சினிமா ஒரு கிரிக்கெட் கிரவுண்ட்: சூரி பேட்டி

By மகராசன் மோகன்

எப்பவும் பள்ளிக்கூடம் போக பயமா இருக்கும். இன்னைக்குப் பெருமையா இருந்துச்சு!” - மை சுமந்த விரல் காட்டி சூரி போட்ட ஸ்டேட்டஸ், லட்சக் கணக்கில் ரீச்! விஷாலுடன் 'மருது', சிம்புவுடன் 'இது நம்ம ஆளு', சூர்யாவுடன் 'சிங்கம்-3' என சூறாவளி வேகத்தில் சுழன்றாலும், ஜல்லிக்கட்டுக்காகக் குரல் கொடுப்பதில் தொடங்கி வாக்குப் பதிவுக்கு வலியுறுத்துவதுவரை அக்மார்க் சமூக ஆர்வலராகவும் அசத்துகிறார் சூரி!

ஓட்டுப்போட்ட அனுபவம் எப்படி?

விடிஞ்சா கல்யாணம், விடிஞ்சா தீபாவளின்னு எப்படி நம்ம வீட்டு விழாக்களுக்கு நைட்டு முழுக்க தூங்காம அடுத்த நாளுக்காகக் காத்திருப்போமோ, அந்த மாதிரி தேர்தலுக்காக‌ நான் காத்திருந்தேன். எப்படா விடியும்கிற ஆர்வம். காலையிலேயே கிளம்பி எந்தப் பள்ளிக்கூடத்துல ஓட்டுன்னு விசாரிச்சேன். சின்ன வயசுல எங்க அப்பா என்னைய அடிச்சு தரதரன்னு இழுத்துக்கிட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிப் போவாரு. நான் அழுது அடம் பண்ணுவேன். ஒருவழியா தோள்ல தூக்கிப் போட்டுக் கொண்டுவந்து பள்ளிக்கூடத்துல தள்ளுனா, வாத்தியாருங்க 'இந்தக் கோலத்துல இவன் படிக்கவே வேணாம். இவனை வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுங்க'ன்னு சொல்வாங்க. அப்பத்தான் தெரியும், நான் டவுசர் இல்லாம நிற்பேன். இழுத்துட்டு வந்ததுல டவுசர் எங்கே விழுந்தச்சோன்னு தெரியாது... படிக்கிற காலம் வரைக்குமே பள்ளிக்கூடம் பக்கம் போக பயமாத்தான் இருக்கும்.

ஆனா, ஓட்டுப்போட பள்ளிக்கூடம் போனப்ப ரொம்பப் பெருமையா இருந்தச்சு. அதேநேரம் தலைநகர் சென்னையில குறைவான ஓட்டு பதிவானது ரொம்ப வருத்தமா போச்சு. ஒரு நாள் வேலையை விட்டுட்டு, கூலியை விட்டுட்டு மழையைக்கூட பொருட்படுத்தாம கிராமத்து மக்கள் ஓட்டுப் போட்டிருக்காங்க. அவங்க அளவுக்கு படிச்சவங்களும் ஓட்டுப் போட்டிருந்தா நல்ல வாக்குப் பதிவு சாத்தியமாகியிருந்திருக்கும்!

விஷாலுடன் தொடர்ந்து நான்கு படங்கள் பண்ணியிருக்கீங்க. 'மருது' படத்திலும் காம்பினேஷன் களை கட்டுது. நடிகர் சங்கச் செயலாளருடன் எப்படி இந்த அளவு நெருக்கம்?

நடிகர், நடிகர் சங்கச் செயலாளர் என்பதெல்லாம் தாண்டி விஷால் சார் நல்ல மனிதர். ரோட்ல அடிபட்ட ஒரு தெருநாயை கார்ல தூக்கிட்டுப்போய் ஆஸ்பத்திரியில சேர்க்கிற மனுஷனை இந்தக் காலத்தில பார்க்க முடியுமா? நான் பக்கத்தில இருந்து பார்த்திருக்கேன். ஆஸ்பத்திரியில் சேர்த்தது மட்டும் இல்ல, டெய்லி டாக்டருக்கு போன் பண்ணி, 'இப்போ பரவாயில்லையா... என்ன ஊசி போட்டிருக்கீங்க'ன்னு ஒரு நாய்க்காக நலம் விசாரிக்கிற அவரோட நல்ல மனசை நான் என்னன்னு சொல்ல முடியும்? யாருக்கோ பிரச்சினைன்னு ஒதுங்கிறவங்களுக்கு மத்தியில, யாருக்குப் பிரச்சினைன்னாலும் ஓடுற மனுஷன். ஆச்சர்யமா இருக்கு. எப்பவுமே ஒரு படத்தில் ஹீரோவா பண்றவங்க பெரிசா ஸ்கோர் பண்ணத்தான் பார்ப்பாங்க. அவங்களுக்கான வாய்ப்பை விட்டுக்கொடுத்து இன்னொருத்தரைக் கைதூக்கிவிட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனா, விஷால் சார் நம்மள ஆட விட்டுக் கைத்தட்டுற ஆளு. டயலாக், டான்ஸ், ஃபைட் எல்லாத்திலும் நம்மளை இறக்கிவிட்டு எனர்ஜி கொடுக்கிற மனுஷன். அவர் பரபரன்னு ஆவேசமா டயலாக் அடிக்கிற இடத்தில் பினிஷிங் டச் மாதிரி டைமிங்கா ஒரு டயலாக் போடுவேன். டைரக்டர் முத்தையா, ‘அய்யோ அண்ணே வேணாம்'னு பதறுவார். ஆனா, விஷால் சார் ‘சூப்பர்'னு சொல்லித் தட்டிக் கொடுப்பார். கடைத் திறப்பு விழாவுக்கு ஒரு பெரிய மனுசனைக் கூப்பிட்டு ரிப்பன் கட் பண்ணச் சொன்னால், அவர் சட்டுன்னு ஒரு குழந்தை கையில கத்தரிக்கோலைக் கொடுத்து வெட்டச் சொல்லிக் கைத்தட்டுனா எப்படி இருக்கும். விஷால் சார் அந்த மாதிரி. அவர் இடத்தில் நம்மளை நிற்க வைச்சுப் பார்ப்பார். அந்த அளவுக்கு நட்பும் நம்பிக்கையுமான ஆளு. அடுத்து ‘கத்தி சண்டை' படத்திலும் இந்த அன்பு தொடருது!

மருது பக்கா கிராமிய விருந்தா இருக்கும் போலிருக்கே?

நிச்சயமா! மண்ணையும் மக்களையும் ரத்தமும் சதையுமா காட்டுற படம். இன்றைய தலைமுறை இயக்குநர்களில் நேட்டிவிட்டியை இவ்வளவு அழகா ஆத்மார்த்தமா சொல்ற இயக்குநர்னா அது முத்தையா பிரதர்தான். ஈர மண்ணுல இருந்து மரவள்ளிக் கிழங்கைப் புடுங்கிற மாதிரி அவர் கதை சொல்ற விதமும் பந்தபாசங்களை விவரிக்கிற தன்மையும் அப்புடி இருக்கு. ஒரு காமெடியனா மட்டும் இல்லாம, மனசுக்கு ஏற்ற விதமா ‘கொக்கரக்கோ'ங்கிற கேரக்டர்ல எறங்கி விளையாட வைச்சிருக்கார். என் செல்ல மக வெண்ணிலா பிறந்த நாளன்னிக்கு ரிலீஸாகுற மருது, எங்க எல்லாருக்கும் பெரிய விருது!

வடிவேலு இடத்தை நீங்கள் பிடித்துவிட்டதாக மீடியாக்கள் எழுதும் சூழலில் அவருடன் இணைந்து ‘கத்தி சண்டை' படத்தில் நடிக்கிறீங்களே?

அவரோட இடத்தை நான் பிடிச்சா அவர் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட மாட்டாரா? அவர் நியாயமா உழைச்சு சம்பாரிச்ச இடத்தை நான் எப்படிங்க புடிக்க முடியும்? அண்ணனோட இடம் எப்பவும் அண்ணனுக்குத்தான். யாருக்கு எந்த இடம்கிறதை ரசிகர்கள்தான் முடிவு பண்றாங்க.

எனக்குன்னு ஒரு இடத்தை அவங்க கொடுத்திருக்காங்க. அதைப் பத்திரமா பார்த்துக்கிறதுதான் என்னோட வேலை. சினிமாங்கிறது கிரிக்கெட் கிரவுண்ட் மாதிரி... சச்சின், தோனி, கோலின்னு அடிக்கிற ஆட்கள் வேணும்னா மாறுவாங்க. ஆனா, யார் அடிச்சாலும் பந்து சரியா சிக்குனா சிக்ஸுதான்! ‘கத்தி சண்டை' படத்தில் அண்ணனும் நானும் சேர்ந்து நடிச்சா நல்லா இருக்கும்னு இயக்குநர் சுராஜ் சாரும், தயாரிப்பாளர் நந்தகோபால் சாரும் சொன்னாங்க. பொதுவா இயக்குநரும் தயாரிப்பாளரும் விரும்புறப்ப அதை செஞ்சுக்கொடுக்கிறதுதான் என்னோட வேலை. ஒரு படத்துக்கு தாயா தகப்பனா இருக்கிறது அவங்கதான். நமக்குன்னு ஆயிரம் ஆசாபாசம் இருந்தாலும் தயாரிப்பாளரோட கைக்கு அடக்கமா, இயக்குநரோட வாய்க்கு அடக்கமா இருக்கிறதாலதான் நம்ம வண்டி நல்லா ஓடிக்கிட்டு இருக்கு.

சிம்புவுக்குத் துணைன்னாலே சந்தானம்தான். ‘இது நம்ம ஆளு' படத்தில் நீங்க‌ எப்படி?

உண்மையா நீங்க சொன்ன காம்பினேஷன்தான் படத்தில இருந்திருக்கணும். அது ரெகுலரா இருக்கும்னு நினைச்சுக் கொஞ்சம் வேற விதமா சிம்பு சார் பக்கத்தில் என்னைய நிற்க வைச்சுப் பார்த்தார் பாண்டிராஜ் அண்ணன். நின்ன இடத்தில் எல்லாவித சுதந்திரத்தையும் கொடுத்து அழகு பார்த்தார் சிம்பு சார். இதுக்காக பாண்டிராஜ் அண்ணனுக்கும் சிம்பு சாருக்கும் நான் ஆயிரம் தடவை நன்றி சொன்னாலும் பத்தாது. நாம நாலு மணி நேரத்துக்கு முன்னால வந்து போராடி பண்ற சீனை பத்து நிமிசத்துல சிங்கிள் டேக்கில் லட்டு மாதிரி பண்ணிட்டுப் போயிடுவார் சிம்பு பிரதர். பாண்டிராஜ் அண்ணனோட அற்புதமான டயலாக்கும் சிம்பு சாரோட காம்பினேஷனும் ‘இது நம்ம ஆளு'ன்னு என்னைய ஆல் கிளாஸ் ஆடியன்ஸ்கிட்ட கொண்டுபோய் சேர்த்திடும்!

சிவகார்த்திகேயனுடன் நீங்க சேர்ந்தாலே ஹிட். அப்படியிருந்தும் ‘ரெமோ'வில் நீங்க மிஸ். ஏன்?

சிவகார்த்திகேயனுடன் நடிக்க எனக்குக் கசக்குமா என்ன? ‘ரெமோ' கதைக்கு நான் தேவைப் படலை. சிவகார்த்தி கேயனை அடுத்த கட்டத்துக்கு அட்டகாசமா உயர்த்தப்போற படம் ‘ரெமோ’. அதில உள்ள ஒரு சூப்பர் சஸ்பென்ஸ் எனக்குத் தெரியும். அதனால ‘ரெமோ' பார்க்க நான் அவ்வளவு ஆசையா இருக்கேன். அடுத்த படத்துல சிவகார்த்திகேயன் கிட்டயும் இயக்குநர் பாக்யராஜ்கிட்டயும் சண்டை போட்டாச்சும் நான் வாய்ப்பு வாங்கிடுவேன். அடுத்து ராஜா சார் தயாரிப்பில் ‘ரஜினி முருகன்’ டீம் மறுபடியும் இணையிறோம். எப்படா அந்த நாள் அமையும்னு ஆசையா இருக்கேன். சிவகார்த்திகேயன்கூட நடிக்க ஐ எம் ஆல்வேய்ஸ் வெயிட்டிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்