இயக்குநரின் குரல்: கையெடுத்துக் கும்பிட ஒரு கத்துக்குட்டி!

By மகராசன் மோகன்

‘‘ஒரு பெண்ணை பல ஆண்டுகள் பின்தொடர்ந்து போய், சரியான சந்தர்ப்பத்தில் சுமந்து திரிந்த அன்பை துணிச்சலாகச் சொல்லி வெற்றி அடைவதும் காதல்தான். பார்த்த ஐந்தாவது நிமிடத்தில் ‘வாழ்ந்தால் இந்தப் பெண்ணோடுதான் வாழணும்’ என்று உறுதியோடு நிற்பதும் காதல்தான். ஆனால் இரண்டிலும் உண்மை இருக்க வேண்டும். சினிமாவுக்கான என்னோட உழைப்பு ஐந்து நிமிடக் காதல் போன்றதல்ல. பிள்ளைக் காதல் மாதிரிப் பள்ளிக்கூடத்துல ஆரம்பிச்சது இது..” சினிமாவுக்கும் தனக்கும் உறவு தொடங்கிய காலம் கனவுகள் நிறைந்த பால்யம் எனக் கவித்துவமாகப் பேச ஆரம்பித்தார் ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குநர் இரா.சரவணன்.

யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல், குறும்படம் இயக்காமல், பத்திரிகையாளர் என்ற ஒரே அடையாளத்துடன் நரேனையும் சூரியையும் கூட்டிக்கொண்டு கோலிவுட்டிற்குள் நுழைந்திருக்கிறார் இவர். மொத்தப் படத்தையும் ஒரே மூச்சில் முடித்துவிட்டுப் படத்தொகுப்பில் இருந்தவரைச் சந்தித்தோம்.

பயிற்சி எதுவுமே இல்லாமல் நேரடியாக சினிமாவுக்குள் நுழையும் துணிவு எப்படி வந்தது?

முறையான பயிற்சி எடுத்துக்கல. ஆனால் பள்ளி நாட்கள்ல தொடங்கி பத்திரிகையாளனாகத் திரிஞ்சது வரைக்கும் சினிமா மீது எனக்கிருந்த மரியாதை வளர்ந்துகொண்டே இருந்தது. பிறகு அமீர் அண்ணனோட ‘பருத்தி வீரன்’ படம் வெளியானபோது அதை 250 முறை பார்த்திருப்பேன். அவர் இல்லனா சினிமாவுக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்தப் படத்தின் நுணுக்கங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டால் அதுவே ஒரு ஃபாஸ்ட் டிராக் சினிமா கோர்ஸ் படிச்சு முடிச்ச அனுபவம் மாதிரிதான். இன்னும் எண்ணற்ற சிறந்த கலைஞர்கள் அதற்கு முன்புவரை என்னைப் பாதித்துக் கொண்டேதான் இருந்தார்கள். எழுத்துக்கும் காட்சி மொழிக்குமான பெரிய இடைவெளி இருக்கிறது. திரைமொழிக்கு ஏற்கெனவே இங்கே இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கணத்தை யார் வேண்டுமானாலும் மீறலாம். ஹீரோ சீரியஸாக ஒரு வசனத்தைப் பேசும்போது கேமரா ஹீரோ முகத்தைப் பார்க்கணும்கிறது விதி. ஆனா அதே அட்மாஸ்பியர்ல நிக்குற வேற ஒரு ஆளைக்கூடக் கேமரா கவனிக்கலாம். இப்படி இன்னைக்கு மீறல்கள் வழியா உருவான திரைமொழிதான் என்னைச் சினிமாவுக்கு இழுத்துகிட்டு வந்துச்சுன்னு சொல்லனும்.

நரேனையும் சூரியையும் எப்படிப் பிடிச்சீங்க?

‘‘இந்தக் கதையை என்னிடம் எப்படிச் சொன்னாயோ.. அதை ஷாட் பை ஷாட் அப்படியே படமாக்கினாலே நச்சுன்னு நல்ல படமாக வரும்’’ என்றார் சசிகுமார் சார். சிறகுகள் முளைச்ச மாதிரி இருந்தது. தைரியத்தோட இறங்கினேன். சினிமா தெரியாதவர்களை வைத்துக்கொண்டு சினிமா செய்வது சுலபம். நரேன் சினிமா தெரிந்த மனிதன். அதுவும் 60 கதைகளைக் கேட்டு வேண்டாம் என்று இருந்த நேரத்தில் என் கதையைத் தேர்ந்தெடுத்தார். சூரி சினிமாவோட நுட்பங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நண்பன். ஒரு ஷாட் வைத்தால் இது எதுக்கு? இதுல எப்படி காமெடி கன்வே ஆகும்? இப்படியெல்லாம் கேட்கிற ஆள். இவர்கள் என்னை நம்பிக் கொடுத்த ஊக்கத்துக்கும், காட்டிய ஆர்வத்துக்கும் நான் தலை வணங்கியே ஆகணும்.

கத்துக்குட்டியின் கதை என்ன?

வாழ்க்கையில எல்லாருமோ ஒவ்வொரு வகையில ஹீரோதான். நான் என்னோட முதல் ஹீரோவை என் கிராமத்துலத்தான் பார்த்தேன். சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையனோட கதை இது. இதுல நிஜம், நிஜத்துக்குப் பக்கத்துல நிக்கிற கற்பனை ரெண்டுமே சரிசமமா இருக்கு. எல்லோர் கிட்டயும் வம்பு, சேட்டை, வாலு, சண்டியர்தனம் பண்ணிக்கிட்டு ஊரைச் சுற்றிவர்ற ‘கத்துக்குட்டி’யை ஒரு சின்ன விஷயம் பாதிக்கும். அதிலிருந்து மீண்டு அப்பாவுக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுக்கணும் என்று நினைக்கும்போது அவனைச் சுற்றி மிரட்டல் வலுக்கிறது. அதை எப்படிச் சமாளிக்கிறான்கிறதுதான் கதையோட பயணம். சுருக்கமா சொல்லணும்ன்னா கோயில் பார்த்துக் கை எடுத்துக் கும்பிடாத ஒருத்தன், எதிரில் யார் வந்தாலும் கைகூப்பிக் கும்பிடுற நிலைக்கு ஏன் மாறுகிறான் என்ற கேள்விக்கான பதில்தான் இந்தப் படம். சீரியஸ் கதைமாதிரி தோணும். ஆனால் முழுக்க காமெடி கலாட்டா. சூரியோடு சேர்ந்து நரேன் அவ்ளோ காமெடி பண்ணியிருக்கிறார். சினிமா வழியா போதனை பண்றதுல எனக்கு நம்பிக்கையில்ல. இதுல தஞ்சை மண்ணோட தனித்துவமான மணம் வரணும்னு ரொம்ப மெனக்கெட்டிருக்கேன்.

நாயகி ஸ்ருஷ்டி ரொம்ப அழகா தெரிகிறாரே?

ஹன்சிகா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பெண்தான் இந்த ஸ்ருஷ்டி. மும்பை மாடல். தன்னோட போர்ஷன் முடிஞ்சதும் கேரவான்ல போய் ஒளிஞ்சுக்கிற பொண்ணு இல்ல. படப்பிடிப்பு தளத்துல கூடியிருக்கும் கிராமத்து மக்கள்கிட்ட பேச்சுக்கொடுத்துத் தமிழ் கத்துக்கிட்டார். தமிழ்மேல அவ்ளோ ஆர்வம். நல்ல எதிர்காலம் இருக்கு. கேமராமேன் சந்தோஷ் ராம். இவர் கவிஞர் விக்ரமாதித்யனோட பையன். முதல் பட இயக்குநருக்கு இப்படி ஒரு கேமராமேன் கிடைப்பது அரிது. இசையமைப்பாளர் அருள்தேவ். அவரோட பாட்டைக் கேட்டு நீங்களும் பாராட்டப்போறீங்க. குறிப்பா ஜெயராஜ் சாரைப் பற்றி சொல்லியே ஆகணும். இவர் பாரதிராஜா தம்பி. படத்தில் நரேனுக்கு அப்பாவாக நடிக்கிறார். ‘40 ஆண்டுகளாகக் கூடவே இருந்த பாரதிராஜா, மணிவண்ணனுக்குத் தெரியாத முகமா உனக்குத் தெரிஞ்சிருக்கு. போப்பா விளையாடாத. நடிப்பெல்லாம் எனக்கு வேணாம்ன்னு சொல்லிட்டார்’ அவரிடம் திரைக்கதையைப் படிச்சுட்டுச் சொல்லுங்க என்று கொடுத்தேன். அவருக்கு ரொம்ப பிடிச்சுப்போய் ஓகே சொன்னார். தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கமான அப்பா கிடைச்சுட்டார்.

பத்திரிகையாளர்கள் பலர் சினிமா இயக்குவதில் தற்போது அதிக ஆர்வம் காட்ட என்ன காரணம்?

சினிமாவுக்கு வர்ற பத்திரிகையாளர்கள் விகிதம் ரொம்பக் குறைவுதான். ஆனால் அவங்க வந்தா நல்ல படங்களைக் கொடுக்க முடியும். ஏன்னா, சமூகத்தை மற்ற எல்லோரையும் விட கூர்ந்து கவனிக்கிற இனம் பத்திரிகையாளர்கள்தான். கலைகளை முழுமையாக உள்வாங்க வேண்டிய தேவையும், பலவிதமான கலைப் படைப்புகளை உள்வாங்கிக்கிட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய விமர்சனத்தைத் தங்களோட ஆடியன்ஸூக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் அவங்களுக்கு இருக்கு. அதனால அவங்க ரசனை மேம்பட்டதாக இருந்தாகணும். அதனால் ஒவ்வொரு பத்திரிகையாளன் உள்ளேயும் ஒரு படைப்பு மனம் உருவாகுறது இயல்பா நடக்கிற விஷயம்தான்.

சமீபத்துல பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கத்துல வந்த ‘குக்கூ’ பேசப்பட்ட படமாகத்தானே இருந்துச்சு. பதினைஞ்சு வருஷம் பத்திரிகை வாழ்க்கையை அனுபவிச்சிருக்கேன். விதவிதமான முகங்கள், மாறுபட்ட குணங்கள்னு நிறையப்பேரைச் சந்திச்சிருக்கேன். அப்படிச் சந்தித்த மனிதர்களோட கதைகளை சினிமால சொல்லலாம்ன்னு இறங்கினாலே நான் - ஸ்டாப்பா போயிகிட்டே இருக்கலாம். ஆனால் இந்த நிமிஷம் கத்துக்குட்டியை நம்ம ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தணும். அட இவன் நம்ம ஊர்க்காரனாச்சேன்னு அவங்க நினைக்கணும். அப்படி நினைச்சுட்டா எனக்கும் சினிமால கண்டிப்பா ஒரு இடம் இருக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்