உலக அரங்கில், எத்தனை இயக்குநர்களின் படங்கள், தங்களது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வேறாக, புதிய களன்களை ஆராய்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன? ஒரு உதாரணத்துக்கு, கிறிஸ்டோஃபர் நோலனை எடுத்துக்கொண்டால், அவரது பல படங்களிலும், புதிர்கள், விஞ்ஞானத்தோடு விளையாடுதல் முதலிய சில பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கவனிக்க முடியும். அதேபோல் டாரண்டினோவின் படங்களில் வன்முறை, நான் லீனியர் கதைசொல்லல், ஒரு நாவலைப் போன்றே அமைந்திருக்கும் திரைக்கதை முதலிய அம்சங்கள் இருக்கும். ஹிட்ச்காக் படங்களில் சஸ்பென்ஸ் முதலியவை. இவர்கள் எல்லாருமே மிகச் சிறந்த இயக்குநர்கள் தான். சந்தேகமில்லை. இவையெல்லாமே இவர்களின் முத்திரைகள்.
இருப்பினும், அவ்வப்போது சில இயக்குநர்கள், தங்களது ஒவ்வொரு படங்களிலும் முற்றிலும் புதிய அம்சங்களைக் கையாள்வதில் வல்லவர்களாக அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படி, தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த படத்தை எடுக்காமல், ஒவ்வொரு படத்தையும் முற்றிலும் வித்தியாசமான களனில் எடுத்தார் ஒருவர். இறக்கும்வரை எவராலும் அவரை விஞ்ச முடியாமல், இறந்தபின்னும் அற்புதமான பிரம்மாண்டமான அட்டகாசமான படங்களின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மனத்தில் நீங்காமல் நிறைந்திருக்கும் ஒரு இயக்கு நரைப் பற்றித்தான் இந்த வாரம் கவனிக்கப் போகிறோம்.
ஸ்டான்லி க்யுப்க்ரிக்
பள்ளியில் படிக்கும்போதே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டியவர். பின்னர் புகைப்படக் கலையை முறையாகப் பயின்று, பத்திரிகை புகைப்படக் கலைஞராக இருந்தபோது, சிகாகோ நகரின் தெருக்களில் இரவில் அலைந்து, ‘சிகாகோ- சிட்டி ஆஃப் எக்ஸ்ட்ரீம்ஸ்’ (Chicago-City of Extremes- 1949) என்ற பெயரில் இவர் எடுத்த படங்கள் ஐம்பதுகளில் அமெரிக்காவில் பிரபலம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும்போதே, திரைப் படங்கள் பற்றிய பல புத்தகங்களையும் படித்துக்கொண்டிருந்தார் க்யுப்ரிக். இதன் பின் தனது முதல் குறும்படத்தை ‘டே ஆஃப் த ஃபைட்’ (Day of the Fight) 1951-ல் வெளியிடுகிறார்.
அக்காலத்தின் பிரபலக் குத்துச்சண்டை வீரர் வால்டர் கார்டியர் பற்றிய படம். தனது முழுநேரப் புகைப்படக் கலைஞர் வேலையை விட்டுவிட்டு, அவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படமான ‘ஃபியர் அண்ட் டிசைர்’ (Fear and Desire) 1953-ல் வெளியானது. படம் வசூலில் தோல்வியடைந்தது. இதன் பின்னர் வெளியான படம்தான் ‘த கில்லிங்’ (The Killing- 1956). பின்னாட்களில் தனது மூன்றாவது படமான ‘ஜாக்கி ப்ரௌன்’-ஐ உருவாக்க இப்படம் ஒரு உந்துதலாக அமைந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதன் பின்னர் ‘பாத்ஸ் ஆஃப் குளோரி’ (Paths of Glory- 1957) என்ற பெரிய பட்ஜெட் படத்தைப் பிரபலமான எம்.ஜி.எம். ஸ்டுடியோவுக்காக இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நடித்திருந்தவர், கிர்க் டக்ளஸ். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட பாக்ஸ் ஆஃபீஸ் நடிகர்களில் ஒருவர். க்யுப்ரிக்கின் முதல் பாக்ஸ் ஆஃபீஸ் படமாகவும் இது ஆனது. பரவலாகக் கவனம் பெற்றார் க்யுப்ரிக்.
