திரையில் மிளிரும் வரிகள் 9 - எந்த மேகம் தந்த புனலோ?

By ப.கோலப்பன்

சில நடிகைகள் மட்டுமே எந்த வேடம் கொடுக்கப்பட்டாலும் பாத்திரத்தோடு ஒன்றிணைந்து விடுகிறார்கள். அங்கே நாம் அந்த நடிகையை மறந்துவிட்டுக் கதாபாத்திரத்தை மட்டுமே காண்கிறோம். அது போலத்தான் சில பின்னணிப் பாடகர்களும். அவர்களுக்கென தனித்துவமான குரல் இருந்தாலும் அக்குரல் கதாபாத்திரத்தின் குரலாகவே மாறிவிடுகிறது. இதற்கு உதாரணமாக ‘அவன்தான் மனிதன்’ படத்தில் நடித்திருக்கும் ஜெயலலிதாவையும் அவருக்காக ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அது எந்த தேவதையின் குரலோ’ என்ற பாடலைப் பாடிய வாணி ஜெயராமையும் குறிப்பிடலாம்.

ஹம்மிங்கில் தொடங்கிப் பாடல் முழுவதும் வாணி ஜெயராம் கோலோச்சுகிறார். அக்காட்சியில் நடித்த ஜெயலலிதாவோ தன்னுடைய பாவனையால் அக்காட்சியை வேறொரு உயர் தளத்துக்கு நகர்த்துகிறார். கண்ணதாசனின் பாடல் வரிகளும் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையும் பாடலை இன்னும் பல படிகள் உயர்த்துகின்றன.

‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ என்ற மிக மெதுவாகத் தொடங்கப்படும் பாடல் வரிகளுக்குப் பின்னணியில் ஒலிக்கும் டிரம்ஸின் தாளங்கள் ஒரு துள்ளல் நடையைக் கொடுக்கின்றன. கேள்வியாகவே இப்பாடல் பாடப்படுகிறது. ஜெயலலிதாவும் சிவாஜி கணேசனும் மிதமான பாணியில் நடனமாடுகிறார்கள்.

இப்படத்தில் ரவிகுமாராக வரும் சிவாஜி கணேசன் கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரர். கதாநாயகியான ஜெயலலிதாவும் குழந்தை நட்சத்திரமும் அவரின் கொடை உள்ளத்துக்கு செஞ்சோற்றுக் கடன்பட்டவர்கள். அதற்குப் பிரதிபலனாக எதைத் தருவது? காதலை மட்டுமே என்று சொல்கிறது இப்பாடல்.

‘எங்கள் தீபங்களில் ஒளி வந்தது; அது எந்தக் கைகள் தந்த ஒளியோ’ என்று சிவாஜியைப் பார்த்துக்கொண்டு கேள்வியிலேயே ‘நீதான்’ என்ற விடையையும் பார்வையிலேயே பகிர்கிறார் ஜெயலலிதா.

‘தாழங்குடைகள் தழுவும் கொடிகள் தாமரை மலர்களின் கூட்டம்;

மாலை மணிகள் மந்திரக் கனிகள் மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது அது எந்த ஆலயத்து மணியோ’

அனுபல்லவியின் வரும் இவ்வரிகள் குருவாயூரின் அற்புதக் காட்சிகளைப் படம் பிடிப்பதாகத் தெரிவிக்கிறார் கவிஞர் காலப்ரியா.

தாழை மடல்களால் செய்யப்பட்ட சிறு குடைகளைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் செல்கிறார்கள். வேலிகளிலும் தோட்டங்களிலும் கொடிகள் மரங்களைத் தழுவி நிற்கின்றன. தாமரை மலர்கள் தலைதூக்கிக் கூட்டமாய்ப் பூத்துக் குலுங்குகின்றன.

அந்தியில் ஆலயத்தின் மணிகள் ஒலிக்கின்றன. மந்திரங்கள் ஓதப்படுகின்றன. எங்கு நோக்கிலும் கண்ணனையொத்த சிறு குழந்தைகள் நிறைந்திருக்கும் இக்கோயிலில்தான் குழந்தைகளுக்குச் ‘சோறு ஊட்டும்’ வழக்கம் உண்டு.

‘குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்,’ என்று பின்னர் கிருஷ்ண கானம் தொகுப்புக்காக கண்ணதாசன் எழுதினார். அதற்கும் இசை எம்.எஸ். விஸ்வநாதன்தான்.

குருவாயூர் காட்சியை முடித்துவிட்டு அப்படியே சிவாஜி இருக்கும் மாளிகைக்கு வருகிறார் ஜெயலலிதா. மாளிகையில் சந்திரனைப் போல் தோற்றப் பொலிவு கொண்டவராகக் கதாநாயகன் நிற்கிறார். அங்கு மாயமாகக் கேட்கும் ஒலி தேவாலயத்தின் மணியோசையா என்று வினவுகிறார் நாயகி. புன்னகையை மட்டுமே பதிலாகத் தருகிறார் நாயகன்.

சரணத்தில்தான் நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் ஊறித் திளைத்த கண்ணதாசன் வெளிப்படுகிறார்.

‘கதிரொளி

தீபம் கலசம் ஏந்த கண்ணன் வருகின்ற கனவு

கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன் கண்கள் தூங்காத இரவு

கங்கையிலே புதுப்புனல் வந்தது அது

எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது

எந்த மன்னன் தந்த அனலோ’

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி அப்படியே இங்கே வெளிப்படுகிறது.

‘கதிரொளி தீபம்க லசமு டனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்’

அழகிய இளம் பெண்கள் சூரியனையொத்த ஒளியை உடைய மங்கள தீபத்தையும் பொற்கலசங்களையும் ஏந்திக்கொண்டு வருகையில் வடமதுரையின் மன்னனான கண்ணபிரான் பூமி அதிரும்படியாகப் பாதுகைகளைச் சாத்திக்கொண்டு வருவதாகக் கனவு கண்டதாக ஆண்டாள் கூறுகிறாள்.

நம்முடைய கதாநாயகியும் அதைக் கனவைக் கண்டதாகக் கூறுகிறாள். அத்தகைய கனவு வந்த பெண்ணுக்குத் தூக்கமேது?

‘கங்குலும் பகலும் கண்துயிலறியாள் கண்ணநீர் கண்களால் இறைக்கும்’

கண்ணனை நினைத்துத் தன் பெண் இரவும் பகலும் தூங்காமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதைப் பாராங்குச நாயகியின் தாயார் புலம்பும் தொனியில் நம்மாழ்வார் வடித்துள்ள பாசுரம் இது.

படத்தில் வரும் காட்சியில், கங்கையில் பாய்ந்து வரும் வெள்ளத்தைத் தந்த மேகம் இன்னதென்று பிரித்தறிய முடியுமா? அது போலத்தான் மங்கையிடம் அனலை மூட்டியவரையும் அடையாளம் காண்பது என்று பாடிக்கொண்டே கதாநாயகனைப் பார்க்கிறார் கதாநாயகி. ஒன்றுமே தெரியாதது போல் சிரிக்கிறார் அவர்.

மிகச் சிறந்த நடிகையால் மட்டுமே அத்தகைய பாவனையை அரை நொடியில் வழங்க முடியும். அந்த அரை நொடியில் ஜெயலலிதாவின் கண்களில் ‘பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் அரையில் வண்ணப் பீதக ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே’ என்று பாடிய ஆண்டாள் தோன்றி மறைந்தாள். அவளுடைய தாபத்தைத் தணிக்க, பெருமாள் அணிந்திருக்கும் ஆடையை விசிறியாக வீச வேண்டுமாம்!

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்