கொரிய சினிமா: மை டியர் டெஸ்பரடோ - கவிதை மொழியில் ஒரு பிரியம்!

By செல்லப்பா

தென் கொரிய இயக்குநர் கிம் க்வாங்க்-சிக் ஒரு திரைக்கதையாசிரியராகத் திரைத் துறைக்கு 1997-ல் அறிமுகமானார். ஆனால் தனது முதல் முழுநீளப் படத்தை அவர் 2010-ம் ஆண்டில்தான் இயக்கினார். அது ரொமாண்டிக் காமெடிப் படம் என வகைப்படுத்தப்பட்டது. நாடகத்தன்மை கொண்ட திரைக்கதையை, நாடகப் பாங்கின்றி, நடிப்பிலும் காட்சியமைப்பிலும் உறுத்தலின்றி கவிதை மொழியில் அவர் படமாக்கியிருந்தார்.

இப்படித்தான் ஓர் எளிமையான கதை, அதற்குத் தகுந்த தெளிந்த நீரோட்டம் போன்ற காட்சியமைப்புகளுடன் ‘மை டியர் டெஸ்பரடோ’ என்னும் படமானது. சிறந்த புது இயக்குநர் என்னும் பிரிவில் அந்த ஆண்டில் கொரியாவின் முக்கிய விருதான, ‘ப்ளு ட்ராகன்’ விருதையும் பெற்றார். படம் திரையிடப்பட்டபோது தொடக்கத்தில் ரசிகர்களைப் பெரிதாக அது கவரவில்லை. ஆனால் படம் பார்த்த ரசிகர்களின் வாய்மொழி விமர்சனம் படத்தை மிகப் பெரிய வெற்றிபெற வைத்தது.

சியோல் அருகே உள்ள ஒரு சிறு நகரத்தில், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள் ஹான் செ-ஜின். கல்வியில் சிறந்த பெண்ணான அவள், கிராமத்துப் பொறியியல் கல்லூரி ஒன்றில் பட்டம் பெற்று, வேலையில் சேர்ந்து பெரிய ஆளாகப் பிரகாசிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தந்தையின் எதிர்ப்பையும் மீறி பெருநகரத்துக்கு வருகிறாள். டாங்-செல் நடுத்தர வயதுக்காரன். கல்வி கற்காதவன். ஆனால் தொலைக்காட்சியில் எப்போதும் கல்வி நிகழ்ச்சிகளையே பார்க்கும் பழக்கம் கொண்டவன். பெரிய திறமை எதுவும் இல்லாதவன். ஆனால் அவன் ஒரு கேங்ஸ்டர். இந்த இருவருக்கும் எந்தப் பொதுக் குணமும் இல்லை. ஆனால் இவர்கள் அருகருகே வசிக்கும் சூழல் அமைகிறது.

இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குள் பார்த்தவுடன் காதல் கனியவில்லை. டாங்-செல் இனிமையாகப் பழகத் தெரிந்தவன். ஆனால் இனிமையாக யாரிடமும் இருக்கமாட்டான். அப்படிப் பட்டவன் செ-ஜினின் கஷ்ட காலத்தில் சிறு சிறு ஒத்தாசைகள் செய்கிறான். மழையில் நனைந்தபடி சென்று அவளுக்காகக் குடை வாங்குகிறான். மனம் தளர்வான பொழுதுகளில் அவளுக்கு ஆதரவான நிழலை வழங்குகிறான் அதன் காரணமாக அவள் மனதில் அவன் இடம்பிடிக்கிறான். இருவரும் ஒன்றாக உணவருந்துகிறார்கள், ஒரு நாளில் ஒன்றாக உறங்கவும் செய்கிறார்கள். அவர்களிடையே பனிக்கால இளஞ்சூடு போன்ற பிரியம் மலர்கிறது. ஆனால் அந்தப் பிரியத்துக்கு அவன் ஒருபோதும் உரிமை கோருவதில்லை.

வேலை தேடி அலைந்து சலிப்பு கொண்ட ஒரு நாளில் டாங்-செல்லுடன் அமர்ந்து செ-ஜின் மது அருந்துகிறாள். ஒரு கேங்ஸ்டருடன் அமர்ந்து மது அருந்தும் நிலைமை வந்துவிட்டதே எனப் புலம்பும் செ-ஜின் ஒரு தருணத்தில் அவன் இதழ்மீது இதழ் பொருத்தி நிற்கிறாள். தன் பணியில் தன்னால் நேர்ந்த தவறைச் சரிசெய்யும் பொருட்டு ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியின் காலில் விழ மறுக்கும் டாங்-செல், செ-ஜின் வேலை பெற வேண்டி அறிமுகமே இல்லாதவர்களிடம் மண்டியிட்டு இறைஞ்சுகிறான். இப்படியான சிறு சிறு நெகிழ்வான தருணங்களில் இருவரும் ஒருவரில் ஒருவர் ஊடுருவுகிறார்கள். அந்த ஊடுருவல் இருட்டறைக்குள் சிறு கதிர் நுழைவது போல் படமாக்கப்பட்டுள்ளது.

செ-ஜின் வேடமேற்றிருக்கும் ஜங் யு-மியும் டாங்-செல் வேடமேற்றிருக்கும் பார்க் ஜூங்-ஹூனும் தங்கள் நுட்பமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர்ப்பூட்டி, நல்ல திரைப்பட அனுபவத்தைச் சாத்தியப்படுத்துகிறார்கள். இது வாழ்க்கை குறித்த நம்பிக்கையூட்டும் திரைப்படம். ஆனால் அந்த நம்பிக்கையை போதனையாகப் புகட்டாமல் ஒரு சுவாசம் போல் உணரச் செய்ததில் இயக்குநர் வெற்றிபெறுகிறார். ஆகவே இந்த ரசனைத் திரைப்படம் தமிழிலும் (காதலும் கடந்து போகும்) இந்தியிலும் மறுஆக்கம் பெற்றிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்