இயக்குநர் ஸ்டான்லி க்யுப்ரிக் தனது ஒரு படம்போல் மற்றொரு படம் இல்லாதவண்ணம் ஒவ்வொரு படத்தையும் உருவாக்கிய படைப்பாளுமை கொண்டவராக விளங்கினார். இதை அவரது படங்களின் வழியே சென்ற வாரம் கவனித்தோம். இந்த வாரம் அவரது படங்களின் விசேஷத் தன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
400 நாட்கள்
ஸ்டான்லி க்யுப்ரிக் ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட். ஒரு படம் எடுக்கையில், ஷாட்களுக்குத் தேவையான விஷயங்கள் அவருக்குத் திருப்தி அளிக்கும்வரை விடமாட்டார். ஷாட்களில் உபயோகிக்கப்படும் அனைத்தையுமே மிகவும் துல்லியமாகக் கணித்து வைத்திருப்பார். அதேபோல் நடிகர்களும் தனக்குத் தேவையான வகையில் நடிக்கும்வரை திரும்பத் திரும்ப ஷாட்களை எடுத்துக்கொண்டே இருப்பார். அவரது ‘Eyes Wide Shut’ படம், தொடர்ச்சியாக 400 நாட்கள் எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையை இன்றுவரை வைத்துள்ளது. எண்ணற்ற ரீடேக்குகளை அவர் எடுத்துக்கொண்டே இருந்ததால் படத்தின் பட்ஜெட் எகிறியது. வேலை செய்பவர்களும் சோர்வடைந்தனர். அதேபோல் அவரது ‘The Shining’ படத்தில், ஒரு குறிப்பிட்ட ஷாட் (கதாநாயகனைப் பார்த்துப் பயந்து அவனது மனைவி மெல்லப் பின்வாங்கும் பிரபலமான ஷாட்) 127 முறைகள் படமாக்கப்பட்டு, கின்னஸில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், க்யுப்ரிக்குக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவரது எல்லாப் படங்களுமே கிட்டத்தட்ட இப்படித்தான் எடுக்கப்படும். இந்த ஷாட்டை இவ்வளவு முறை எடுத்ததால் கதாநாயகியாக நடித்த ஷல்லி டுவால் மிகக் கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் படம் முழுதுமே க்யுப்ரிக் அவரைக் கடுமையாகத் திட்டினார். இவையெல்லாம் சேர்த்து, ஷெல்லி டுவால் நடைப்பிணம் போல் படப்பிடிப்பு முழுதும் நடமாடியதில் முடிந்தது. ஆனால், க்யுப்ரிக்குக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரம்தான் தேவை என்பதால், அவர் திட்டமிட்டே ஷெல்லி டுவாலை இப்படி மாற்றியிருப்பது படம் முடிந்த பின்னர்தான் தெரிந்தது.
கோர்வையான படத்தொகுப்பு
ஒவ்வொரு காட்சியையும் பல விதங்களில் பற்பல டேக்குகளில் படம்பிடித்துக்கொண்டு, அவற்றையெல்லாம் எடிட்டிங்கில் பரப்பி வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாகச் சேர்த்துக் காட்சிகளை உருவாக்குவதே க்யுப்ரிக்கின் வழக்கம். இதன்மூலம், முழுப் படத்துக்கும் ஒருவித விசேஷத் தன்மையை அளிக்கலாம் என்பது அவரது கருத்து. அவரது படங்களைப் பார்க்கையில், தொடக்கத்திலிருந்து முடிவுவரை ஒருவிதமான கோர்வை இருக்கும். படம் பார்க்கும் நமது உணர்ச்சிகளை இந்தக் கோர்வை பாதிப்பதை உணர முடியும். இது அவரது எடிட்டிங் டேபிள் மேஜிக்தான்.
மேஸ்ட்ரோக்களின் இசை
க்யுப்ரிக்கின் படங்களில் இசை பெரும் பங்கு வகிக்கும். அவரது பெரும்பாலான படங்களில், ஐரோப்பிய க்ளாஸிகல் இசையைத்தான் உபயோகப்படுத்தியிருப்பார். உயிரோடு இருக்கும் இசையமைப்பாளர்களை விடவும், இறந்துபோன மேஸ்ட்ரோக்களின் இசைதான் தனது படங்களுக்குப் பொருந்தும் என்பது அவரது கருத்து. இதனால் அவரது பல படங்களில் இசை அற்புதமான சில தருணங்களைக் கொடுக்கும். குறிப்பாக Eyes Wide Shut படத்தின் பின்னணி இசை. இதில் பல இசைக்கலைஞர்களின் இசைக்குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக, அதில் வரும் Masked Ball சீக்வென்ஸ் புகழ்பெற்றது. இந்த சீக்வென்ஸில் ஒலிக்கும் பின்னணி இசை, ஜோஸ்லின் பூக் என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்டது.
அதில் ஒரு எழுத்துகூட எப்படிக் கேட்டாலும் புரியாது. ஆனால் மிகவும் அமானுஷ்யமான தன்மையைக் கொடுக்கும். அந்தப் பாடல் உண்மையில் ஒரு ரொமேனியன் பிரார்த்தனைப் பாடல். அதை முற்றிலுமாக ரிவர்ஸ் செய்து, பின்னிருந்து ஒலிக்கவைத்துப் படமாக்கியிருப்பார்கள். இது க்யுப்ரிக்கின் யோசனைதான். இதனால்தான் இந்தப் பாடல் இன்றும் நினைவுகொள்ளப்படுகிறது.
Barry Lyndon படமும் அப்படிப்பட்ட இசையைப் பல காட்சிகளிலும் கொண்டிருக்கும் படம்தான். இப்படிப்பட்ட இசைக்குறிப்புகளில் தன் படத்துக்குப் பொருத்தமானவை எவை என்று அறிவதற்காக, பல நாட்கள் தொடர்ந்து க்ளாஸிகல் இசையையே கேட்டுக்கொண்டிருப்பார் க்யுப்ரிக். அப்படி அவர் கேட்கும் ஆயிரக்கணக்கான இசைக்கோர்ப்புகளில் ஏதேனும் ஒன்றில் எதுவோ ஒன்று அவரை பாதித்துவிடும். அந்தக் குறிப்பிட்ட காட்சியின் நேர்த்தியை அந்த அம்சம் இன்னும் மேலே கொண்டுசெல்லும் என்பது அப்போது க்யுப்ரிக்குக்குத் தெளிவாகத் தெரியும். உடனடியாக அந்த இசைக்குறிப்பை உபயோகப்படுத்துவார். அவரது பல படங்களின் க்ளாஸிகல் இசை, இப்படி எண்ணற்ற இசைக்கோர்ப்புகளைக் கேட்டே உருவாக்கப்பட்டதுதான்.
ஒளிப்பதிவும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸும்
ஒளிப்பதிவு பற்றிய க்யுப்ரிக்கின் புரிதல் அளப்பரியது. ஒரு புகைப்படக் கலைஞராகவே தனது வாழ்க்கையைத் தொடங்கியதால், தன் படங்களுக்கு எப்படியெல்லாம் ஷாட்கள் அமைக்க வேண்டும், எத்தகைய லென்ஸ்களை உபயோகிக்க வேண்டும் என்பதெல்லாம் க்யுப்ரிக்குக்கு அத்துப்படி. தனது ‘பேரி லிண்டன்’ படத்துக்காகச் சொந்தமாகவே சில லென்ஸ்களை உருவாக்கியிருக்கிறார் க்யுப்ரிக். ஹப்பிள் டெலஸ்கோப்பில் நாஸா உபயோகித்த அதே லென்ஸ்களை எடுத்து, அவற்றில் மாற்றங்கள் செய்து ‘பேரி லிண்டன்’ படத்தில் இயற்கையான மெழுகுவர்த்தி வெளிச்சத்தைப் படமாக்கியிருக்கிறார். அதைப் போலவே, ஸ்டெடிகேம் கேமரா கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்தில், ‘ஷைனிங்’ படத்துக்காக அதைக் கச்சிதமாக உபயோகித்திருக்கிறார்.
2001- A Space Odyssey படத்தில் உபயோகிக்கப் பட்ட ஸ்பெஷல் எஃபக்ட் ஷாட்கள் இன்றுவரை பிரபலம். இப்போதெல்லாம் கணினிகளைக் கொண்டு க்ராஃபிக்ஸ் செய்யக்கூடிய ஷாட்களையெல்லாம் அநாயாசமாக ஒருசில தந்திரமான ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் உத்திகளை உபயோகித்து எப்போதோ எடுத்துவிட்டார் க்யுப்ரிக். இப்படத்துக்காகக் க்யுப்ரிக்குக்கு அவரது ஒரே ஒரு ஆஸ்கர் கிடைத்தது (ஸ்பெஷல் எஃபக்ட்ஸுக்காக). இப்படத்தின் ஸ்பெஷல் எஃபக்ட்கள் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். மிக மிக எளிய முறைகளைக் கொண்டே இப்போதும் நாம் ஆச்சரியப்படும் வகையில் எஃபக்ட்களை உருவாக்கியது க்யுப்ரிக்கின் மூளை. இன்றும் உலகத்தின் பல இயக்குநர்களாலும் ஸ்டுடியோக்களாலும் கூர்ந்து கவனிக்கப்படும் படம் இது. இன்றுவரை பல படங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் விளங்குகிறது.
எந்தப் படமாக இருந்தாலும், அவற்றின் ஷாட்களை உருவாக்கும்போது பின்னணியில் இடம்பெறும் அத்தனை விஷயங்களையும் ஒவ்வொன்றாகத் தேர்வு செய்து, காட்சியின் இயல்புத்தன்மையை அதிகரிப்பதே க்யுப்ரிக்கின் வழக்கம். படத்தில் இடம்பெறும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுடனும் க்யுப்ரிக் நீண்ட நேரம் விவாதிப்பது மிகவும் சாதாரணம். குறிப்பாக, ஒளிப்பதிவாளர்களுடன் ஒவ்வொரு ஷாட்டின் போதும் கேமரா கோணங்கள், லென்ஸ்கள் போன்றவற்றைப் பற்றி எக்கச்சக்கமாக விவாதிப்பார். இதனால்தான் அவரது படங்களின் காட்சிகள், கவிதைகளைப் போல அமைந்து நமது மனதில் இப்போதும் நீங்காத பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
க்யுப்ரிக்கைப் பற்றிய மிகப் பெரிய வதந்தி ஒன்றை நீங்கள் அறிந்திருக்கலாம். 1969-ல் அப்போலோ 11 விண்கலம் நிலாவில் இறங்கிச் சரித்திரம் படைத்தது அல்லவா? அந்த முயற்சி முற்றிலும் க்யுப்ரிக்கால் இயக்கப்பட்ட ஒரு போலியான திரைப்படம் மட்டுமே என்பது இன்றுவரை பல கான்ஸ்பிரஸி தியரிஸ்ட்களால் சொல்லப்படும் வாதம். இதற்கு ஆதாரமாக, பின்னர் அவர் எடுத்த ‘ஷைனிங்’ படத்தில் ஆங்காங்கே க்யுப்ரிக் வைத்திருக்கும் அப்போலோ -11 சம்மந்தமான சில எண்களையும் தகவல்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆதர்ச இயக்குநர்
தனது படங்களின் மூலம் க்யுப்ரிக் சொல்லவந்த செய்திகள் என்னென்ன? ஒவ்வொரு படத்துக்குமான நோக்கம் என்ன? இது எதையும் க்யுப்ரிக் வெளிப்படையாகச் சொல்ல விரும்பியதில்லை. படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு என்ன விதமான புரிதல்கள் ஏற்படுகின்றனவோ, அவையெல்லாமே அவர்களை மேலும் புதிய விஷயங்களை நோக்கிச் செயல்பட வைக்கின்றன என்பது அவரது கருத்து. மேலும், எதையுமே வெளிப்படையாகச் சொல்வதைவிட, ஆடியன்ஸுக்கு ஒரு சிறிய தொடக்கத்தைக் கொடுத்துவிட்டால், அவர்களே யோசித்துப் புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதும், அதுதான் நேரடியாகச் சொல்வதைவிடவும் பலமானது என்பதும் அவரது கருத்து.
உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக ஸ்டான்லி க்யுப்ரிக் சினிமாவுக்குச் செய்த சேவை மகத்தானது. அவரது படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துப் புரிந்துகொள்வதன்மூலம் நமது மனதிலும் வாழ்க்கையிலும் பல ரசனை மாற்றங்கள் ஏற்படுவதை நம்மால் உணர முடியும். உலகெங்கும் உள்ள பல இயக்குநர்களுக்கு ஸ்டான்லி க்யுப்ரிக்தான் ஆதர்சம். அத்தகைய ஸ்டான்லி க்யுப்ரிக் பற்றிய பல தகவல்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago