ஒரு படம் ஐந்து கதைகள்! - அவியல் ஒரு பார்வை

By அரவிந்தன்

தமிழ்த் திரையுலகில் அசலான படைப்பூக்கம் கொண்ட படைப்புகள் வெளிவருவது நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. படைப்பூக்கமிக்க இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக்கொள்வதற்கான சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

குறும்படங்கள் இளைஞர்களின் படைப்பூக்கத்துக்கான மிக எளிதான, எளிய அறிமுகமாக விளங்குபவை. ஆனால், குறும்படங்களைப் பலரையும் எட்டச் செய்வதும் கடினமாகவே இருக்கிறது. இந்நிலையில் குறும்படங்களைத் திரையரங்குகள் மூலம் மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சியை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘பெஞ்ச் டாக்கீஸ்’ நிறுவனம் செய்துவருகிறது.

இளைஞர்களின் படைப்புத் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த முயற்சியின் முதல் கட்டமாகச் சென்ற ஆண்டு ஐந்து குறும்படங்கள் வெளியாயின. இந்த ஆண்டு ‘அவியல்’ என்னும் குறும்படத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. அல்ஃபோன்ஸ் புத்ரன், பாபி சிம்ஹா, நிவின் பாலி போன்ற திரைப் பிரபலங்களும் இந்த ‘அவிய’லில் பங்குபெற்றிருக்கிறார்கள்.

திரைக்கதை, படமாக்கம், நடிப்பு, படத்தொகுப்பு என ஏதாவது ஒரு அம்சம் ஒவ்வொரு படத்திலும் குறிப்பிடத்தக்க விதத்தில் உள்ளது. உணர்ச்சி அழுத்தங்கள் நிரம்பிய நீண்ட பேச்சாக விரியும் முதல் படம் சிறுகதைக்கே உரிய திருப்பத்துடன் முடிகிறது. இளைஞன் ஒருவனின் சபலங்களையும் சலனங்களையும் அங்கதச் சுவையுடன் காட்சிப்படுத்தும் ‘சுருதி பேதம்’, இளைஞனின் உளவியலைத் தொட்டுக்காட்டுகிறது. ‘களம்’, விறுவிறுப்பான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ‘கண்ணீர் அஞ்சலி’, இன்றைய பெரும்போக்கான பேய்ப் பட வரிசையில் தன்னை இணைத்துக்கொள்ள முயல்கிறது. ‘எலி’, ஒரு எதிரியைப் பொறியில் சிக்கவைக்கத் திட்டம் போடும் ஒருவன், தற்செயலாக உருவாகும் வேறொரு பொறியில் தானே சிக்கிக்கொள்வதைக் காட்சிப்படுத்துகிறது.

கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே சிறுகதைக்குரிய தன்மையும் வடிவமைப்பும் கொண்டிருக்கின்றன. எல்லாப் படங்களிலும் ஒற்றைக் குவிமையமும் கடைசியில் கூர்மையான திருப்பமும் வருகின்றன. குறும்படம் என்பது சிறுகதைக்கு நெருக்கமான வடிவம் என்பதால் இந்த அம்சங்கள் இயல்பாகவே உள்ளன. ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்குத் திரையில் கதை சொல்லத் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

படங்களின் போதாமைகள்

‘உன் கிட்ட ஒண்ணு சொல்லணும் மச்சான்’ இயக்குநர் ஷமீர் சுல்தானுக்குப் பார்வையாளரை வியப்பில் ஆழ்த்துவதிலேயே அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. திரைப்படத்தின் இதர அம்சங்களைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இறுதியில் வரும் திருப்பம் எதிர்பார்த்த திருப்பம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. நம்மைப் பார்த்துப் பேசுபவரை ஒளிப்படக் கருவி கவனப்படுத்துவதில் உள்ள கூடுதல் அழுத்தமே அந்தத் திருப்பத்தைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஒரு உத்தியை இயல்புக்கு மீறி மிகையாகப் பயன்படுத்தும்போது அதுவே இயக்குநரின் நோக்கத்துக்கு எதிரானதாக அமைந்துவிடுவதை உணர முடிகிறது.

மோஹித் மெஹ்ரா இயக்கியுள்ள ‘சுருதி பேதம்’ பெண்கள் விஷயத்தில் ஒரு இளைஞனின் உளவியலை அங்கதச் சுவையுடன் சித்தரிக்கிறது. சம்பவங்கள் மூலம் கதை சொல்லும் இயக்குநர், திருப்பங்களில் அதிக சுதந்திரம் எடுத்துக்கொள்கிறார். இளைஞனின் கதாபாத்திரத்தை நன்கு செதுக்கியிருக்கும் இவர், அந்தப் பெண்ணின் பாத்திரத்தைப் பலவீனமானதாக ஆக்கியிருக்கிறார்.

லொகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘களம்’, பல பாத்திரங்களும் திருப்பங்களும் கொண்ட படமாக இருந்தாலும் ஒற்றைக் குவிமையத்திலிருந்து விலகவில்லை. காட்சிகளைச் சிக்கனமாகக் கத்தரிப்பதன் மூலமும் சம்பவங்களை அடுத்தடுத்து அடுக்குவதன் மூலமும் கதையை வேகமாகக் கொண்டுபோகிறார். வேகத்துக்குப் பலி ஆவது நம்பகத்தன்மையும் நுட்பங்களும். படத்தின் திருப்பங்களைச் சலுகை கொடுத்தே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாத்திர வார்ப்பில் இயல்புத்தன்மை அதிகம் இல்லை. இன்னின்னார் இப்படி இப்படி இருப்பார் என்னும் ஆகிவந்த அனுமானங்களே பாத்திர வார்ப்புகளைத் தீர்மானிக்கின்றன. சண்டைக் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளில் நேர்த்தி கூடவில்லை.

குரு ஸ்மரண் இயக்கியிருக்கும் ‘கண்ணீர் அஞ்சலி’, குறிப்பிட்ட எந்த வகையிலும் அடங்க மறுக்கிறது. எந்த வகைமைக்கும் நியாயம் செய்யவும் இல்லை. யதார்த்த தளத்தில் அங்கதச் சுவையுடன் தொடங்கும் படம் விரைவில் அமானுஷ்யக் களத்தினுள் நுழைகிறது. இடையில் குற்றவியல் கதையாகவும் மாறுகிறது. கள மாற்றத்துக்கோ, வெவ்வேறு திசைகளில் கதை நகர்வதற்கோ எந்த நியாயமும் திரைக்கதையில் இல்லை. அமானுஷ்ய சக்தியின் மூலம் வரும் திருப்பம் திரைக்கதைக்கான நியாயத்துடன் வெளிப்பட வேண்டும். படத்தில் அது இல்லை. எப்படி வேண்டுமானாலும் கதையைக் கொண்டுபோகலாம் என்ற அணுகுமுறைதான் தெரிகிறது.

அல்ஃபோன்ஸ் புத்திரனின் ‘எலி’ நுட்பமான படமாக்கத்துக்கும் கச்சிதமான திரைக்கதைக்கும் சான்று. பாபி சிம்ஹாவின் நடிப்பு அதை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. சிம்ஹாவின் பேச்சும் காட்சித் துணுக்குகளும் இணையாகச் செயல்பட்டுக் கதையைத் திரையில் விரிய வைக்கின்றன. உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருக்கும் நிவின் பாலி கடைசியில் தன் வீட்டில் தஞ்சமடையும்போது அங்கேதான் அவருக்கான பொறி இருப்பது புரிகிறது. அது நிவினின் வீடு என்பதை இயக்குநர் நுட்பமாகக் குறிப்புணர்த்துகிறார். ‘எலி’, தனக்காக வைக்கப்பட்ட ‘பொறி’யில் விழும்போது கதை உருமாறும் விதம் கலாபூர்வமான உச்சம். மனிதர்களின் மிகையான பாவனைகள் மீதான பகடியாகவும் இது வெளிப்படுவது சிறப்பு.

திட்டங்கள் தம்மைத் தீட்டியவரையே திருப்பி அடிக்கும் மாயம் வாழ்வின் தீராத மர்மங்களில் ஒன்று. அத்தகைய தருணத்தைத் தரிசிக்க வகைசெய்யும் இந்தப் படம் அதை நம்பகத்தன்மையுடனும் இயல்பாக இழையோடும் நகைச்சுவையுடனும் காட்சிப்படுத்தியிருப்பது முக்கியமானது. மேல் வீட்டில் இருப்பவரின் மீது சிம்ஹாவுக்கு வரும் கோபத்துக்கான காரணம் குறும்படங்களுக்கே சாத்தியமான துணிச்சலின் வெளிப்பாடு.

எது உங்கள் அடையாளம்?

ஒட்டுமொத்தமாக இந்தக் குறும்படங்களைப் பார்க்கும்போது அல்ஃபோன்ஸ் புத்ரனைத் தவிர யாரும் குறும்படம் என்னும் வடிவைக் கலாபூர்வமாகவோ தீவிரமாகவோ அணுகவில்லை. பெரிய படங்களில் இல்லாத சில வசதிகள் குறும்படங்களில் உள்ளன. வணிக சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி இல்லாததால் தீவிரமான சில விஷயங்களை அழுத்தமாகக் கையாளலாம். பார்வையாளர்களிடத்தில் அழுத்தமான சலனங்களை ஏற்படுத்தக்கூடிய கதைகளைப் படமாக்கலாம்.

வாழ்க்கை மீதான பார்வையாளர்களின் பார்வையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய முனைப்புகளை முன்னெடுக்கலாம். வாழ்க்கை குறித்த மாறுபட்ட பதிவுகளையும் அணுகுமுறைகளையும் முன்வைக்கலாம். இன்று யூடியூப் இணையதளத்தில் காணக் கிடைக்கும் எத்தனையோ குறும்படங்கள் இந்தக் கலை வடிவத்தை மிக வலுவாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. புராணப் பாத்திரமான அகலிகையின் கதையை மறுவாசிப்பு செய்த ‘அகல்யா’ குறும்படம் இதற்குச் சிறந்த உதாரணம்.

குறும்படம் என்பது உங்களுக்கான அடையாள அட்டை என்றால் உங்கள் படம் உங்களுக்கு எத்தகைய அடையாளத்தைத் தரும் என்று நினைக்கிறீர்கள் என்று இளம் இயக்குநர்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. படம் எடுக்கத் தெரியும் என்பதை இவர்கள் காட்டியிருக்கிறார்கள். வெவ்வேறு விதமான காட்சிகளை எடுக்கத் தெரியும் என்பதையும் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் திரைப்படம் என்பது கருவிகளையும் உத்திகளையும் கையாளும் சங்கதி மட்டுமல்ல. அந்தக் கருவிகளையும் உத்திகளையும் வைத்து வாழ்க்கையைத் தனக்கே உரிய கோணத்தில் அணுகிச் சித்தரிக்கும் ஊடகம். அதன் மூலம் பார்வையாளர்களின் அனுபவ உலகில் சலனங்களை ஏற்படுத்தலாம். புதிய கேள்விகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தலாம். புதிய கோணங்களையும் தரிசனங்களையும் சாத்தியப்படுத்தலாம்.

இத்தகைய கனவுகளுடன் களம் இறங்கும்போது இந்த இயக்குநர்கள் மேலும் வலுவாக வெளிப்படுவார்கள் என்று நம்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்