சினிமா ரசனை 42: காட் ஃபாதர் திரைப்படத்தை இயக்க மறுத்தவர்!

By கருந்தேள் ராஜேஷ்

ஹாலிவுட்டில் வெஸ்டர்ன்கள் என்ற வகையைச் சேர்ந்த படங்கள் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே பிரபலம். இருந்தாலும், ‘வெஸ்டர்ன்’ என்று சொன்னதுமே நம்மில் பலருக்கு நினைவு வரும் படங்களான ‘அ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’, ‘ஃபார் அ ஃப்யூ டாலர்ஸ் மோர்’, ‘குட், பேட் அண்ட் த அக்லி’ முதலிய வெஸ்டர்ன்களை எடுத்த செர்ஜியோ லியோனி (லியோன் அல்ல). இவரைப் பற்றியே இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

செர்ஜியோ லியோனியின் தந்தை வின்சென்ஸோ லியோனி ஒரு பிரபல இயக்குநர். செர்ஜியோ லியோனியின் தாயும் பிரபல நடிகைதான். இதையெல்லாம்விட, உலகின் தலைசிறந்த திரையிசையமைப்பாளரான என்னியோ மாரிகோனி, செர்ஜியோ லியோனின் பள்ளித் தோழர்.

உதவி இயக்குநர்

செர்ஜியோ லியோனி 19-வது வயதில் புகழ்பெற்ற சினிமா மேதை விட்டோரியோ டி சிகாவின் ‘பைசைக்கிள் தீவ்ஸ்’படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். இதன் பிறகு புகழ்பெற்ற படங்களாகிய ‘கோ வாடிஸ்’(Quo Vadis) மற்றும் ‘பென்-ஹர்’ படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றி, மிக இளம் வயதிலேயே சினிமா அனுபவத்தைப் பெற்றார்.

தொடக்கத்திலிருந்து பிரம்மாண்டமான சரித்திரப் படங்களிலேயே பணியாற்றியதால், அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ‘த லாஸ்ட் டேஸ் ஆஃப் பாம்பேய்’ (The last days of Pompeii) படத்தின் இயக்குநர் மரியோ போன்னார்ட் உடல்நலக் குறைவால் விலகியபோது, அப்படத்தை வெற்றிகரமாக இயக்க செர்ஜியோ லியோனியால் முடிந்தது. இதன் பிறகு, ‘த கலாசஸ் ஆஃப் ரோட்ஸ்’ (The Colossus of Rhodes) என்ற இன்னொரு பிரம்மாண்ட சரித்திரப் படத்தை முதன்முறையாக முழுவதுமாக இயக்கினார். இப்படத்துக்கு மூன்று வருடங்கள் கழித்து 1964-ல் செர்ஜியோ லியோனி இயக்கிய படமே ‘அ ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’. ஹாலிவுட்டில் அப்போதெல்லாம் வெஸ்டர்ன்கள் மிகப் பிரபலம். ஜான் ஃபோர்ட் (ஸ்டேஜ்கோச், த சர்ச்சர்ஸ்), ஃப்ரெட் ஸின்னமேன் (ஹை நூன்), ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் (ஷேன்), ஹோவார்ட் ஹாக்ஸ் (ரியோ பிரேவோ) முதலிய இயக்குநர்களால் மறக்க முடியாத படங்கள் எடுக்கப்பட்டிருந்த காலகட்டம். ஆனால், ஹாலிவுட்டில் வெஸ்டர்ன் படங்களை இயக்கும் செலவு எக்கச்சக்கம். இதனால் இத்தாலிய மொழியிலேயே மிகக் குறைந்த செலவில் வெஸ்டர்ன்கள் எடுக்க செர்ஜியோ லியோனி முடிவெடுத்தார்.

அழுக்குக் கதாநாயகர்கள்

‘யோஜிம்போ’என்ற பெயரில் அகிரா குரஸவா எடுத்திருந்த படத்தை அப்படியே தழுவித்தான் ‘ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’ எடுக்கப்பட்டது. ஹாலிவுட் படங்களிலிருந்து தனது படங்களை மாறுபட்டுக் காண்பிக்க வேண்டும் என்று லியோனி நினைத்ததால், அவரது நாயகர்கள் குளிக்காமல், தாடியும் மீசையுமாக, அழுக்கானவர்களாக, ஆன்டி-ஹீரோ என்றே சொல்லத்தக்க நபர்களாக இருந்தனர் (ஹாலிவுட் வெஸ்டர்ன் ஹீரோக்கள் இதற்கு நேர் எதிர். பளிச்சென்று இருப்பார்கள்). இப்படத்தில் நடிக்க, அப்போது அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலம் ஆகியிருந்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற இளைஞர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்தாலியன், ஆங்கிலம் ஆகிய மொழிகள் இப்படத்தில் உபயோகிக்கப்பட்டன.

படம் வெளியாகிப் பெருவெற்றி அடைந்தது. உடனடியாக அடுத்தடுத்த வருடங்களில் ‘ஃபார் அ ஃப்யூ டாலர்ஸ் மோர்’(1965) மற்றும் ‘த குட், த பேட் அண்ட் த அக்லி’(1966) ஆகிய படங்களை லியோனி இயக்கினார். இந்த மூன்று படங்களிலும் பெயரற்ற கௌபாய் வேடத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்தார். மூன்று படங்களிலும் முக்கியமான வேடங்களில் அப்போதைய வெஸ்டர்ன்களின் இன்றியமையாத நடிகரான லீ வான் க்ளீஃப் நடித்தார். மூன்று படங்களுக்கும் செர்ஜியோ லியோனியின் பள்ளித் தோழர் என்னியோ மாரிகோனி பிரம்மாண்டமான இசையை அமைத்தார். இவற்றின் ட்யூன்கள் இன்றுவரை பிரபலம். க்வெண்டின் டாரண்டினோ இப்படங்களிலிருந்து எடுக்கப்பட்ட இசைக் குறிப்புகளை இன்றும் அவரது படங்களில் பயன்படுத்துகிறார். இப்படங்கள் ஹாலிவுட்டிலும் வெளியிடப்பட்டன. உலகெங்கும் பெருவெற்றி அடைந்தன.

