இந்திப் படவுலகின் தலைசிறந்த பாடலாசிரியர், கவிஞர், ஜாவேத் அக்தரின் பிரகடனம் இது. “முகர்ந்ததுமே நம் மனத்தையும் உடலையும் ஆரத் தழுவிக்கொள்ளும் நறுமணங்கள் அனைத்தையும் சேகரித்துக்கொள்ளுங்கள். நம் கண்களையும் உடலையும் குளிர்விக்கும் வெண்ணிலவின் ஒளியை ஒன்று திரட்டுங்கள், இந்தப் பூமியில் உயர்ந்த மலைகளில் கிடைக்கும் தேன் அனைத்தையும் திரட்டிக்கொண்டு வாருங்கள். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால்கூட உங்களால் லதாவுடைய குரலின் இனிமையை உருவாக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.
அது நூற்றுக்கு நூறு உண்மை. இனிமையும் தெய்விகமும் இணைந்த குரலால், அவருடைய தந்தையின் தாய் மொழியான மராத்தி, தாயாரின் தாய்மொழியான குஜராத்தி, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, அசாமி, டோக்ரி உள்ளிட்ட 40 இந்திய மொழிகளில் பாடிய ஒரே பெண் பாடகர். இந்தியாவைக் கடந்து, ரஷ்யன், ஃபீஜியன், லத்தின், ஸ்வாஹிலி உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் பாடி உலகெங்குமுள்ள இசை ரசிகர்களைத் தன்வசமாக்கியவர் லதா மங்கேஷ்கர்.
20-ம் நூற்றாண்டில் பாடத் தொடங்கி, 2019 - வரை கடந்த 75 ஆண்டுகளாகப் பாடி வந்திருப்பவர் என்கிற முறையில், அவரை ‘இரு நூற்றாண்டுகளின் வானப்பாடி’ எனக் கொண்டாடலாம். அப்படிப்பட்டவர், நடிப்புக் கலையின் பல்கலைக்கழகம் என்று போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, தன்னுடைய சொந்த சகோதரனைப்போல் மனப்பூர்வமாக சுவீகரித்துக்கொண்டார். வடக்கையும் தெற்கையும் கலைவழியாக முகிழ்த்த சகோதர பாசம் ஒன்றிணைத்த அதிசயம் எப்படி நடந்தது என்பதை குடும்ப நண்பர் என்கிற முறையில் நடிகர் திலகமே என்னிடம் பகிர்ந்திருக்கிறார். இருப்பினும் நடிகர் திலகத்தின் தலைமகனும் எனது ஆருயிர் நண்பருமாகிய ராம்குமாரிடம் கேட்டபோது சொன்னார்.
நாடகம் இணைத்தது!
“அப்பாவுக்கும் லதாஜியின் குடும்பத்துக்கும் இடையில் பாசம் மலர்ந்தது 1961-ம் வருடம். பீம்சிங் இயக்கத்தில் அப்பா நடித்திருந்த அற்புதமான படம் ‘பாவ மன்னிப்பு’. மும்மையிலும் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்தப் படத்தின் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு, ‘உங்களுடைய அப்பா தீனாநாத் போலவே தோற்றமுடைய ஒருவர் கதாநாயகனாக நடித்து ஒரு தமிழ்ப் படம் வெளியாகியிருக்கிறது.' என்று லாதாஜியின் குடும்ப உறவினர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
அதைக் கேட்டுக் குடும்பத்துடன் போய் ‘பாவ மன்னிப்பு’ படத்தைத் தமிழ் மொழி புரியாமலேயே பார்த்து வியந்திருக்கிறார்கள். ‘தோற்றத்திலும் நடிப்பிலும் தங்களுடைய தந்தையைப்போல் இருக்கிறாரே..!’ என்று வீட்டுக்கு வந்ததும் பேசி வியந்திருக்கிறார்கள். 41 வயதில் தந்தையை இழந்த குடும்பம். ‘பாவ மன்னிப்பு’ படம் ஏற்படுத்திய உணர்ச்சிப்பெருக்கால், அன்னை இல்லத்துக்கு டிரங்கால் போட்டு, ‘நடிகர் திலகத்தைக் பார்க்க விரும்புகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது அப்பா ஒரே நாளில் மூன்று படங்களில் மாறி மாறி நடித்துகொண்டிருந்த நேரம். சுத்தமாக நேரமில்லை. 3 மாதம் கழித்து வருங்கள் என அப்பாவிடம் கேட்டு, சித்தப்பா சண்முகம் தேதி கொடுத்திருக்கிறார். அதற்கு ஒப்புக்கொண்டு, மூன்று மாதம் கழித்து, அப்பாயின்ட்மென்ட் கொடுத்த தேதியில் தன்னுடைய அம்மா, தங்கைகள், தம்பி ஆகியோருடன் குடும்பமாக அன்னை இல்லத்துக்கு வந்துவிட்டார் லதாஜி.
அப்பாவைப் பார்த்ததும் லாதாவும் அவருடைய சகோதரிகளும் ஓடிப்போய் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அந்த நெகிழ்ச்சியான சந்திப்பில், அவர்கள் அனைவரும் கலங்க.. ‘இன்றுமுதல் எங்கள் அனைவரையும் உங்களுடைய தங்கைகளாக, இவனை உங்கள் தம்பியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று லதாஜி கேட்க.. அப்பா நெகிழ்ந்து கலங்கினார். அந்தக் கணமே அவர்களை தன்னுடைய சொந்த சகோதரிகளாக, சகோதரனாக ஏற்றுகொண்டார். தீபாவளிப் பண்டிகை சமயத்தில், அண்ணன் வீட்டுச் சீராக புதுத் துணிமணிகளை மும்பைக்கு அனுப்பி வைப்பார். அதேபோல, லதாஜியும் அங்கிருந்து சீர் அனுப்புவார். அப்பாவின் மறைவுக்குப் பிறகும் நாங்கள் சீர் அனுப்புவதை நிறுத்தவில்லை. லதாஜியும் அதைத் தொடர்ந்தார்.” என்றவர், “கடைசியாக அவர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு, என்னை போனில் அழைத்தார். ‘ராம்.. குடும்பத்தை நல்லா பார்த்துக்கோப்பா... அண்ணா எப்பவும் என்கூட இருப்பார்.. எங்க ஆசீர்வாதம் எப்பவும் உங்களை நோக்கியே இருக்கும்” என்று சொன்னார். நான் கலங்கிவிட்டேன்.” என்கிறார்.
அப்பாவுக்காக பாட வந்தார்!
ராம்குமார், பிரபு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் அவ்வளவு பாசத்தைப் பொழிவார் லதாஜி. 1987-ல் வெளியான ‘ஆனந்த்’ படத்துக்கு அவர் பாட வந்தது பற்றி பிரபுவிடம் கேட்டேன். ” ‘ஆனந்த்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ.. ஆராரோ’ பாடலை லதாஜி பாடினால் அற்புதமாக இருக்கும் என்கிற எண்ணம் அண்ணன் ராம்குமாருக்கு தோன்றியிருக்கிறது. அதை அவர் இளையராஜா அண்ணனிடம் சொல்ல.’ நீங்கள் அழைத்தால் வந்து பாடுவார்’ என்று இளையராஜா சொல்லியிருக்கிறார். லதாஜி வந்து பாடித் தர வேண்டும் என்றால் நாம் காத்திருக்க வேண்டும். அவ்வளவு பிஸி அவர். ஆனால், அண்ணன் அழைத்ததுமே வந்து பாடிக்கொடுத்தார். அதன்பிறகு இளையராஜா அண்ணன் பல பாடங்களில் அவரைப் பாட வைத்தார். ‘ஆனந்த்’ படத்துக்கு பாடியதற்கு பணம் வாங்க மறுத்துவிட்டார்.
எங்களுடைய இரண்டு குடும்பங்களையும் இணைத்தது நாடகக் கலை. அப்பாவைப் போல், லாதாஜியின் தந்தையும் சிறுவயது முதல் நாடகக் குருகுலத்தில் பயின்றவர். சிறுவயது தொடங்கி ஸ்திரீ பார்ட் உட்பட அனைத்து வேடங்களும் போட்டு நாடகத்தில் உயர்ந்தவர். சொந்தமாக நாடக மன்றம் தொடங்கியவர். அப்பா பம்பாயில் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’, ‘அசோகன்’ உள்ளிட்ட பல நாடகங்களை நடத்தினார். அப்போது மேடையில் வீராவேசமாக வசனம் பேசி நடித்ததைக் கண்ட லதாஜியின் தாயார், அப்பாவுக்கு தொண்டை கட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக மிளகு சூப் வைத்து லதாஜியிடம் கொடுத்தனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்பா நடிக்கும் காட்சி முடிந்து அவர் கிரீன் ரூமுக்கு வந்ததும், சூப்பை ஊற்றிக்கொடுத்து அப்பாவைக் குடிக்கச் செய்து அக்கறையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் லதாஜி. அப்பாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் முகநூலில் ஒரு வாழ்த்துப் பதிவைப் போட மறக்கமாட்டார். லதாஜி பற்றியும் அவருடைய குடும்பத்தார் பற்றியும் பகிர்ந்துகொள்ள இன்னும் எவ்வளவோ நினைவுகள் இருக்கின்றன” என்று நெகிழ்ந்துபோகிறார் ‘இளைய திலகம்' பிரபு.
நானும் சிலமுறை அன்னை இல்லத்தில் லதாஜியைச் சந்தித்திருக்கிறேன். பின்னர், நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பின்னர் அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். அதை ராம்குமார் அவர்களிடம் சொன்னபோது என்னை மும்பைக்கு அனுப்பி வைத்தார். தன்னுடைய குரலால் கோடீஸ்வரி ஆனா லதாஜி, மிக எளிமையான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் குடியிருந்தார். அன்னை இல்லத்திலிருந்து வருகிறேன் என்றதும் அவரே வந்து கதவைத் திறந்து வரவேற்று அழைத்துப்போனார். நல்ல உபசரிப்பு. அன்னை இல்லத்துக்கும் தனக்குமான பாசக் கதைகளை அவர் நினைவு கூர்ந்து பேசித் தீர்த்தார். குடியசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் கையால் பாரத் ரத்னா விருது பெற்றபோது ‘எனது அண்ணன் ஸ்ரீ சிவாஜி கணேசனுக்குக் கொடுத்த பின்பு அல்லவா எனக்குக் கொடுத்திருக்க வேண்டும்?’ என்று குடியரசு தலைவரிடமே லதாஜி பகிரங்கமாகக் கேட்டதை என்னிடம் பகிர்ந்தார். சிவாஜி கணேசன் - லதா மங்கேஷ்கர் இடையிலான பாசப் பிணைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் போதும் என நினைக்கிறேன். அவரைச் சந்தித்தபோது, நானும் நடிகர் திலகமும் இணைந்திருக்கும் புகைப்படத்தில் அவரிடம் ஆட்டோகிராஃப் போடும்படிக் கேட்டேன். அதில் அவர் கையெழுத்திடும்போது சிவாஜியின் புகைப்படத்தைப் பார்த்து கண்கள் உடைந்து அழுதார். ‘அண்ணா.. அண்ணா’ என்று அரற்றினார்.
கட்டுரையாளர், இந்திய -ரஷ்ய தொழில் வர்த்தக சபையின் செயலாளர்.
தொடர்புக்கு: russiathangappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago