உலகின் பெரும்பாலான திரைப்பட இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களும் திரைக்கதை என்பதை இப்படித்தான் தொடங்குவார்கள். முதலில் ஒரு வரிக் கதை (ஒன்லைன்) மனதில் தோன்றியதும் அதிலிருந்து தொடங்கி, முழுக் கதையையும் ஓரளவு மனதில் வைத்துக்கொண்டு எழுதத் தொடங்குவார்கள். அப்படித் தொடங்கும்போது கதை விவாதங்கள் நடைபெறும். அதில் கதை முழுவதும் விரிவாக முடிவானதும் திரைக்கதை எழுதப்படும்.
விலகி எழுதும் சகோதரர்கள்
ஆனால், மனதில் தோன்றும் காட்சியை முதலில் எழுதுவது; அதன்பின் அதற்குத் தொடர்பான வேறொரு காட்சியை எழுதுவது; அதன்பின் அதிலிருந்து இன்னொரு காட்சி; இப்படி மனதில் தோன்றியபடி எழுதிக்கொண்டே போய் ஒரு திரைக்கதையை முடித்தால் எப்படி இருக்கும்? அதுதான் கோயன் ப்ரதர்ஸ் என்று அழைக்கப்படும் ஜோயல் மற்றும் ஈதன் கோயனின் (Coen Brothers அல்லது Joel & Ethan Coen) பாணி. இவர்களது திரைக்கதைகள் பெரும்பாலும் தங்கள் இஷ்டத்துக்கு எழுதப்பட்டவையே. இவர்களது திரைக்கதைகள் பெரும்பாலும் இப்படியே எழுதப்பட்டு, அதன்பின் இருவரும் சேர்ந்து அமர்ந்து அதை நன்றாகச் செப்பனிட்டு, பின்னர் படமாக எடுப்பதே வழக்கம்.
அவல நகைச்சுவையில் அசத்தல்
இந்தச் சகோதரர்கள் கையாளாத வகைகளே (Genres) இல்லை. வெஸ்டர்ன் (ட்ரூ கிரிட்), த்ரில்லர் (ஃபார்கோ, த மான் ஹூ வாஸ் நாட் தேர், நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்) நகைச்சுவை (ரைஸிங் அரிஸோனா, த ஹட்சக்கர் பிராக்ஸி, ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ? பர்ன் ஆஃப்டர் ரீடிங், ஹெய்ல் சீசர்), ஹாரர் (பிளட் சிம்பிள்), கேங்ஸ்டர் (மில்லர்ஸ் கிராஸிங்), ப்ளாக் காமெடி (த பிக் லெபோவ்ஸ்கி, த லேடி கில்லர்ஸ்), ரொமாண்டிக் காமெடி (இன்டாலரபிள் க்ரூயல்டி), காமெடி ட்ராமா (இன்ஸைட் லீவின் டேவிஸ்) என்று பல வகைகளிலும் படங்களை எழுதி இயக்கியுள்ளனர். அதிலும், மேலே உள்ள உதாரணங்களில் சில படங்கள் ஓரிரு வகைகளிலும் அடங்கும். இவர்களின் பல படங்களில் அவல நகைச்சுவை (Black comedy) தூக்கலாக இருக்கும். ப்ளாக் காமெடி என்றால், கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளைப் பார்த்து நமக்குச் சிரிப்பு வருவது. அதிலும் குறிப்பாக, போகும்போக்கில் பலவித நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவதும் இதே ப்ளாக் காமெடியில்தான் அடங்கும். இதில் கோயன் சகோதரர்கள் வல்லவர்கள்.
ஆஸ்கர்களை அள்ளியவர்கள்
பல கோயன் ப்ரதர்ஸ் படங்களில் எடிட்டரின் பெயர் ரோடரிக் ஜேய்ன்ஸ்’ (Roderick Jaynes) என்று இருக்கும். அது இவர்களேதான். (இந்தப் புனைபெயருக்கும் ஒரு முழு சரித்திரத்தையே யோசித்தும் வைத்துள்ளனர். ஒரு பெரிய கேரக்டர் பயாக்ரஃபி). இதுவரை 13 ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையும் இவர்களுக்கு உண்டு. சிறந்த திரைக்கதைக்காக இரு முறை ஆஸ்கர்களும், சிறந்த இயக்குநர்களுக்காக ஒரு முறையும், சிறந்த படத்துக்காக ஒரு முறையும் ஆஸ்கர்கள் வாங்கியுள்ளனர்.
இவர்களுக்கு உலகம் முழுதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. காரணம், இவர்களின் படங்களில் ஊடாடும் அவல நகைச்சுவை, வசனங்கள், இவர்களின் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் போன்றவை. குறிப்பாக, கோயன் சகோதரர்களின் பல படங்கள், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும். ஃபார்கோ படத்தின் மின்னசோட்டா, ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ படத்தின் மிஸிஸிபி, பார்ட்டன் ஃபிங்க் படத்தின் ஹாலிவுட், த பிக் லெபோவ்ஸ்கியின் லாஸ் ஏஞ்சலீஸ் என்று பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
கறார் இயக்குநர்கள்
கோயன் ப்ரதர்ஸின் இன்னொரு விசேஷ அம்சம் என்னவெனில், திரைக்கதையில் எழுதப்பட்ட வசனங்களோடு தங்களது சொந்த வசனங்களையும் சிலமுறை நடிகர்கள் பேசுவதுண்டு. அப்படிப்பட்ட தருணங்களில், அந்த வசனங்களைப் பேச வேண்டாம் என்றும், திரைக்கதையில் இருக்கும் வசனத்தை மட்டும் பேசினால் போதுமானது என்றும் ஒவ்வொரு தடவையும் கோயன் சகோதரர்கள் நடிகர்களிடம் கறாராக மறுத்துவிடுவார்கள். இவர்களது திரைக்கதைகளும் அவ்வளவு துல்லியமான வசனங்களைக் கொண்டிருக்கும். இதற்கும் உதாரணமாக, இவர்களது ஃபார்கோ படத்தில், மின்னசோட்டாவில் இக்கதை நடைபெறும் இடத்தில் பேசும் பேச்சுவழக்குகள் இடம்பெற்றிருக்கும். மில்லர்’ஸ் க்ராஸிங் படத்தில் கேங்ஸ்டர்கள் பேசும் இயல்பான, கர்வம் மிக்க வசனங்கள் இருக்கும். இது அவர்களது எல்லாப் படங்களுக்குமே பொருந்தும்.
கதைக் கரு
கோயன் சகோதரர்களின் படங்கள் பலவற்றில் கையாளப்படும் கரு பேராசை. பணத்தை விரைவாகக் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பதால் ஏற்படும் சிக்கல்கள். இந்த சிக்கல்களைப் பல விதங்களிலும் இவர்களின் முதல் படமான ப்ளட் சிம்பிள், இண்டாலரபிள் க்ரூயல்டி, ஃபார்கோ, நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென், லேடி கில்லர்ஸ் என்று பல படங்களிலும் காணலாம். அதேபோல் அப்படிப்பட்ட நபர்களுக்கும் கோயன் ப்ரதர்ஸின் படங்களில் பல்வேறு தண்டனைகளும் வழங்கப்படும். சில சமயங்களில் கதாநாயகர்கள் கூட இதிலிருந்து தப்ப முடியாது. நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென் படம் ஒரு உதாரணம். கூடவே இவர்களின் சில படங்களில் கிட்நாப்பிங் எனப்படும் ஆட்கடத்தலும் பெரும் பங்கு வகிக்கும் (ஃபார்கோ, ரெய்ஸிங் அரிஸோனா, பிக் லெபோவ்ஸ்கி ஆகியவை சில உதாரணங்கள்).
அதேபோல் இவர்களின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட, அவர்களாலேயே அதிலிருந்து வெளிவர இயலாத அளவு அவர்களைச் சுற்றியுள்ள கதாபாத்திரங்களும் சம்பவங்களும் அவர்களை ஆட்டிப்படைப்பதையும் உணர முடியும்.
வசனமில்லாத காட்சிகளில் தொழில்நுட்பம்
கோயன் சகோதரர்களின் படங்களில் வசனங்கள் இல்லாத காட்சிகளில் நடைபெறும் சம்பவங்களும், அவற்றை இவர்களே எடிட்டிங் செய்திருக்கும் பாங்கும் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். இத்தகைய ஷாட்களில் எப்போதுமே இவர்களின் படங்களில் இருவேறு விதமான கதாபாத்திரங்கள் தங்களுக்குள் ரியாக்ட் செய்துகொள்வார்கள். அடுத்த முறை கோயன் சகோதரர்களின் படங்களைப் பார்க்கும்போது இந்த வசனங்கள் இல்லாத ரியாக்ஷன்களை (ஷாட் மற்றும் ரிவர்ஸ் ஷாட்) கவனித்துப் பாருங்கள். அதுபோலவே, வசனக் காட்சிகளைப் படமாக்கும்போது கோயன் சகோதரர்கள், கதாபாத்திரத்தின் பின்னணியும் புலனாகும் வகையில்தான் பெரும்பாலும் இயக்குவது வழக்கம். இப்படிப்பட்ட ஷாட்களை அகலமான லென்ஸ்களில், கேமராவைக் கதாபாத்திரத்தின் அருகே நகர்த்தியே படமாக்குவார்கள். அகலமான லென்ஸ்களை உபயோகிப்பதால், கதாபாத்திரத்தின் பின்னால் இருக்கும் பகுதிகள் நன்றாக விளங்கும். அது கதாபாத்திரத்துக்கு உயிரை அளித்து, ஆடியன்ஸ் மனதில் தங்களை அறியாமலேயே அந்தக் கதாபாத்திரத்தை எளிதில் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும்.
இருவருக்குமே ஸ்டான்லி க்யுப்ரிக்கே மிகவும் பிடித்த இயக்குநர். அவரது செய்நேர்த்தி இவர்களின் படங்களிலும் இருப்பதற்கு இதுதான் காரணம். இவர்களுக்கு இயல்பாக வரும் அவல நகைச்சுவை, க்யுப்ரிக்கின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ஜ்லவ்’ மற்றும் ‘எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச்’ படங்களில் இயல்பாக வந்துபோகும்.
திரை ரசிகர்களாக இருந்தால் தவறவே விடக் கூடாத இயக்குநர்களில் கோயன் சகோதரர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களின் படங்களைத் தொடர்ந்து பார்த்தாலே, நல்ல திரைப்படம் ஒன்றை நம்மால் இயக்கிவிட முடியும்.
தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago