இயக்குநரின் குரல்: சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை!

By க.நாகப்பன்

மெக்கானிக்கல் இன்ஜினீயர் என்கிற தகுதியுடன் வளைகுடா நாடுகளில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, தமிழ் சினிமா மீது கொண்ட காதலால் கோடம்பாக்கத்தில் அடைக்கலமானவர் மந்த்ரா வீரபாண்டியன். பாலாவின் ‘நாச்சியார்’, ‘வர்மா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக வேலை செய்தபின், ‘ட்வார்ப்ஸ்’ (dwarfs) என்கிற தனது முதல் படத்தை இயக்கி முடித்து இறுதிக்கட்டப் பணியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அவருடன் உரையாடியதிலிருந்து..

மந்த்ரா வீரபாண்டியன்

படத்தின் மையம் எதைப் பற்றியது?

இது உயரம் குறைவான ஒரு மனிதனின் கதை. குள்ள மனிதன் என்று தலைப்பு வைத்தால் உருவ கேலியாக ஆகிவிடும். அதைத் தவிர்க்க ‘ட்வார்ப்ஸ்’ (dwarfs) என்று தலைப்பு வைத்துள்ளோம்.

அஞ்சல்காரர் எம்.எஸ்.பாஸ்கர் தம்பதிக்கு இரட்டையர்கள் பிறக்கிறார்கள். மகன் வெங்கட் செங்குட்டுவன் உயரம் குறைவாகவும், மகள் இவானா இயல்பான உயரத்துடனும் வளர்கிறார்கள். இதனால் மகனையும் மகளையும் தனியாக வளர்க்குமாறு எம்.எஸ்.பாஸ்கருக்கு மருத்துவர்கள் அறிவுரை சொல்கிறார்கள். ஆனால், அதை அவர் கண்டுகொள்ளாமல் இருவரையும் சேர்த்தே வளர்க்கிறார். அப்படி ஒன்றாக வளரும்போது வெங்கட் செங்குட்டுவனின் தாழ்வு மனப்பான்மை எந்த லட்சியத்தையும் அடையவிடாமல் அவரைத் தடுக்கிறது. இச்சூழலில் உடன் பிறந்த சகோதரி இவானா, தன்னம்பிக்கையின் ஊற்றாக இருந்து எப்படி தன் சகோதரனை சாதனை படைக்க வைக்கிறார் என்பதுதான் கதை. உருவ கேலி செய்யக்கூடாது என்பதையும், அத்தகையக் கேலிக்கு ஆளாகும் மனிதர்கள் துவண்டுவிடக் கூடாது என்கிற தன்னம்பிக்கையை இப்படம் விதைக்கும்.

இந்தக் கதைக்கான தாக்கத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?

நகைச்சுவை என்றாலே உருவ கேலிதான் என்று மாற்றிவிட்டார்கள். எந்தத் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் உருவ கேலி தொடர்பான நகைச்சுவைக் காட்சிகளே இடம்பெறுகின்றன. இதைப் பார்க்கும் பள்ளிக் குழந்தைகள் தன்னுடன் விளையாடும் குழந்தைகளை அதேபோல் கிண்டல் செய்வதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறேன். நிறத்தை வைத்துக் கிண்டல் செய்வது, குண்டு, ஒல்லி என உருவத்தையும் உடல் உறுப்புகளையும் வைத்து வாய்க்கு வந்தபடி கிண்டல் செய்வது தொடர்ந்து நடக்கிறது. உருவத்தைப் பார்க்காதீர்கள். உள்ளத்தையும் அவர்கள் திறமையையும் பாருங்கள் என்று சொல்ல நினைத்தேன்.

நாயகன் வெங்கட் செங்குட்டுவனைக் கண்டுகொண்டது எப்படி?

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துக்குப் பிறகு உயரம் குறைவான மனிதர்கள் பற்றிய படம் தமிழில் வரவில்லை. சூர்யா சார் இதுபோன்ற படத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறியதை ஒரு பேட்டியில் படித்தேன். அவரை மனதில் வைத்துதான் கதையை எழுதினேன். முதல் படம் என்பதால் அவரை நெருங்குவதில் தயக்கம் இருந்தது. இந்நிலையில் நிஜமாகவே உயரம் குறைவாக இருக்கும் ஒரு மனிதரைத் தேடினேன். வெங்கட் செங்குட்டுவன் ஆறேழு வருடங்களாக என்னை ஃபாலோ செய்து வந்தார். திடீரென்று அவரையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. 4 மாதங்கள் நடிப்புப் பயிற்சி பெற்று, கதையை அழகாக உள்வாங்கி, கஷ்டமான 5 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அறிமுக நடிகராக அவர் பெரிய அளவில் கவனம் பெறுவார்.

புதுமுக நடிகரை நாயகனாக்கி அழகு பார்க்க முழு ஒத்துழைப்பு கொடுத்த ஜி.எஸ்.சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் 39 நாட்களில் படத்தை முடிக்க அவர்களே முழு முதல் காரணம்.

எம்.எஸ்.பாஸ்கர், இவானா உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் உள்ளதா?

குறை தெரியாமல் வளர்க்கும் ஞானத் தகப்பன் கதாபாத்திரம் எம்.எஸ்.பாஸ்கர் சாரால் முழுமை அடைந்துள்ளது. பள்ளிச் சிறுமி, கல்லூரி மாணவி, திருமணமான பெண் என்று மூன்று காலகட்டங்களில் ஒரே நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு சரியாகப் பொருந்தக்கூடிய நடிகை என்பதால் இவானாவை நடிக்கவைத்தோம். ‘ஆடுகளம்’ நரேன், ‘குக் வித் கோமாளி’ சுதர்சன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, ஆராத்யா என துணைக் கதாபாத்திரங்களையும் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்தோம்.

திருநெல்வேலியைப் பின்னணியாகக் கொண்டு படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 90களில் தொடங்கும் கதை மூன்று வித மாற்றங்களுக்கு உட்பட்டு 2000, 2020, தற்போதைய காலகட்டம் என விரியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE