அந்தப் பாட்டிகளின் பொறுப்பு நமக்கு வேண்டாமா? - சசிகுமார் பேட்டி

By மகராசன் மோகன்

தாடி, மீசை, அழுக்கு, அழுகை என 'தாரை தப்பட்டை' அடையாளங்களைத் துடைத்து வீசிவிட்டு, துள்ளல் முகமும் துடிப்பான நடிப்புமாகப் பளிச்சிடுகிறார் 'வெற்றிவேல்' படத்தின் மூலம் கமர்ஷியல் பாதைக்குத் திரும்பியிருக்கும் சசிகுமார். நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிக்கு நீங்கள் ஏன் வரவில்லை, உங்கள் குருநாதர் பாலா மீது ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதை சர்ச்சை படிந்திருக்கிறதே போன்ற கேள்விகளுக்கு தனது மவுனத்தை மட்டுமே பதிலாக அளித்த சசிகுமார், மற்ற கேள்விகளுக்கு பட் பட்டென்று பதிலளித்தார். அவரிடம் பேசியதிலிருந்து…

ரசிகர்களின் குறிப்பறிந்து கொடுத்த படம் மாதிரி தெரிகிறதே வெற்றிவேல்?

‘டிரெய்லர் பார்த்த பலரும் ‘இதைத்தான் சார் உங்ககிட்ட நாங்க எதிர்பார்த்தோம்'னு சொல்லி வைச்ச மாதிரி சொன்னாங்க. தெரிஞ்சவங்களும் சினிமாகாரங்களும் சொல்ற கருத்தை எப்பவும் ஏத்துக்குவேன். ஆனா, மண்டைக்குக் கொண்டுபோக மாட்டேன். மீடியாக்களோட விமர்சனத்தையும் அப்படித்தான் எடுத்துக்குவேன். ரசிகர்களோட ரசிகனா உட்கார்ந்து அவங்களோட எதிர்பார்ப்பைத் தெரிஞ்சுக்கத்தான் ஆர்வமா இருப்பேன். நாம நினைச்ச இடத்தில் ரசிகன் கைதட்டினால் நமக்கு நூறு மார்க். ரசிகனோட மனசும் நம்ம சிந்தனையும் ஒண்ணா இருக்குன்னு அர்த்தம். அது இல்லேன்னா நம்மளை நாம இன்னும் சரி பண்ணிக்கனும்னு அர்த்தம். இரைச்சலும் எதிர்பார்ப்புமா இருக்கிற சாமானிய ரசிகர்களுக்கான தியேட்டரில்தான் என் படத்துக்கான தீர்ப்பை நான் தேடுவேன். அந்த விதத்தில் குடும்பம், கொண்டாட்டமா வந்திருக்கிற ‘வெற்றிவேல்' என் கணிப்பை சரியாக்கும்னு நம்புறேன்.

டிரெய்லர் வசனங்களில் விவசாயம் குறித்து வருகிறதே? விவசாயத்தை வலியுறுத்துகிற படமா?

தஞ்சை மாவட்ட விவசாயக் குடும்பத்தின் கதை. இயற்கை உரம் விற்பனை செய்கிற இளைஞன் கதாபாத்திரத்தில் வருகிறேன். விவசாயத்தைப் போதனையா சொல்லாமல், நல்ல ஜனரஞ்சகமான கதையில் சரியான இடத்தில் சேர்த்து அழுத்தமா சொல்லியிருக்கோம். தஞ்சை மாவட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களையும் நிறைய சேர்த்திருக்கிறோம். பக்கா கமர்ஷியல் கதையில் விவசாயமும் சேர்ந்து விளையாடும்!

மாபெரும் எதிர்பார்ப்பும், நினைச்சுப் பார்க்க முடியாத சரிவுமாக ‘தாரை தப்பட்டை' உங்களுக்கு மறக்க முடியாத படம். இதிலிருந்து எப்படி அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்து அடுத்த படத்துக்குப் போனீங்க?

எனக்கு மட்டும் இல்ல, மனுஷனா பொறந்த அத்தனை பேருக்குமே வெற்றி-தோல்விங்கிறது மறுக்க முடியாதது. ஆனா, படத்தோட தோல்விக்காகப் போய்ப் படுத்துடுற ஆள் நான் இல்ல. எப்பவுமே ஒரு வெற்றிக்காக அதிகம் கொண்டாடுறவங்கதான் ஒரு தோல்விக்காக அதிகமாத் துன்பப்படுவாங்க. எப்பவுமே என்னோட வெற்றியை ஒரு அங்கீகாரமா எடுத்துக்குவேனே தவிர, அதிகமாக் கொண்டாட மாட்டேன். தோல்விகளையும் அந்த மாதிரிதான். என்னோட அதிகபட்ச வெற்றியை முதல் படமான சுப்ரமணியபுரத்திலேயே பார்த்துட்டேன். மறக்க முடியாத தோல்வியை இரண்டாவது படமான ஈசனிலேயே பார்த்துட்டேன். இனி எதுவா இருந்தாலும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒண்ணாத்தான் இருக்கும்.

தயாரிப்பு, நடிப்பு எல்லாத்தையும் தாண்டி ‘தாரை தப்பட்டை' எனக்கு மறக்க முடியாத படம். பாலா அண்ணன் பக்கத்துல நின்ன ஒவ்வொரு நிமிஷமும் எனக்கான பாக்கியம். சினிமாவுல எந்தவொரு சிஷ்யனுக்கும் இந்த பாக்கியம் அவ்வளவு சீக்கிரம் அமையாது. தோற்றாலும் பேசப்படுற காதல் மாதிரி, காலம் வரைக்குமானது அண்ணன் மேல நான் வைச்சிருக்கிற அன்பு. இந்த அன்புக்கு வியாபாரம், லாப, நஷ்டக் கணக்கெல்லாம் தெரியாது!

அடுத்த படம் ஆரம்பிச்சிட்டீங்க போல?

பாதிப் படம் முடிச்சிட்டோம். புதுமுக இயக்குநர் பிரசாத், மண்ணையும் என்னையும் கலந்து செஞ்ச கதையோட வந்தார். என்னோட கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் எப்பவுமே புதுமுகங்களுக்கான களம். இசையமைப்பாளர் தர்புகா சிவா தொடங்கி நடிகர்கள் வரை எல்லாருமே புதுமுகங்கள்தான். கோவில்பட்டி ஏரியாவில் நெருப்பு வெயில்ல தகிக்கத் தகிக்க படமாக்கிட்டு இருக்கோம். கேமரா தோழன் எஸ்.ஆர்.கதிர். என்னோட இன்னொரு தோள். வெயிலும் வியர்வையுமா இந்தப் படத்தோட களமும் கலரும் வேற மாதிரி இருக்கும்.

தேர்தல் களை கட்டிடிச்சு. அரசியல் நிலவரங்களைக் கவனிக்கிறீர்களா?

கவனிக்கணும். நான் மட்டும் இல்ல. ஒவ்வொரு குடிமக்களும் கவனிக்கணும். கல்வி தொடங்கி பொருளாதாரம் வரைக்கும் எல்லாமும் வளர்ந்திடுச்சு. உள்ளங்கையில் உலகத்தை அடக்கிய மாதிரி விஞ்ஞானம் விளையாடுது. ஆனா, ஓட்டுப் போடுற மக்களோட சதவீதம் மட்டும் 70-ஐத் தாண்டலை. நமக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூட நமக்கு நேரமும் பொறுப்பும் இல்லை. 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலில் ஓட்டுப் போடலைங்கிறது ஒரு ஜனநாயக தேசத்துக்கான எவ்வளவு பெரிய தோல்வி? கிராமங்களில் வயசான பாட்டிங்ககூட தட்டுத் தடுமாறிக் குச்சியை ஊன்றியபடி ஓட்டுப் போடுறாங்க. அந்தப் பொறுப்பைப் பார்த்தாவது நாம பக்குவப்பட வேண்டாமா? எத்தனையோ நாடுகளில் குறிப்பிட்ட சமூக மக்கள் வாக்களிக்கிற உரிமையைப் போராடி வாங்கியிருக்காங்க. நமக்கு சுலபமாக் கிடைச்சிட்டதால வாக்கோட வலிமை புரியாமல் இருக்கோம். நம்மளோட விரல்ல சுமக்கப் போற மைதான் இந்த தேசத்தோட தலை எழுத்தை எழுதப்போகுது. 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகிற நாள்தான் ஜனநாயகத்துக்கான வெற்றி நாளாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்