திருமணம் முதலான விழாக்களாக இருந்தாலும் சரி; பண்டிகை புத்தாண்டு போன்ற பொது விழாக்களாக இருந்தாலும் சரி, மெல்லிசை நிகழ்ச்சி நடத்துவது என்பது தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு பழக்கம். இதற்கு இன்றளவிலும் மவுசு குறையாமல்தான் இருக்கிறது.
ரெண்டு ரூபாய் சம்பளம்
பாரிமுனையிலிருக்கும் கோகலே ஹாலிலும் மைக் இல்லாத கச்சேரிகள் நடக்கும். அதன் தொடர்ச்சியாகத்தான் இசைக் குழுக்கள் சென்னையைச் சுற்றி வேரூன்றின என்கிறார் ஏ.வி.ரமணன். 1969-ம் ஆண்டிலிருந்து பாடத் தொடங்கி, 70-களில் மியூஸியானோ என்னும் இசைக் குழுவை இவர் தொடங்கினார். சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களின் கவனம் இசையின்மீது திரும்புவதற்குக் காரணமாக இருந்தவர். ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கும் மேலான மேடைக் கச்சேரி அனுபவம் அவரின் பேச்சில் வெள்ளமாய்ப் பாய்கிறது.
“சுஜா ஆர்ட்ஸ் கிளப் (வில்லியம்ஸ் கீபோர்ட் மாஸ்டர் அன்றைக்கு ஆர்மோனியம் வாசிப்பார்), டி.பி.ராமச்சந்திரன், காமேஷ்-ராஜாமணி, டி.எஸ்.சாரங்கபாணி, மயிலை சண்முகம், வீரமணி, துளசி (பெண் குரலில் பாடும் கலைஞர்), ரேணுகா (அனுராதா ஸ்ரீராமின் அம்மா), தாஸ் டேனியல் (வயலின்) போன்ற பலர் கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது. மயிலை சண்முகம் குழுவில்தான் நான் முதலில் பாட ஆரம்பித்தேன். அதன் பின் ராஜாமணி குழுவில் பாடினேன். ஒரு கச்சேரி பாடினால் ரெண்டு ரூபாய்தான் கிடைக்கும். மேடையில் சம்மணமிட்டுதான் அன்றைக்குப் பாட வேண்டும். டை கட்டிக்கொண்டு பாடும் என்னை பயங்கரமாக கிண்டல், கேலி செய்வார்கள். மைக்கைக் கையில் பிடித்தபடி பாடும் பாணியை ஆரம்பித்து வைத்தவனே நான்தான்.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை மிட்லண்ட், சபையர், ஓடியன், காசினோ, தேவி போன்ற திரையரங்குகளில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடக்கும். 1972-லிருந்து 1976-வரை இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் பின் இந்த நிகழ்ச்சிகளுக்கும் கேளிக்கை வரி வசூலிக்கப்படும் என்று அரசு நிர்ப்பந்தித்ததையடுத்து, திரையரங்குளில் நடக்கும் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது” என்றார்.
காலம் உறைந்த ஒளிப்படம்
வட சென்னையின் தங்கசாலை பகுதி. ‘சிந்து பைரவி’ எனும் ஆர்க்கெஸ்ட்ரா இசைக்குழுவின் அலுவலகம் அது.
“10 வருசத்துக்கு முன்னாடி வந்திருக்கணும். அப்பெல்லாம் இந்த இடமே கலகலன்னு இருக்கும்” என்கிறார் அந்த இசைக் குழுவின் தலைவர் ரவி. “நேரமிருந்தா வாங்களேன்… ஒருத்தரை அறிமுகப்படுத்துறேன்” என்று பைக்கில் அழைத்துச் செல்கிறார். ஐந்து நிமிடப் பயணத்துக்குப் பின்னர், ஒரு சந்துக்குள் நுழைகிறது பைக். மெட்ரோ லாரியில் தண்ணீர் பிடிக்க அலைமோதும் பெண்களைக் கடந்து உள்ளே சென்றால் எட்டுக்குப் பத்து என்ற அளவில் சிறிய அறை. புகழ்பெற்ற கீபோர்டு இசைக் கலைஞர் குணாளன் மாஸ்டரின் வீடு அது. மெலிந்த உடலுடன் துணி துவைத்துக்கொண்டிருந்த குணாளனின் மனைவி நிர்மலா நம்மை வரவேற்கிறார். அவர் ஒருகாலத்தில், புகழ்பெற்ற மேடைப் பாடகி. சில புகைப்படங்களை எடுத்துக்காட்டுகிறார் நிர்மலா. ஒரு புகைப்படத்தில் குணாளன் நிர்மலா தம்பதியிடம் ஆசீர்வாதம் வாங்குபவர் டிரம்ஸ் சிவமணி.
“ஒவ்வொரு ஜனவரி முதல் தேதியிலும் சிவமணியை இதே வீட்டுல பாக்கலாம். இவங்க மேல அவ்ளோ மதிப்பு அவருக்கு” என்கிறார் ரவி.
வீட்டின் மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய புகைப்படத்தை எடுத்துக் காட்டுகிறார் நிர்மலா. காலம் உறைந்திருக்கும் அப்புகைப்படம், அந்தக் கால ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டது. கர்னாடக இசைக் கச்சேரியைப் போல, அதில் இசைக் கலைஞர்கள் முதல் பாடகர்கள் வரை அனைவரும் அடுக்கடுக்கான மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். குழுவின் ஒரே ஒரு பெண் நிர்மலாதான்.
“அப்பெல்லாம் உக்காந்துக்கினுதான் பாடுவோம்” என்கிறார் நிர்மலா.
மெல்லிசை மன்னனின் பரிசு
குணாளன் நினைவுகளை தொடர்ந்து மீட்டினார்.. “முதலில் ஒத்தவாடை கொட்டகைகளில் நாடகம்தான் நடக்கும். மன்னை ஜெயராமன், நடிகர் ஜெய்கணேஷ் ஆகியோர் அங்கு நாடகம் போடுவார்கள். அந்த நாடகத்துக்கு ஆர்மோனியம் வாசிப்பேன்.
1963-ல் ஜோதி இன்னிசைக் குழுவைத் தொடங்கினேன். தபேலா தேவநாதன், டபுள் பங்கூஸ் லஷ்மணன், கிடாரிஸ்ட் மைக்கேல் ஆகியோர் பாடுவார்கள். நான் ஆர்மோனியம் வாசித்தபடி சில பாடல்களைப் பாடவும் செய்வேன். ரயில்வேயில் பணிபுரிந்த ராஜி, பேஸ் வாய்ஸ் பாடுவான். மதன்குமார், ஷார்ப் வாய்ஸ் பாடுவான். இவன் பாடியதைக் கேட்ட டி.எம்.எஸ், தன் விரலில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றிப் போட்டாரென்றால் எப்படிப் பாடியிருப்பான்னு பார்த்துக்கங்க.
இசையால் இணைந்தவர்கள்
திருலோகசந்தரின் உறவினர் வீட்டு திருமண வரவேற்பில்தான் என்னுடைய குழுவில் முதன்முதலாக நிர்மலா பாடினார். நிகழ்ச்சிக்கு திருலோகசந்தரும் வந்திருந்தார். அவர் முதன்முதலாக இயக்கிய ‘நானும் ஒரு பெண்’ திரைப்படம் வந்திருந்த நேரம். அதில் பி.சுசீலா பாடிய, ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ பாடலை நிர்மலா பாடியதைக் கேட்டு, எங்கோ மண்டபத்தின் பின்னால் அமர்ந்திருந்த திருலோகசந்தர் மேடைக்கு அருகில் வந்து, மீண்டும் பாடச் சொன்னார்.
நிர்மலா அப்போதே ஒரு நாளைக்கு 4 புரோகிராமுக்கு பாடும் பிஸியான சிங்கர். இரண்டு பேரும் ஒரே தொழில்ல இருக்கிறதால ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கும்னு திருமணம் பண்ணிக்கிட்டோம். `கூத்தாடி’ என்னும் திரைப்படத்தில் பின்னணியும் பாடியிருக்கிறார் நிர்மலா.
என்னிடம் தயாரானவர்கள் எல்லாம் இன்னைக்கும் நல்லா இருக்காங்க. எனக்குத் தொடர்ந்து விசுவாசமா இருக்கிறவங்க குறிப்பா ரெண்டு பேர். ஒருவர், ஆரம்ப காலத்தில் நான் மேடையேற்றி அழகு பார்த்த டிரம்ஸ் சிவமணி. இன்றைக்கு அவர் உலகப் புகழ்பெற்ற டிரம்மர். எந்த பந்தாவும் இல்லாம என்மேல அன்பை செலுத்துபவர். இன்னொருத்தர் நான் தயார் பண்ண பாடகர் விக்டர்” என்றார் குணாளன் அடுத்த ரவுண்ட் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவியபடி.
(தி இந்து சித்திரை மலர் 2016-ல் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago