பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படமும் அதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் தமிழ்த் திரைப்பட உலகில் பேரும் புகழும் பெற்றன. அதிலும் 16-வயது தேவி கூந்தல் அலைபாய, ஊஞ்சலில் ஆடிக்கொண்டு ‘சீமையிலிருந்து கோட்டு சூட்டு போட்டு வரும்’ மணாளனை நினைத்துப் பாடும் ‘செந்தூரப் பூவே’ தமிழில் சிறந்த திரைப்படப் பாடல்களைத் தொகுத்தால் முதல் 25 இடத்தில் கட்டாயம் இடம்பெறும்.
ஆனால், செந்தூரப் பூ என்றொரு பூ கிடையாது. தேவி உட்கார்ந்திருக்கும் மரத்தில் குங்குமும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் காணப்படும் பூவைத்தான் பாடலாசிரியர் கங்கை அமரன் குத்துமதிப்பாக ‘செந்தூரப் பூவே’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். பாடலில் ஒரு கட்டத்தில் அந்த மரத்தின் கிளைகளில் தொங்கியபடியும் பாடுகிறார்.
அந்த மரத்தின் பெயர் முருக்க மரம். புரசு என்றும் குறிப்பிடப்படும் இம்மரம் குறிஞ்சிப் பாட்டில் பலாசம் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் புரசு, பொரசு, புரசை போன்ற பெயர்களைப் பெற்றது. புரசு மரங்கள் செழித்து வளர்ந்திருந்ததால் சென்னையில் உள்ள சிற்றூர் புரசைவாக்கம் என்ற பெயர் பெற்றது. இங்குள்ள கங்காதீஸ்வரர் கோயிலின் தல விருட்சம் புரசு மரம்தான். ஆங்கிலத்தில் இதை Flame of Forest என்று அழைப்பார்கள். இந்த மரம் பூத்துக் குலுங்கும் காலங்களில் வனம் முழுவதும் தீப்பற்றிச் செந்தழலால் சூழப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதால் அப்பெயர். பூவின் வடிவம் கிளியின் அலகையொத்துக் காணப்படும்.
பருவத்தின் வாசலைக் கடந்து நிற்கும் கதாநாயகி செந்தூரப் பூவையும் சில்லெனக் குளிறும் காற்றையும் ‘என் மன்னன் எங்கே’ என்று கேட்டுத் தூது விடுகிறாள்.
தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே..
என்னை இழுக்குது அந்த நினைவதுவே..
வண்ணப் பூவே… தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ..
தமிழ் இலக்கியத்தில் தூது இலக்கியத்துக்குச் சிறப்பிடம் உண்டு. நாகணவாய் (மைனா), நாரை, மேகம், வண்டு, அன்னம், மயில், கிளி, தென்றல், விறலி என ஏராளமான தூதுவர்கள் காதலுக்காகக் களமிறங்குகிறார்கள்.
பக்தி இலக்கியத்தில் திருமங்கை யாழ்வார் செம்போத்து, பல்லி, காகம், ஏன் கோழியைக்கூடத் தூது விடுகிறார்.
நம்முடைய கதாநாயகி தென்றலைத் தூது விட்டு சேதிக்காகக் காத்திருக்கிறாள். அது வரும் வரையில் கண்களை மூடிக் காதலனின் தோற்றத்தை உருவகம் செய்து இன்பக் கனவினில் துய்க்கிறாள். கன்னிப் பருவத்தில் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது காதல். அந்தச் சுகந்த நினைவுகள் அவளை இழுக்கின்றன. ‘என்னை இழுக்குது அந்த நினைவதுவே’ என்ற வரிகளைத் தாபம் பொங்கப் பாடுகிறார் எஸ். ஜானகி. அதற்கு தேவியின் முக பாவனைகளும் கச்சிதம். பூவையும் தென்றலையும் மீண்டும் ஒருமுறை அழைத்து, தன்னைத் தேடி சுகம் வருமா என்று வினவுகிறாள்.
புல்லாங்குழல் குயில் போல் பாடும் இடத்திலிருந்து, “நீலக் கருங்குயிலே… தென்னஞ் சோலைக் குருவிகளே” என்று சரணம் தொடங்குகிறது.
மணலில் தடம் பதித்து பின்னர் அதில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூ கொடிகளில் புரள்கிறாள். கடற்கரை மணலில் ஊதா நிறத்தில் பூக்கும் அடுப்பம் பூவும் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றிருக்கிறது.
அடுத்து,
‘கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழி எங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே… தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ’
என்று கேட்கிறாள்.
மயிலையும் பாடித் திரியும் பறவை களையும் அழைத்து மண மாலை வரும் நாள் குறித்துக் கேட்கிறாள்.
பராங்குச நாயகியாகத் தன்னை வரித்துக்கொள்ளும் நம்மாழ்வார்,
‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னிலப் புள்ளினங்காள்’
என்று பறவைகளை அழைத்து ‘என் நிலை மையுரத்தே’ என்று பறவைகளைத் தூது விடுகிறார். மணவாளன் வரும் நாளில் சாலையெங்கும் பூவைத் தூவச் சொல்கிறாள் ‘16 வயதினிலே’ நாயகி.
கண்ணனுக்காகத் தூது விட்ட ஆண்டாள், ‘வாரணம் ஆயிரம் வலம் சூழ’ அந்த அரங்கனை மணந்துகொண்டாள். பராங்குசநாயகியும் பரகாலநாயகியும் கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையவர்களாகி அவன் தாள் அடைந்தனர். ஆனால், மயிலையும் குயிலையும் தூது விட்ட நம்முடைய கதாநாயகி மயிலு, சீமையிலிருந்து வந்தவனை நம்பி ஏமாறுகையில் மனம் வலிக்கிறது. அவள் மனதை மட்டுமே விரும்பும் சப்பாணி என்ற கோபாலகிருஷ்ணனுக்காக அவள் காத்திருக்கிறாள்.
தொடர்புக்கு: bagwathi@gmail.com
படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago