திரையில் மிளிரும் வரிகள் 6 - டோலக்கும் நதியலையும்

By ப.கோலப்பன்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நன்னுமியான் சோட்டுமியான் ஆகிய இருவரின் கச்சேரி. டோலக் வாசிப்பதில் இவர்கள் இருவரும் நிகரற்றவர்கள். பாடிக்கொண்டே அவர்கள் வாசித்த முறை சமஸ்தானத்தில் இருந்த அனைவரையும் கட்டிப்போட்டது. ஆனால், லாந்தர் விளக்கைத் துடைக்கும் மாண்பூண்டியா பிள்ளைக்குள் அவர்களின் இசை பெரும் பிரவாகத்தை ஏற்படுத்தியது. அவர் “ஆஹா” என்று தன்னையும் மீறிக் கத்தினார்.

“லாந்தர்க்கார வித்வான் பார்த்தீரா” என்று ஒருவர் கூற அரங்கமே சிரிப்பில் மூழ்கியது. இந்த நிகழ்ச்சியை மிருதங்க வித்வான் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லலிதாராம் விரிவாக எழுதி யுள்ளார். இப்படி அவமானப்பட்ட மான்பூண்டியா பிள்ளை அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மாரியப்பத் தவில்காரரிடம் கற்க ஆரம்பித்தார். அந்த வாத்தியத்தில் தனது திறமையை மான்பூண்டியா பிள்ளை வளர்த்துக்கொண்டாலும், அவருக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்ற சந்தேகம் மாரியப்பத் தவில்காரருக்கு இருந்தது. ஆகவே மான்பூண்டியா பிள்ளையிடம் வேறு ஏதாவது தாள வாத்தியத்தை வாசிக்க அறிவுறுத்தினார். ஏற்கெனவே டேப் வாசித்துப் பழக்கப்பட்டிருந்த மான்பூண்டியா பிள்ளை உடும்புத் தோல் போர்த்திய கஞ்சிராவை உருவாக்கினார். இப்படி கர்நாடக இசைக் கச்சேரிக்கு ஒரு புது வாத்தியத்தை அளித்த பெருமை டோலக்குக்கு உண்டு.

அந்த டோலக்கைச் சிறப்பாகப் பயன்படுத்திப் போடப்பட்ட பாடல்தான் ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தில் வரும் “போய் வா நதியலையே, இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா”.

இந்தப் படத்தில் எல்லாமே புதுமை. பாடலை எழுதியவர் புதுக்கவிதை உலகில் தடம்பதித்து ‘கருப்பு மலர்கள்’ எழுதிய நா. காமராசன். எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலத்தில் அவர் அறிமுகம் செய்த பாடலாசிரியர்களில் காமராசனும் ஒருவர். பாடலைப் பாடியவர் டி.கே. கலா. குழந்தையாய் இருந்தபோதே, ‘தாயில் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்று அகத்தியர் படத்தில் இடம் பெற்ற பாடலைப் பாடியவர்.

காமராசன் குறித்து விவரமாக எழுதியுள்ள கவிஞர் மகுடேஸ்வரன், மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் சிறப்பு என்கிறார்.

அத்துடன் கவிஞனுக்கே உரிய கவுரவத்தோடு, தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக காமராசன் நின்றுகொண்டதாக மகுடேஸ்வரன் தெரிவிக்கிறார். திரைத்துறை அனுபவங்கள் அவருக்குக் கசப்பையே அளித்தன. ஆதனால்தான், ‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்றார்.

காமராசனின் முதல் படம் ‘நீதிக்குத் தலைவணங்கு’. ‘கனவுகளே ஆயிரம் கனவுகளே’, ‘போய்வா நதியலையே’, ‘விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்’, ‘ஓ மானே மானே உன்னைத்தானே’, ‘மந்திரப் புன்னகையோ’ என்ற பல அற்புதமான பாடல்களை எழுதியிருக்கிறார்.

‘போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா’ பாடல் நடிகை லதா கனவு காணும் காட்சியாய் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அதே நதியலையை வா வா என்று அழைத்து ‘ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா’ என்கிறார்.

அனுபல்லவியில் வரும் ‘கனி தூங்கும் தோட்டம் முகம் பூத்தக் கோலம்’ என்ற வரிகளில் வரும் காட்சியில் அன்றைய இளைஞர்களை தூக்கம் இழக்கச் செய்யும் அழகுடன் தோன்றுவார் லதா. தொடர்ந்து ‘பனிவாடை காண உனைக் காண வேண்டும்’ என்ற வரிகள் ஒலிக்கின்றன.

‘நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம் மழைக்கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்’ என்று கூந்தலில் முகம் புதைக்கிறார் எம்.ஜி.ஆர். ‘இதுபோதும் என்று தடுமாறி இடம் மாறி மாறி சுகம் தேடி’ என்று இருவரும் காதலில் கிறங்கிப்போய், உறவாடும்போது ‘சரிபாதியாகி உயிர் காணும் இன்பம் பல கோடி’ என்கிறார்கள்.

எம்பெருமானது சேர்க்கையால் இன்பம் எய்திய பராங்குச நாயகியாகிய நம்மாழ்வாரும், ‘உன்னது என்னதாவியும் என்னதுன்னதாவியும் இன்ன வண்ணமே நின்றாய்’ என்கிறார். இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாகி சரிபாதியாகக் கலந்து நிற்கும் நிலை.

‘நுரைப்பூவை அள்ளி அலைசிந்த வேண்டும். அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும். வசந்தத்தை வென்று வரும் உன்னைக் கண்டு, மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்’.

நுரையைப் பூவாய் வருணிக்கிறார் கவிஞர். இருப்பினும் வசந்த காலத்தை விடச் சிறந்தவளான காதலியைக் கண்டுதான் வானவில்லின் நிறத்தை வானம் தேர்ந்தெடுத்ததாம். கவிதைக்கு எப்போதுமே பொய் அழகைத் தருகிறது.

“மெதுவாக வந்து இதழ் மூடி, பதமாக அன்பு நதியோடி, மணமேடை கண்டு, புதுமாலை சூடி குலமங்கை வாழ்க நலம்பாடி.” கள் வெறி கொள்ளும் முத்தம் கேட்கவில்லை. சத்தமில்லாமல் வேண்டும் என்கிறார் கவிஞர். டோலக் மட்டும் சத்தமாய்க் கேட்கிறது.

தொடர்புக்கு: bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்