இயக்குநரின் குரல்: கேள்வி என்னுடையது... பதில் உங்களுடையது! - ராஜு முருகன்

By கா.இசக்கி முத்து

பார்வையற்றவர்களின் வாழ்க்கையிலும் சந்தோஷம் அடங்கியிருக்கிறது என்று ‘குக்கூ' படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் ராஜுமுருகன், சமகால அரசியல் நையாண்டியுடன் களம் இறங்குகிறார். ‘ஜோக்கர்' படத்தின் படத்தொகுப்புப் பணிகளில் இருந்தவரிடம் பேசியதிலிருந்து…

‘ஜோக்கர்' படத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?

பப்பிரெட்டிப்பட்டி என்கிற ஊரில் இருக்கும் மன்னர் மன்னன் என்பவன்தான் இப்படத்தின் பிரதான பாத்திரம். அவன் ஒரு ஜோக்கர். படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை காமெடி இருக்கும். முடியும் தறுவாயில் ஒரு கேள்வியை வைக்கிறான். அந்த கேள்விக்கான விடை படத்தின் ஆரம்பத்தில் வரும் காமெடியில் இருக்கிறது. நான் பதில் சொல்லவில்லை. கேள்வியை மட்டுமே கேட்டிருக்கிறேன்.

பதில் சொல்ல பயமா?

பயம் எல்லாம் இல்லை. அந்தக் கேள்வியில்தான் பதிலும் அடங்கியிருக்கிறது. பதிலை நான் சொன்னால் சரியாக இருக்காது. கேள்வியை உங்களிடம் கேட்டுவிட்டேன் என்றால் பதிலை நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் சொல்லக் கூடாது. படைப்பாளியாகக் கேள்வியை மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் அதற்கான பதில் இருக்கிறது.

அரசியல் பின்புலத்தில் பல படங்கள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து இந்த ‘ஜோக்கர்' எந்த வகையில் மாறுபடும்?

படங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. சிலர் கமர்ஷியலாக எடுப்பார்கள். நான் ரொம்ப யதார்த்தமாக எடுத்திருக்கிறேன். ஒரே நாளில் அரசியலில் மாற்றத்தையெல்லாம் கொண்டுவந்துவிட முடியாது. ஒவ்வொரு அரசியலுக்குப் பின்னாலும் மிகப் பெரிய போராட்டம் இருக்கிறது. அதை நீங்கள் திரையில் பார்க்க முடியாது.

வறுமை பற்றி தீவிரமாக இப்படத்தில் பேசவில்லை. ஏனென்றால் வறுமை என்பதே இல்லாதது போல ஒரு மாயை இங்கே ஏற்பட்டிருக்கிறது. வறுமை என்பது வெவ்வேறு வடிவங்களில் தற்போது தீவிரமாக இருக்கிறது. இன்றைக்குப் பலர் கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வீட்டில் கக்கூஸ் இல்லை என்னும் ஒரு முரண்பாடு இருக்கிறது. அந்த முரண்பாட்டை இந்தப் படம் பேசும்.

படம் பேசும் அரசியல் என்பது மேல்மட்ட அளவில் இருக்கும் அதிகாரத்தைப் பற்றியது அல்ல, மக்களைப் பற்றியது. அரசியல் படம் என்றாலே அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவது என்று நினைக்கிறார்கள். அப்படிக் கிடையவே கிடையாது. மக்கள்தான் அரசியல். முழுக்க மக்களைப் பற்றி பேசுகிற ஒரு அரசியல் படம்.

‘குக்கூ' நீங்கள் சந்தித்த மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய கதை. ‘ஜோக்கர்' அந்த வகையில் எழுதியதா?

‘ஜோக்கர்' நிறைய உண்மைச் சம்பவங்களைக் கோத்து எழுதிய கதை. எழுத்தாளனாக நிறைய பேரை சந்தித்துப் பேசும்போது கிடைத்த சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம். இக்கதை எழுதும் முன்பு 6 மாதம் இந்தியா முழுவதும் சுற்றி வந்தேன். போகிற இடங்களில் சந்தித்த அனுபவங்கள், விஷயங்கள்தான் ‘ஜோக்கர்'. இப்படத்தில் வரும் பாத்திரங்களை எல்லாம் நீங்கள் எங்கேயாவது பார்த்திருக்கலாம்.

பாடலும் சமகால அரசியலைப் பற்றியதாக இருக்குமா?

அதிகாரம் என்பது பல மட்டங்களில் இருக்கிறது. ஒரு கட்சி, ஒரு தலைவர் என்று இல்லாமல் யாரெல்லாம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களோ அவர்களுக்காக ஒரு பாடல் இப்படத்தில் இருக்கிறது.

என்னங்க சார் உங்க சட்டம்

என்னங்க சார் உங்க திட்டம்

கேள்வி கேட்க ஆளில்லாமல் போடுறீங்க கொட்டம்

100 கோடி மனிதருக்கு யார் யாரோ தலைவரு

ஒட்டு வாங்க போற நீங்க ஊழலோட டீலரு

ஆண்ட பரம்பரை கைநாட்டு

ஆட்டி படைக்குது கார்ப்பரேட்டு

நாட்டை விக்கிற மந்திரிமாருக்கு

நல்லா வைக்கிறீங்க சல்யூட்டு

இப்படி யுகபாரதி அண்ணன் என்னுடைய படத்தின் அடிநாதத்தை ஒரே பாடலில் கொண்டுவந்திருக்கிறார். படத்தின் முக்கியமான பகுதியில் இப்பாடல் வரும். அந்தப் பாடல் முழுக்க சமகால சமூகத்தின் போராட்டங்களைக் காட்டியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் பாடல்களைப் புதிய பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். வழக்கமான சினிமா பாடல்கள் இசைபோல் அல்லாமல் நம்முடைய நாட்டுப்புற இசையும், இந்திய இசையையும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பாடல்களைப் பாடியிருக்கும் அனைவருமே சினிமாவே என்னவென்று தெரியாத நாட்டுப்புறப் பாடகர்கள்.

'குக்கூ' படத்திற்குப் பிறகு ஏன் இடைவெளி?

அடுத்து அடுத்து படம் பண்ண வேண்டும் என்ற எந்த ஒரு நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கிடையாது. 'குக்கூ' படத்துக்குப் பிறகு இன்னொரு படம் பண்ணலாம் என்று பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடந்தது. எனக்கு எந்தக் கதையையும் உடனே பண்ண வேண்டும் என்று தோன்றவில்லை. இந்தக் கதை தோன்றியவுடன் உடனே பண்ண வேண்டும் என்று ரொம்ப தீவிரமாக இறங்கினேன்.

பத்திரிகையாளர், எழுத்தாளர், இயக்குநர். இந்த மூன்றில் எது உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானது?

பல வேலைகளைப் பார்த்துவிட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். டி.வி.எஸ்.ஸில் கரி அள்ளியது, டீத் தூள் பாக்கெட் போட்டது, கரடி பொம்மை விற்றது, ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்த்தது இப்படி நிறைய வேலைகள் பார்த்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் பத்திரிகையாளர், எழுத்தாளர் இப்போது இயக்குநர். எல்லாமே வேலைதான். எந்தப் பணியை எடுத்தாலும் அதில் கொஞ்சம் ரசித்து வேலை பார்க்க வேண்டும் என நினைப்பேன். கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்வேன்.

அப்படிப் பார்த்தால் கரி அள்ளும் வேலை பார்க்கும்போதுதான் சந்தோஷமாக இருந்தேன். போராட்ட கோஷங்கள் போட்டுக்கொண்டு வாழ்க்கையைப் பற்றி எந்த பயமும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு எல்லாமே வேலையாக இருந்தது. அதில் என்ன சந்தோஷம், துக்கம் எல்லாம்... எல்லாமே ஒன்றுதான். எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் இருந்தது இயக்குநருக்கு ஒரு உதவியாக இருந்தது. நாம் நிறைய ஆட்களைப் பார்ப்போம், பேசுவோம் என்பது கூடுதலாக உதவியது. பத்திரிகை, எழுத்து, சினிமா மூன்றும் ஒன்றுதான். ஆனால், வடிவங்கள்தான் வேறு.

இதுவரை நீங்கள் படித்த கதைகள், இலக்கியங்களிலிருந்து ஏதாவது ஒன்றைப் படமாக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறதா?

நிறைய இருக்கிறது. வண்ணநிலவன் எழுதிய 'கடல்புரத்தில்', அசோகமித்திரன் எழுதிய '18வது அட்சக்கோடு', டி.செல்வராஜ் எழுதிய 'தோல்', பாட்டாளி எழுதிய 'கீழைத் தீ' நாவலையும் அ.முத்துலிங்கத்தின் சில கதைகளையும் படமாகப் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்