ஒரு திரைக்கதாசிரியரின் வனவாசம்
இதன் பின்னர் மார்லன் பிராண்டோவே க்யுப்ரிக்கை அழைத்து ஒரு படம் இயக்கக் கேட்டுக்கொண்டு. பின்னர் அதிலிருந்து சில பிரச்சினைகளால் க்யுப்ரிக் வெளியேறுவது நடந்தது.
இதன் பின்னர் க்யுப்ரிக்கை கிர்க் டக்ளஸே மறுபடி அழைத்தார். டால்டன் ட்ரம்போ என்ற மிகச் சிறந்த திரைக்கதை எழுத்தாளர், கம்யூனிச ஆதரவால் கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் ஹாலிவுட் ஸ்டுடியோக்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தார். அவரது திரைக்கதையில் தயாரான பிரம்மாண்டமான படம் அது. அதுதான் ‘ஸ்பார்ட்டகஸ்’ (1960). ஹாலிவுட்டின் பிரம்மாண்ட ஹிட்களில் ஒன்று. நான்கு ஆஸ்கர்கள் வென்றது. இந்தப் பத்தாண்டுகளில், புனைபெயர்களில் திரைக்கதை எழுதியே ட்ரம்போ பணம் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார்.
இதற்குள் இரண்டு ஆஸ்கர்களும் அவரது புனைபெயர்களுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தன. பத்தாண்டுகள் கழித்து ஸ்பார்ட்டகஸில்தான் ட்ரம்போவின் பெயர் வெளிப்படையாக இடம்பெற்று, அவரது அஞ்ஞாத வாசத்தை முடித்து வைத்தது. இந்தப் பின்னணியைக் கதையாகக் கொண்ட ‘ட்ரம்போ’ (Trumbo) என்ற படம் சென்ற வருடம் வெளியாகிப் பலத்த பாராட்டும் பெற்றது.
‘ஸ்பார்ட்டகஸ்’ படத்துக்குப் பின்னர் க்யுப்ரிக்குக்கு ஏறுமுகம்தான். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநராக உயர்ந்தார். அவரது அடுத்த படமாக ஏதேனும் பிரம்மாண்டமான படம் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தபோது, சர்ச்சைக்குரிய நாவலான லோலிடாவை (Lolita) 1962-ல் படமாக எடுத்தார். நபக்கோவ் எழுதிய இந்நாவல் உலகம் முழுக்கப் பிரபலமானது. 12 வயது மாணவியின்மேல் மோகம் கொள்ளும் ஒரு பேராசிரியரின் கதை. இதன் கதைக் களன் காரணமாக உலகெங்கும் சர்ச்சைக்குரிய நாவலாக மாறியது.
சிறந்த அரசியல் படம்
இதன்பிறகு, ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ்’ (Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb- 1964) வெளியாகிறது. இப்படம் வெளிவந்த காலத்தில், மிக முக்கியமான அரசியல் படமாக (இப்போதும்தான்) கருதப்பட்டுப் பல விருதுகளையும் அள்ளியது. கறுப்பு-வெள்ளைப் படமான இது உலக அரசியல் தலைவர்களை வெகுவாகப் பகடி செய்கிறது. பொறுப்பே இல்லாமல் அணு ஆயுதங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தத் தலைவர்கள் நினைத்தால், ஒரு சிறிய உத்தரவினால், இந்த உலகையே அழித்துவிட முடியும் என்பதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இன்றும் உலகெங்கும் கொண்டாப்படும் படமாக இருக்கிறது.
ஒரு படம் ஐந்து ஆண்டுகள்
இதன் பின்னர் க்யுப்ரிக் இயக்கிய படம், இன்றுவரை ஸ்பெஷல் எஃபக்ட்ஸுக்காகப் பாராட்டப் பட்டுக்கொண்டிருக்கும் படம். ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதையை மையமாக வைத்து வெளியான அந்தப் படம் ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ (2001: A Space Odyssey -1968). இதற்காக ஐந்து வருடங்கள் செலவிட்டார் க்யுப்ரிக். அந்தக் காலகட்டத்தில் வெளியாகிக்கொண்டிருந்த வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய படங்கள் போல் இல்லாமல், மிகவும் அழுத்தமாக ஒரு கதையைப் பதிவு செய்த, வேற்றுக்கிரகவாசியைப் பற்றிய படம். கிராஃபிக்ஸ் துறை மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்த அக்காலத்தில், அருமையான ஸ்பெஷல் எஃபக்ட்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. இப்படத்தைச் சந்தேகமில்லாமல் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ (cult classic) என்று சொல்ல முடியும்.
பிற்காலத்தில் இப்படத்திலிருந்து தொடங்கி க்யுப்ரிக்கின் படங்களில், இசை முக்கியப் பங்கை வகிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதத்தின் ஸிம்ஃபனி இசை.
அதிர்ச்சி தரும் படம்
அடுத்ததாக, ‘எ கிளாக்வொர்க் ஆரஞ்ச்’ (A Clockwork Orange -1971) வெளியாகிறது. மறுபடியும் ஒரு சர்ச்சைக்குரிய படைப்பையே எடுத்திருந்தார் க்யுப்ரிக். ஆன்டனி பர்ஜெஸ் எழுதியிருந்த இந்த நாவல், அக்காலத்திய இளைஞர்களின் போக்கைப் பற்றிய மிகவும் சர்ச்சைக்குரிய படைப்பு. வெளிப்படையான செக்ஸ் மற்றும் வன்முறைக் காட்சிகள் கொண்ட இந்தப் படம், க்யுப்ரிக்குக்குப் பல்வேறு கொலை மிரட்டல்கள் வருவதற்கும் காரணமாக அமைந்தது. இன்றும் இப்படம் பார்ப்பவர்கள், ஒருவித அதிர்ச்சிக்குள்ளாவதைக் காண முடியும்.
இதன் பிறகு ‘பேரி லிண்டன்’ (Barry Lyndon -1975) என்ற படத்தை எடுத்தார் க்யுப்ரிக். இது, வழக்கப்படியே அவரது முந்தைய படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட படம். பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. நான்கு ஆஸ்கர்களை வாங்கியது.
இதன்பின்னர் க்யுப்ரிக் எடுத்ததுதான் இன்றுவரை உலகின் மிகச் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘த ஷைனிங்’ (The Shining 1980). ஜாக் நிகல்ஸனின் அட்டகாசமான நடிப்பும், க்யுப்ரிக்கின் மிகச் சிறந்த இயக்கமும் சேர்ந்து, மிகுந்த பயமூட்டக்கூடிய படங்களில் ஒன்றாக இதை உருவாக்கின. ஸ்டீஃபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.
இதன் பின்னர், ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’ (Full Metal Jacket -1987) மற்றும் ‘ஐஸ் வைட் ஷட்’ (Eyes Wide Shut - 1999) ஆகிய படங்களை க்யுப்ரிக் எடுத்தார். ஃபுல் மெடல் ஜாக்கெட், ஒரு ராணுவப் படம். இதுவும் ஒரு நாவலே. வியட்நாம் போரின் பின்னணியில், இரண்டு ராணுவ வீரர்களின் மனநிலை, அவர்களின் செயல்கள் ஆகியவை எப்படிப்பட்ட மாற்றங்கள் அடைகின்றன என்பதைப் பற்றிய படம். படத்தின் முதல் பாதியில், ராணுவ வீரர்கள் கொடூரமாகப் பயிற்சிக்குள்ளாக்கப்படுவது அவர்களின் மனதில் ஏற்படுத்தும் மாற்றமும், இரண்டாம் பாதியில் அவர்கள் வியட்நாம் போரில் பங்கேற்கும்போது இதனால் நேரும் அனுபவங்களும் விவரிக்கப் பட்டிருக்கும்.
ஒரு கவிதை
‘ஐஸ் வைட் ஷட்’ படமோ, ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் சிறிய விரிசலையும், அதனால் வீட்டிலிருந்து வெளியேறி இரவு முழுதும் சுற்றும் கணவன் அடையும் அனுபவங்களையும் களமாகக் கொண்டது. இப்படம் அளிக்கும் மனமாற்றங்களை இங்கே எழுதுவது கடினம். ஒவ்வொரு ஷாட்டாக இழைத்து க்யுப்ரிக் உருவாக்கிய கவிதை என்று இப்படத்தைச் சொல்ல முடியும்.
இந்தப் படத்தின் எடிட்டிங் முடிந்ததுமே க்யுப்ரிக் மரணமடைந்தார். க்யுப்ரிக்கின் படங்களில் இருக்கும் அற்புதமான, வித்தியாசமான அம்சங்களை வரும் வாரம் ஆழமாகக் கவனிக்கலாம்.
தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago