திரை விமர்சனம்: ஹலோ நான் பேய் பேசுறேன்

By இந்து டாக்கீஸ் குழு

நூதனமான முறைகளில் திருட்டுத் தொழில் செய்துவரும் அமுதன் (வைபவ்) கவிதாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) காதலிக்கிறார். ஐஸ்வர்யாவின் அண்ணன் விடிவி கணேஷ், குப்பத்தில் சாவுக் குத்து நடனம் கற்றுத்தருகிறார். குத்து நடனத்தில் தான் வைக்கும் சோதனையில் வென்றால்தான் தன் தங்கையை வைபவுக்குக் கல்யாணம் செய்து தருவேன் என்கிறார்.

சோதனையில் வென்று காதலுக்கு அனுமதி பெற்ற சந்தோஷத்தில் வளைய வரும் வைபவ், சாலையில் விழுந்து கிடக் கும் ஒரு செல்போனைத் திருடிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். அந்த செல்போனில் இருந்து பேய் (ஓவியா) கிளம்புகிறது. வைபவ், கணேஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பேயிடம் மாட்டிக்கொண்டு அல்லாடு கிறார்கள். பேய் ஐஸ்வர்யாவைப் பிடித்து வைத்துக்கொள்கிறது. பேய்க்கு என்ன வேண்டும்? அதன் கோரிக்கையை நிறைவேற்றி ஐஸ்வர்யாவை மீட்க முடிந்ததா?

நகைச்சுவை, திகில் இரண்டையும் சரியான அளவில் கலந்து தர முயற் சித்திருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை - திகில் படங்களில் லாஜிக் பற்றிய கவ னத்தைவிட பார்வையாளர்களை எப்படி சந்தோஷப்படுத்துவது என்பதையே மனதில் கொண்டு திரைக்கதை அமைத் திருப்பார்கள். அறிமுக இயக்குநர் எஸ்.பாஸ்கரும் இந்தப் பாதுகாப் பான எல்லைக்குள்ளேயே விளையாடி இருக்கிறார்.

திருடனின் காதல், சிரிக்கவைக்கும் வசனங்கள், துல்லியமான சென்னை வட்டார வழக்கு, பார்வையாளர்களையும் ஆடவைக்கும் சாவுக் குத்தின் வகை கள், அழகான பேய், பேயின் நிறைவேறாத ஆசை, பேய்க்கு இரக்கம் காட்டுவது என வெகுஜன ரசனைக்கான சமாச்சாரங்களைத் தூக்கலான நகைச்சுவையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஒவ்வொரு காட்சியிலும் நிரம்பி வழியும் நகைச்சுவையால் அரங்கம் அதிர்கிறது. இந்த அம்சம்தான் வைபவுக் கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வரும் நம்ப முடியாத காதல் பற்றியெல்லாம் கேள்வி கேட்க விடாமல் செய்கிறது. பேய் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பைக்கூட மறந்துவிட்டுப் பார்வையாளர்கள் காட்சிகளில் மூழ்கிப்போகும்போது பேய் வருகிறது. பேயின் அறிமுகமும் அதன் தோற்றத்தைச் சித்தரித்த விதமும் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன.

வைபவ் தனியாக இருக்கும்போது பேய் வருவதும் மறைவதும் யூகிக்கக் கூடியவையாக இருந்தாலும் வைபவ், கணேஷ், தீபன் ஆகியோர் பேயிடம் மாட்டிக்கொள்ளும் காட்சிகள் அந்தக் குறையை மறக்கச் செய்து விடுகின்றன.

பேயின் ப்ளாஷ்பேக்கைச் சுருக்கமாக ஒரு நகைச்சுவைப் பாடல் வழியாகச் சொன்ன விதம் அழகு. பேயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே எனத் துணியும் மதுமிதாவின் முடிவு, அப்ளாஸ் அள்ளுகிறது.

நகைச்சுவை நடிப்பில் தன்னால் பிரகாசிக்க முடியும் என்பதை வைபவ் நிரூபித்திருக்கிறார். சென்னை வட்டார வழக்கைக் கச்சிதமாகப் பேசி நடித் திருக்கும் விடிவி கணேஷ் வரும் காட்சியெல்லாம் கலகலப்பு. ஆபாச வசனங்களையே பெரிதும் சார்ந்திருப்பது இவரது நகைச்சுவையின் மதிப்பைக் குறைக்கிறது. சிங்கப்பூர் தீபன், யோகி பாபு ஆகியோரும் கவர்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா ஆகியோர் அழகான பேய்களாக பயமுறுத்தி, வசீகரிக்கிறார்கள். ஐஸ்வர்யா ஆடும் குத்தாட்டம் அட்டகாசம். மதுமிதா, கருணாகரன் இருவருக்கும் அதிக வேலையில்லை.

காதல் காட்சி, குத்துப் பாடல் காட்சி, பேய் வரும் காட்சிகள் என்று ஒளிப்பதிவாளர் பாலமுருகனுக்குக் கலவையான சவால். காட்சியின் தன்மைக்கான ஒளியமைப்பு, கோணங் கள் இரண்டிலும் புகுந்து விளையாடி யிருக்கிறார். ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது. துள்ளலான பாடல் கள் தரும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இசை யமைப்பாளர் சித்தார்த் விபின், பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தவில்லை.

பேயை வைத்துப் பயமுறுத்துவதை விட அது விருந்தாளியாக வந்துபோகும் கதையில் ரசிகர்களைச் சிரிக்கவைப்பதே முக்கியம் என்ற நோக்கத்தில் வெற்றிபெற்றுவிடுகிறார் இயக்குநர். கேள்வி கேட்காமல் பயந்து, சிரித்துவிட்டு வரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்