ஹாலிவுட்டில் சாதனை

இதன் பின்னர் முதன்முறையாக ஹாலிவுட் சென்று செர்ஜியோ லியோனி இயக்கிய படம்தான் ‘ஒன்ஸ் அபான் அ டைம் இன் த வெஸ்ட்’(Once Upon a Time in the West). வருடம் 1967. இப்படத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடிக்கவில்லை. டாலர் ட்ரையாலஜி என்று அழைக்கப்பட்ட முதல் மூன்று வெஸ்டர்ன்களில் நடித்த பின்னர் அவர் வேறு படங்களில் பிரபலமாகிவிட்ட காலகட்டம் அது. அவருக்குப் பதில், படம் முழுக்க மவுத் ஆர்கன் வாசித்துக்கொண்டே வரும் நாயகன் வேடத்தில் சார்லஸ் ப்ரான்ஸன் நாயகனாக நடித்தார். புகழ்பெற்ற நடிகர் ஹென்றி ஃபோண்டா வில்லன். இன்றுவரை செர்ஜியோ லியோனி எடுத்த மிகச் சிறந்த வெஸ்டர்ன் என்று இப்படம் புகழப்படுகிறது. இப்படத்துக்குப் பிறகு லியோனி எடுத்த ‘டக், யூ சக்கர்’ (Duck, you sucker!, இது ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டைனமைட் என்ற பெயரில் பிரபலமாகியது) படமும் அருமையாக இருக்கும். ஜேம்ஸ் கோபர்ன் மற்றும் ராட் ஸ்டெய்ஜர் நடித்த படம். இப்படத்தைப் பலரும் தவறவிட்டிருக்கக்கூடும்.

இதன் பின் கிட்டத்தட்டப் பத்து வருடங்கள் ஒரு திரைப்படத்தை எடுக்க லியோனி செலவிட்டார். அப்போது ‘காட்ஃபாதர்’படத்தை இயக்க வந்த வாய்ப்பை நிர்த்தாட்சிண்யமாக நிராகரித்தார். இன்றுவரை செர்ஜியோ லியோனியின் ஒட்டுமொத்தப் படங்களிலும் பிரம்மாண்டமான, அட்டகாசமான, உருக்கமான, இயல்பான படமாக அமைந்தது, 1984-ல் வெளியான ‘ஒன்ஸ் அபான் அ டைம் இன் அமெரிக்கா’. கிட்டத்தட்ட, காட்ஃபாதர் போன்ற கதைக்களம். ஆனால், அதைவிடவும் இயல்பான படம். ராபர்ட் டி நீரோ நாயகனாக நடித்தார். இன்றுவரை ஹாலிவுட்டில் வெளியான கேங்ஸ்டர் படங்களில் இப்படத்துக்குக் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு. ‘நாயகன்’படத்துக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஓடக்கூடிய இப்படம், வார்னர் ப்ரதர்ஸால் நீளம் கருதிக் கண்டபடி வெட்டப்பட்டு, இரண்டு மணி நேரப் படமாக வெளியாகியது. இதனால் அப்போது தோல்வியும் அடைந்தது. ஆனால் பின்னர் முழுநீளப் படம் வீடியோவிலும் டிவிடிக்களிலும் வெளியாகி உலகப் புகழ் அடைந்தது.

பின்பற்றப்படும் பாணி

இந்தப் படம் வெளிவந்து ஐந்து வருடங்கள் கழித்து, தனது அறுபதாவது வயதில், மாரடைப்பால் செர்ஜியோ லியோனி காலமானார். இன்றுவரை செர்ஜியோ லியோனியின் படமெடுக்கும் முறையை அப்படியே பின்பற்றிப் படம் எடுப்பவர்கள் பலர் உண்டு. அவரது பிரம்மாண்டமான டைட் க்ளோஸப் காட்சிகள், வசனமே இல்லாமல் படத்தின் ஆரம்பக் காட்சிகளைப் பல நிமிடங்கள் நகர்த்துவது, அட்டகாசமான பின்னணி இசையுடன் படத்தின் முக்கியக் காட்சிகளை எடுப்பது, மிக வித்தியாசமான ஆன்டி-ஹீரோக்கள், வில்லன்கள், பிரம்மாண்டமான க்ளைமேக்ஸ்கள் ஆகியவை க்வெண்டின் டாரண்டினோ போன்ற இயக்குநர்களால் இன்றும் பின்பற்றப்படுகின்றன. எத்தனையோ இயக்குநர்கள் இருந்தபோதிலும், தனது வாழ்க்கையில் மொத்தம் எட்டே படங்களை இயக்கிய செர்ஜியோ லியோனி உலகம் முழுக்க இன்றும் கொண்டாடப்படுவதற்கு அவரது வித்தியாசமான பாணியே காரணம். ஒரே வெஸ்டர்னில் உலகம் முழுக்கப் பிரபலமாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் ஆயிற்றே?

தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்