‘புஷ்பா’ நான் பண்ண வேண்டிய படம்!: ஆர்.ரத்னவேலு பேட்டி

By செய்திப்பிரிவு

சினிமாவில் தொடர்ந்து நீடிப்பதே சாதனைதான்! அந்த வகையில், 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு. பாலாவின் ‘சேது’, ‘நந்தா’வில் தொடங்கி, கவுதம் மேனனின், ‘வாரணம் ஆயிரம்’, ஷங்கர் - ரஜினி கூட்டணியில் உருவான ‘எந்திரன்’ வரை நீளும் அவர் பணியாற்றிய படங்களின் பட்டியலில் லேட்டஸ்ட் ரிலீஸ் ‘எதற்கும் துணிந்தவன்’. அவருடன் உரையாடியதிலிருந்து...

சில வருடங்களாகத் தமிழ் சினிமாவுல உங்களப் பார்க்க முடியலையே..

ஆமா. தெலுங்குப் பட வாய்ப்புகள் வந்தன. ஒரு படம் முடிச்சுட்டு, அடுத்தப் படம் தமிழுக்கு வந்திடலாம்னு பார்த்தா, அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களா வரத் தொடங்கிடுச்சு. மகேஷ்பாபுவோட ‘நேனொக்கடினே’, ‘பிரமோத்சவம்’, சிரஞ்சீவியோட ‘கைதி நம்பர் 150’, ‘சையி ரா நரசிம்ம ரெட்டி’, ராம் சரணோட ‘ரங்கஸ்தலம்’, அப்புறம் ‘சரிலேரு நேக்கெவரு’ன்னு எல்லாமே பிரம்மாண்டப் படங்கள். அதனால அங்கேயே தொடர வேண்டியதாப் போச்சு.

இப்ப ‘எதற்கும் துணிந்தவன்’ல எப்படி?

‘இந்தியன் 2’ பண்ணறதுக்காக ஷங்கர் சார் கூப்பிட்டார். உற்சாகமாக இருந்தது. இப்போதைய மாடர்ன் ஜெனரேஷன்ல இந்தியன் தாத்தா வந்தா எப்படியிருக்கும்னு கேட்கும்போதே மிரட்டலா இருந்தது. அதுக்காக வந்தேன். அந்தப் படம் தள்ளிப்போனதால, நடிகர் சூர்யா கூப்பிட்டார். அவரும் நானும் நண்பர்கள். ‘பாண்டிராஜ் டைரக் ஷன்ல படம் பண்றேன். கதை கேளுங்க, எனக்காக பண்ணணும்’னு சொன்னார். கதை கேட்டேன். பிடிச்சிருந்தது. அப்படித்தான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன்.

இந்தப் படத்துல வில்லனுக்கு மட்டும் வித்தியாசமான டோன் கொடுத்திருக்கீங்களே?

படம் பூராவுமே ஒரு மூட் லைட்டிங் இருக்கும். சூர்யா வர்ற இடங்கள் எல்லாம் பாசிட்டிவான லைட்டிங் செட் பண்ணினோம். வில்லன், செய்ற வேலைகள் மோசமாக இருக்கிறதால அவருக்கு வேற கலர் டோன் கொடுத்துப் பண்ணியிருக்கேன். ஆக் ஷன் காட்சிகள்ல, தெலுங்குல மகேஷ்பாபு, சிரஞ்சீவிக்கு பண்ணின மாதிரி லைட்டிங், கலர் செட் பண்ணி ஷூட் பண்ணினோம். ஹீரோயினுக்கு இன்னும் பளிச்சினு லைட்டிங் வச்சிருப்போம். ட்ரோன் ஷாட், லாங் ஷாட் எடுத்துக் காண்பிக்கிறதை விட, கதையைப் புரிஞ்சு அதுக்காக, இதுபோல் லைட்டிங், ஷாட்களை வச்சாதான் படத்துக்கு பலமா இருக்கும்.

தெலுங்கு இயக்குநர் சுகுமார் உங்கள் நண்பர். வசூல் சாதனை புரிந்த ‘புஷ்பா’ படத்தை எப்படி மிஸ் செய்தீர்கள்?

உண்மைதான். சுகுமார், இயக்குநரா அறிமுகமான ‘ஆர்யா’ படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு பண்ணினேன். பிறகு ‘ஜகடம்’, ‘நேனொக்கடினே’, ‘ரங்கஸ்தலம்’னு தொடர்ந்து பண்ணினேன். அவர் 17 வருட நண்பர். நான், தமிழுக்கு வந்து 8 வருஷம் ஆச்சேன்னு, ‘இந்தியன் 2’ படம் பண்ண வந்தேன். அந்த நேரத்துல அவர் ‘புஷ்பா’வுக்கான வேலையில இருந்தார். அதனால பண்ண முடியலை. ஆனா, அது நான் பண்ண வேண்டிய படம்.

சுகுமார் கூட, ‘உன்னை மிஸ் பண்றேன்’னு சொன்னார். பேட்டிகள்ல சொல்லியிருக்கார். நான் ஒளிப்பதிவு பண்ணியிருந்தா வேற மாதிரி இருந்திருக்கும். அவ்வளவுதான். அதைத் தாண்டி வருத்தப்பட்டு ஏதும் ஆகப் போறதில்லையே?

பொதுவாக, தமிழ் ஒளிப்பதிவாளர்கள், பாலிவுட்டில் பணிபுரியத்தான் அதிக ஆர்வம் காட்டுவாங்க...

எனக்கு என்னமோ, தெலுங்கு சினிமால ஒர்க் பண்றது பிடிச்சிருக்கு. அதுக்கு, அங்க தொடர்ந்து கிடைச்ச படங்களும் காரணமாக இருக்கலாம். தமிழ்ல இருந்து நிறைய பேர் பாலிவுட்ல பண்ணியிருக்காங்க. இப்பவும் பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு தெலுங்கு சினிமா சவுகரியமாக இருக்கு. அதுக்குத் தனிப்பட்ட காரணம்னு ஏதும் இல்லை.

டிஜிட்டல் வந்ததுக்குப் பிறகு ஒளிப்பதிவு எளிதாகிவிட்டதாகச் சொல்றாங்களே?

அப்படி சொல்ல முடியாது. டிஜிட்டல்ல, குறைவான வெளிச்சத்துலகூட படம் எடுக்கலாம். ஒரு டார்ச்லைட் வெளிச்சத்துல கூட எடுக்க முடியும். அதை எப்படி எடுக்கலாம்னு தெரியணுமில்ல. அதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டா இன்னும் சிறப்பாக இருக்கும். நான் என் படங்கள்ல பரிசோதனை முயற்சிகள் செய்துட்டு இருப்பேன். ‘எந்திரன்’ல முதன்முறையா இன்டலிஜன்ஸ் லைட் பயன்படுத்தினேன். இந்தியாவிலேயே அதுதான் முதன்முறை. பிறகு எல்லாரும் பயன்படுத்தினாங்க. இப்ப மகேஷ்பாபு நடிச்ச ‘சரிலேரு நீக்கவெரு’ படத்துல, எல்இடி வால் ( LED wall) பின்னணியில ஷூட் பண்ணினேன். அதுவும் முதன்முறைதான். எப்படின்னா, சுவர்ல பனிமலை பிரதேசம் தெரியும். நீங்க முன்னால நின்னு நடிச்சா, குளிர்ல நடுங்கிட்டு இருக்கிற மாதிரி எடுக்கலாம். அப்படி ஷூட் பண்றதும் சவாலான விஷயம்தான்.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாக திறமையைக் காட்டுகிறார்கள்.. உங்களுக்கு அந்தத் திட்டம் இல்லையா?

ஏன் இல்லை? நானும் ரெண்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன். ஒன்னு ஆக் ஷன் திரில்லர், இன்னொன்னு எமோஷனல் படம். தமிழ்லயும் தெலுங்குலயும் தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்க. 2014-ல் தொடங்கியிருக்கணும். அப்ப ரஜினி சாரோட ‘லிங்கா’ வாய்ப்பு வந்தது. அதை முடிச்சுட்டு பண்ணலாம்னு பார்த்தா, அடுத்தடுத்து படங்கள் வந்ததால முடியல. இன்னும் ஒன்னு அல்லது இரண்டு வருஷத்துல நிச்சயமா டைரக்ட் செய்வேன்.

இந்த 25 வருட சினிமா கற்றுக்கொடுத்தது என்ன?

நிறைய அனுபவங்களைக் கொடுத்திருக்கு. சினிமாங்கறதே, ஒருவித கற்றல் முறைதான்னு சொல்வேன். குறிப்பா, சினிமாட்டோகிராஃபியில, புதுசு புதுசான விஷயங்கள் வந்துகிட்டே இருக்கு. நேற்று ஒரு விஷயம் வந்திருந்தா, நாளை அல்லது நாளை மறுநாள் இன்னொன்னு புதுசா அறிமுகமாகும். தேடிப் படிக்கணும். டெக்னாலஜி நம்மை அப்படி மாத்தியிருக்கு. தொடர்ந்து கவனிச்சா மட்டும்தான் நிலைச்சு நிற்க முடியும். என் கூட வந்த பல ஒளிப்பதிவாளர்கள் இன்னைக்கு வேற துறைக்கு போயிட்டாங்க. நான் தொடர்ந்து இருக்கிறேன்னா, டெக்னாலஜியை பின்பற்றுவதாலதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்