாடல் வரிகளிலும் ஒரு விதமான வருத்தம் சோகமும் கலந்தே இருக்கும்.
தமிழகத்தின் அழுதே சாதித்தவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். “வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்கிறார் மாணிக்கவாசகர். “ஆடியாடி அகம் கரைந்து இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி” என்று கதறுகிறார் நம்மாழ்வார்.
இருப்பினும் கிறிஸ்தவ சமயப் பாடல்களில் மேற்கத்திய இசையில் தாக்கம் அதிகரிக்கையில் அவை மண்ணின் மணத்தில் இருந்து விலகி நின்று செயற்கைத் தன்மை பெறுகின்றனவோ என்ற எண்ணம் உருவாகிறது. ஆனால், திரைப்படங்களில் இடம் பெற்ற கிறித்தவப் பாடல்கள் கர்த்தரை எல்லோருக்கும் பொதுவானவராக்கி கண்ணீர் உகுக்கச் செய்திருக்கின்றன. காரணம், அவை பெரும்பாலும் தமிழக இசை மரபில் உருவாக்கப்பட்டவை.
“பிள்ளை பெறாத பெண்மை தாயானது; அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது” என்ற வரிகளைப் பாட முடியாமல் கண்ணீர் உகுத்துக்கொண்டு நின்றிருந்தார் எஸ். ஜானகி என்பது இன்றும் திரை உலகத்தில் சிலாகித்துப் பேசப்படும் விசயம்.
‘அச்சாணி’ (1978) திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில்
“மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்”
என்ற பாடலின் ஒரு பகுதிதான் ஜானகியை அப்படி அழ வைத்தது.
“மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே; மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே; மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா மாதா”
என்று அவர் பாடுகையில் புல்லின் நுனியில் துளிர்க்கும் பனித்துளி போல் கண்களில் நீர்த் துளிகள் வெளிப்படுவதைத் தடுக்க முடியவில்லை.
அது போலத்தான் ‘புனித அந்தோணியார்’ திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் “மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்; நல்ல மனிதர் நடுவே குழந்தை வடிவம் பெறுகிறார்” என்று வாணி ஜெயராம் பாடும் பாடலும் குறிப்பிடத்தக்கது.
துள்ளல் நடையில் ஒலிக்கும் தபேலா வாசிப்போடு வாணி ஜெயராம் பாடுகிறார். அந்தோணியாராக நடிக்கும் முத்துராமன் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டிருக்கையில் குழந்தைக் கண்ணனைத் தூக்கி வைத்துக்கொள்ளும் நந்தகோபன் அங்கு நிற்கிறான். மதங்களைப் பிரித்து நிற்கும் எல்லைக் கோடுகளை இசை தகர்த்தெறிந்த தருணம் அது.
கண்ணன் குழலூதுகிறான். ஜேசுதாசோ,
“குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை இயேசுவை மடியினில் சுமந்து
மாதா வருவாளே”
என்று கிறிஸ்தவத்தை மண்ணின் மதமாக்கி மகிழ்கிறார்.
இறைவனை மருந்தென்பெர். சிவபெருமானுக்கு மருந்தீஸ்வரன் என்ற பெயரும் உண்டு. அந்தோணியாரும்
“ஆனந்தமானது, அற்புதமானது நான் அந்த மருந்தைக் கண்டுகொண்டேன்”
என்று இயேசுநாதரையும் மருந்தெனவே அழைக்கிறார்.
“கடவுள் இல்லமே ஓர் கருணை இல்லமே” பாடலும்.
‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் கிதாரின் பின்னணியில் இளையராஜா இசையமைத்த “தேவன் திருச்சபை மலர்களே; வேதம் ஒலிக்கின்ற மணிகளே” என்ற பாடல் அதி அற்புதமானது. அவர் எனக்கே சொந்தம் என்ற இப்படத்தில் சேர்ந்திசையின் கூறுகளையும் இளையராஜா உள்ளடக்கியிருக்கிறார். அதுபோலத்தான் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தில் இடம் பெற்ற
கடவுளைச் சாட்சியாக வைத்துக் காதலர்கள் பாடும் பாடலில் கூட அற்புதமான கிறித்தவப் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தூது விட்டதுபோல் அன்னை வேளாங்கண்ணி திரைப்படத்தில் ஜெமினி கணேசனும் ஜெயலலிதாவும் தூது விடுகிறார்கள்.
வானமெனும் வீதியிலே
குளிர் வாடையெனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று
கேட்டுச் சொல்லுங்கள்
மாதாவைக் கேட்டுச் சொல்லுங்கள்
என்று பாடுகையில் நாச்சியார் திருமொழியில் வேங்கடவர்க்கு ஆண்டாள் விட்ட தூதுமொழிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்,மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து,என்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே
என்கிறாள் கோதை.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். “தேவனே என்னைப் பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று ஞானஒளியில் சிவாஜி கதறுவதும் தமிழ் மண் சார்ந்த பக்தி இலக்கியத்தின் ஒரு பரிமாணமே.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago