2021ஆம் ஆண்டை ரீவைண்ட் செய்து பார்த்தால் 10 படங்களைத் தாண்டி தமிழ் சினிமா ஏமாற்றத்தையே பரிசாகத் தந்துள்ளது.
திரையரங்குகள், ஓடிடி தளங்களில் 160க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் பல ஜானர்கள் காணாமல் போயுள்ளன. டெம்ப்ளேட் சினிமாக்கள், கமர்ஷியல் சினிமாக்கள் வழக்கம்போல் வெளிவந்தாலும் சில நம்பிக்கை அளிக்கும் படைப்பாளிகளையும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. மூத்த இயக்குநர்களில் சிலர் மட்டுமே முத்திரை பதிக்க, இளம் இயக்குநர்கள் பலர் துணிச்சலான முயற்சியுடன் களம் இறங்கி வாகை சூடியுள்ளனர்.
சென்டிமென்ட் பஞ்சம்
நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் கலந்த குடும்பப் படங்களை எடுக்க இயக்குநர்கள் இல்லாதது பெரும் துயரம். ‘அண்ணாத்த’ படம் சென்டிமென்ட் படமாக இல்லாமல், திசை தெரியாமல் திணறி ஆக்ஷனுக்கு ஆதரவளித்தது. அண்ணன் - தங்கை பாசம் மீம் மெட்டீரியலாக மட்டுமே மிஞ்சியதே தவிர, படம் எடுபடவில்லை. ‘விஸ்வாசம்’ படத்தில் உணர்வுபூர்வமான காட்சிகளில் ஒன்றவைத்த இயக்குநர் சிவா, இதில் ரஜினி என்கிற நாயக பிம்பத்துக்கு நியாயம் செய்யாததுதான் வருத்தம். படத்தின் வசூல் நிலவரம் சாதகமாக இருந்தாலும், படத்துக்குரிய வரவேற்பு முரணாக இருந்தது.
இயக்குநர் இரா.சரவணன் ‘உடன்பிறப்பே’ படத்தில் எமோஷனில் கட்டிப்போட்டு பாசத்தைப் பங்கு போட்டார். பாலியல் பலாத்காரம் என்று திரைக்கதை திசைமாறியதும் குடும்பப் படத்துக்குரிய நிறைவை அளிக்கத் தவறினார்.
காணாமல் போன காதல் படங்கள்
‘‘ஐ லவ் யூ' சொல்வதுதான் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டூயட் பாடல்கள் இல்லாமல் காதலைச் சொல்ல முடியாதா?’’ என்று இயக்குநர் மகேந்திரன் பல முறை ஆதங்கப்பட்டார். அந்த அளவுக்கு நூற்றுக்கும் மேலான தமிழ்ப் படங்கள் காதலை மையமாகக் கொண்டே வெளிவந்து கொண்டிருந்தன. அதில் ஆக்ஷன், டிராமா, த்ரில்லர், ஃபேண்டஸி என வேறு சில அம்சங்கள் சேர்க்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முழுமையான காதல் படம் என எதுவும் வெளிவராதது ஆச்சரியம் அளிக்கிறது. ‘மாஸ்டர்’ படத்தில் ஸ்பூஃப் பாணியில் முந்தைய காதல் படங்கள் கிண்டல் செய்யப்பட்டன. காதல் கிளைக்கதையாகக்கூட இல்லை. முன்னணி இயக்குநர்கள், இளம் இயக்குநர்கள்கூட காதல் என்கிற அம்சத்தைக் கண்டுகொள்ளவில்லை. செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படமும் பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. இதுபோன்ற சில ஜானர்களைத் தமிழ் சினிமா இயக்குநர்கள் பயன்படுத்தவில்லை. கல்லூரியைக் களமாகக் கொண்ட படங்கள் வருவதும் குறைந்துவிட்டது.
மாற்று முயற்சிகள்
முன்பெல்லாம் சாதி/ மதப் பிரச்சினை, சாதிப் பெருமை, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினை என எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அப்பிரச்சினையின் மையம் காதலாக இருக்கும். இப்பொதெல்லாம் நேரடி அரசியல் படங்களே வந்துவிடுவது நல்ல மாற்றம். ‘ஜெய் பீம்’, ‘கர்ணன்’, ‘மாநாடு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ரைட்டர்’ போன்ற தீவிரமான கதைக்களம் கொண்ட படங்களே அதற்கான நிகழ்கால சாட்சிகள். அந்த வகையில் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் போன்ற இயக்குநர்கள் வரிசையில் மாரி செல்வராஜ், த.செ.ஞானவேல், ஃப்ராங்ளின் ஜேக்கப் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
நிஷாந்த் களிதிண்டியின் ‘கடைசீல பிரியாணி’ வித்தியாசமான, புதுமையான, அட்டகாசமான திரை அனுபவத்தைத் தந்தது. சிறிய பட்ஜெட்டில் கதைக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் படம் எடுப்பது எப்படி என்பதற்கான உதாரணமாகவும் திகழ்ந்தது.
அரதப் பழசான டெம்ப்ளேட் படங்கள்
பரிசோதனை முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு சில படங்கள் மட்டுமே வருகின்றன. அரதப் பழசான டெம்ப்ளேட் படங்கள் 100க்கும் குறையாமல் வந்துகொண்டே இருக்கின்றன. ‘அரண்மனை 3’,‘பேய் மாமா’, ‘நாயே பேயே’, ‘பேய் இருக்க பயமேன்’ போன்ற படங்களில் ‘அரண்மனை 3’ படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓடிடியில் வெளியான வினீத் வரபிரசாத்தின் ‘லிஃப்ட்’ படம் விமர்சன ரீதியில் பாராட்டப்பட்டது.
முத்தையாவின் ‘புலிக்குத்தி பாண்டி’, பிரபு சாலமனின் ‘காடன்’ ஆகியவை அவர்களின் முந்தைய படங்களையே நினைவூட்டின. நகைச்சுவை என்ற பெயரில் அல்லது ஒரே ஜானரில் கணக்கில்லாமல் வந்த படங்களும் வறட்சியில் மிரள வைத்தன. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையைப் பின்னுக்கு இழுக்காமல் இருக்க க்ளிஷே அம்சங்களை இயக்குநர்கள் தவிர்ப்பதே நல்லது.
பெண்மையப் படங்கள்
பெண்களை மையமாகக் கொண்டு அவர்களின் வலிகளை, உணர்வுகளை, ஆழமாகப் பதிவுசெய்த படங்களும் இந்த ஆண்டில் வெளிவந்தது ஆரோக்கியமானது. ராஜசேகர் துரைசாமியின் ‘கமலி ஃபிரம் நடுக்காவேரி’, கோகுலின் ‘அன்பிற்கினியாள்’ போன்ற படங்கள் முழுமையான திரை அனுபவத்தைக் கொடுக்காத நிலையில், வஸந்த் எஸ்.சாய் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’, ஞான. ராஜசேகரன் இயக்கிய ‘ஐந்து உணர்வுகள்’ ஆகியவை பெண்களின் உளவியலை நுட்பமாகக் கடத்தின.
பொழுதுபோக்கு சினிமா
எந்தப் படத்தின் சாயலும் இல்லாமல், மற்ற மொழியின் வாடை அடிக்காமல் ஒரு கமர்ஷியல் படத்தை இயக்குவது சாதாரணமான விஷயம் இல்லை. அதில் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ சிறந்த பொழுதுபோக்கு சினிமாவாக அப்ளாஸ் அள்ளியது. நெல்சன் திலீப்குமாரின் ‘டாக்டர்’ நகைச்சுவையில் வெற்றிக்கொடி நாட்டியது.
பாக்கியராஜ் கண்ணனின் ‘சுல்தான்’ தெலுங்கு மசாலாவை மணம் மாறாமல் மிக்ஸியில் அரைத்துக் கொடுத்ததால் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. ஆனந்த கிருஷ்ணனின் ‘கோடியில் ஒருவன்’ படம் வசூலைக் குவித்தாலும், கமர்ஷியல் அந்தஸ்தை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படம் வன்முறையின் உச்சத்தை ரத்தம் தெறிக்கத்தெறிக்க அப்பட்டமாகக் காட்டிப் பதறவைத்தது. இந்த வகைமையிலும் தமிழ் சினிமாவில் போதாமையே நிலவுகிறது.
இயக்குநர்களின் பின்னணியில் 2021ஆம் ஆண்டை அலசினால், தமிழ் சினிமாவுக்குக் கலவையான ஆண்டாகவே இருந்திருக்கிறது. போதாமைகள் நிறைய இருந்தாலும், நம்பிக்கை அளிக்கக்கூடிய முயற்சிகள், திரைப்படங்கள் ஓடிடி தளங்கள் வழியாக குறிப்பிடத்தக்க அளவுக்காவது சாத்தியமாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago