ரஜினி படத்தின் தலைப்புக்கு சக்தி இருக்கிறது! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி

By கா.இசக்கி முத்து

“கதையை முன்னிறுத்தி ஒரு படம் பண்ணலாம் எனத் தோன்றியது. பார்ப்பவர்களின் உணர்வுகளை ஈர்க்கும் வகையில் படம் அமைய வேண்டும் என நினைத்துத் தேர்வு செய்த கதைதான் ‘மனிதன்' ” என்று மிகவும் சாந்தமாகத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். தேர்தல் அரசியலின் பரபரப்பில் தமிழகம் அமளிதுமளியாகிக் கிடக்க, அவருடைய பேச்சில் அது பற்றிய எந்த அறிகுறியும் தென்படவில்லை.

‘மனிதன்' ட்ரெய்லரைப் பார்த்தால் உங்கள் பாணிப் படம் மாதிரி தெரியவில்லையே?

‘மனிதன்' ஒரு நீதிமன்றத்திற்குள் நடக்கும் கதை. வெளிநாட்டில் பாட்டு, நடனம், ஹீரோயிசம், சண்டைக் காட்சி இப்படி எதுவுமே இப்படத்தில் கிடையாது. சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பொள்ளாச்சியிலிருந்து சென்னை வரும் ஒரு சாமனிய இளைஞன், வழக்கறிஞராக இருப்பவன். இந்தியாவில் பிரபலமான முன்னணி வழக்கறிஞர் ஆதிசேஷனை எதிர்த்து எப்படிப் போராடி ஜெயித்தான் என்பதுதான் திரைக்கதை. எனக்கு இது முழுக்க புதிய களம். ரசிகர்களுக்குப் புதுமையான ஒரு கதை. பிரகாஷ்ராஜ், ராதாரவி என இரண்டு மூத்த நடிகர்களுக்கு நடுவில் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. இரண்டு பேரும் கொடுத்த ஊக்குவிப்பையும் மறக்க மாட்டேன்.

நீதிமன்றப் பின்புலத்தில் கதை என்கிறீர்கள். அதில் எந்த விஷயம் சுவாரசியப்படுத்தும்?

அஜயன் பாலாவின் வசனங்கள்தான் இப்படத்துக்குப் பெரிய பக்க பலமாக இருக்கும். விவேக் சாரின் காமெடி இருக்கும். இரண்டாம் பாதியில்தான் நீதிமன்றக் காட்சிகள் அதிகமாக இருக்கும். முதல் பாதியில் காதல், பாடல்கள் எல்லாம் இருக்கும். நீதிமன்றக் காட்சிகள் கண்டிப்பாக போர் அடிக்காது. சாதாரண ஒரு வக்கீல் இளைஞன் சென்னைக்கு வந்து எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்பதைக் கொஞ்சம் உணர்ச்சிகரமாகவும் ஜாலியாகவும் சொல்லியிருக்கிறோம். படம் முடிவடையும்போது அனைவருக்குமே ஒரு சின்ன சந்தோஷம் இருக்கும்.

நீங்களும் ரஜினி படங்களின் தலைப்பு வைக்கும் படலத்தில் இறங்கிவிட்டீர்களே…

முதலில் ‘பராசக்தி' என்றுதான் தலைப்பு வைத்தோம். அப்படத்தில் கலைஞர் வசனங்களை சிவாஜி சார் பேசியிருப்பது ரொம்பவும் பிரபலம். அப்படத்தோடு ஒப்பீடு செய்வார்கள் என்றவுடன் ‘சக்தி' என வைக்கலாம் என்று பேசினோம். விவேக் சார்தான் ‘மனிதன்' எப்படியிருக்கிறது என்றார். ஒரு சாதாரண மனிதன், நல்ல மனிதனாக எப்படி மாறுகிறான் எனக் கதைக்களம் இருப்பதால் ‘மனிதன்' சரியாக இருக்கும் என்றார். ரஜினி சார் படத்தின் தலைப்பு என்பதால் மக்களிடையே உடனடியாக போய்ச் சேரும். ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம் சாருக்கும் போன் செய்து ‘மனிதன்' தலைப்பு வேண்டும் என்றவுடன் ‘தாராளமாக’ என்று அனுமதி கொடுத்துவிட்டார்.

‘கெத்து' போதிய வரவேற்பு பெறாததற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

‘கெத்து' வெளியிட்ட தேதி தவறு. தப்பான ஒரு படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஒளிப்பதிவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கொஞ்சம் கதையில் காட்டியிருக்கலாம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு படமும் கற்றுக்கொள்கிற ஒரு விஷயம்தானே. ‘கெத்து' படத்தோடு நான்கு படங்கள் வந்தன. அதில்கூட வசூலில் இரண்டாம் இடத்துக்கு வந்தோம். ‘கெத்து' படத்துக்கு என்ன செலவு பண்ணினேன், எவ்வளவு வசூல் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, அதைத் தோல்விப் படம் என்று சொல்ல மாட்டேன்.

‘கெத்து' வெளியான சமயத்தில் விமர்சகர்களைக் கடுமையாகச் சாடியிருந்தீர்களே…

நான் அரசியல் பின்னணியில் இருந்து வருவதால் என் படங்களுக்கு அதிகமான விமர்சனம் இருக்கிறது. என் படங்களை விமர்சனம் பண்ணுவதைத் தவறு என்று கூறவில்லை. இது இன்னும் நன்றாகப் பண்ணலாம், இதைத் தப்பாக பண்ணியிருக்கிறீர்கள் என்று நல்ல எண்ணத்தில் கூறும் விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். சில விமர்சகர்கள் ‘அதான் வரலையே, அப்புறம் ஏன் பண்றீங்க?’ என்று காயப்படுத்துவது போல விமர்சனம் பண்ணுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படி விமர்சனம் பண்ணியவர்களுக்காக நான் காட்டிய உண்மையான கோபம் அது.

ஏன் அரசியலை விட்டு ஒதுங்கியே இருக்கிறீர்கள், பயமா?

பயமெல்லாம் இல்லை. முதலில் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? கருணாநிதி பேரன், ஸ்டாலின் பையன் என்றவுடன் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சிக்காக உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய இடம் கிடைக்கிறது, சந்தோஷப்படுகிறேன். எனது தொழில் சினிமா அவ்வளவுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்