தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் இசை உரிமைக்குக் கடும் போட்டி நிலவியது. இசை உரிமையைக் கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் களத்தில் நிற்பார்கள். அதிலும் நட்சத்திர இசை அமைப்பாளர்களின் இசை என்றால் இந்தப் போட்டி தீவிரமாக இருக்கும். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. இசை உரிமையை வாங்கிக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர்கள் இசை நிறுவனத்துக்கு போன் செய்து பேசும் காலம்தான் இருக்கிறது.
இசை கேட்கும் வடிவத்தின் மாற்றம்
ஒரு படத்தின் இசை என்பது கேசட் வடிவில் இருந்து தட்டு வடிவத்துக்கு வந்தது. முன்னணி நடிகரின் படம் என்றால் கேசட் வாங்கி அதனைத் தெருக்களில் இருக்கும் அனைவரும் கேட்பது மாதிரி ஒலிபரப்புவார்கள். அந்தக் காலம் போய் சிடி வடிவில் இசை வெளியாக ஆரம்பித்தது. சிடிக்கள் வாங்கி, அதனை வீட்டுக்குள் தன்னுடைய அறையில் உள்ள கணினியில் கேட்க ஆரம்பித்தார்கள். தற்போது ஒரு படத்தின் இசை என்பது கேசட் வடிவத்தில் வருவதே இல்லை. சிடிக்கள் வெளியாகின்றன. ஆனால் அவை எல்லாம் கடையில் இருக்கும் ஒரு காட்சிப் பொருள் மட்டுமே. சிடிக்கள் மூலமாக வரும் வருமானம் என்பது தற்போது சுத்தமாக இல்லை. காரணம் இசை கேட்கும் வடிவம் இன்று மாறிவிட்டது.
தற்போது பலரும் பாடல்கள் கேட்பது யூடியூப் மற்றும் ஐடியூன்ஸ் மூலம்தான். பாடல்கள் வெளியீடு அன்றே யூடியூப் தளத்தில் பாடல் வரிகளோடு இணைத்து அனைத்துப் பாடல்களையும் வெளியிட்டுவிடுகிறார்கள். இதன் மூலமாகவும் ஐடியூன்ஸ் மூலமாகவும்தான் தற்போது ஒரு படத்தின் இசை மக்களிடம் சென்றடைகிறது.
ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு இசை உரிமை மூலமாக நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது. எந்திரன் படத்தின் இசை உரிமை 4 கோடிக்கு விற்பனையானது. தற்போது இசை உரிமை என்பதே சொற்பப் பணம்தான். அந்த உரிமையை வாங்கியிருக்கும் இசை நிறுவனம் அந்தப் பணத்தைத் திரும்ப எடுக்கப் படும் பாடு பெரும் திண்டாட்டம்தான். ஐ-டியூன்ஸ், காலர் டியூன், எஃப்.எம்.கள், யூடியூப் விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலமாக இசை நிறுவனத்துக்கு வருமானம் வருகிறது. திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் படக் குழுவினர் கையில் சி.டியை வைத்துக்கொண்டு நிற்கும் ஒளிப்படங்களைப் பார்க்கலாம். அதற்கு மட்டுமே தற்போது சிடிக்கள் பயன்படுகின்றன.
இசையமைப்பாளரின் கவுரவப் பிரச்சினை
இன்று ஒரு இசையமைப்பாளரின் இசையில் ஒரு படம் வெளியாகும்போது அந்த படத்தின் பாடல்கள் ஐ-டியூன்ஸ் வழியாக எவ்வளவு பதிவிறக்கம், காலர் டியூன்ஸ் எத்தனை பேர் வைத்திருக்கிறார்கள், எஃப்.எம்.களில் எத்தனை தடவை பாடல்கள் போடப்படுகின்றன, இவை மூன்றின் அடிப்படையில்தான் இசையமைப்பாளரின் சம்பளம் உள்ளடங்கி இருக்கிறது. இவை மூன்றும் குறையும்போது இசையமைப்பாளர் இறங்கு முகத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். இந்த மூன்றின் மூலமாகத்தான் தற்போது வருமானமும் இருக்கிறது. இந்த மூன்று வழிகளில் வரும் வருமானம் குறைவு என்பதால் படத்தின் இசை உரிமையின் தொகையும் மிகவும் குறைந்துவிட்டது.
ஒரு காலத்தில் 3 கோடி, 4 கோடி என்று இசை உரிமைக்குப் போட்டியிட்டவர்கள் தற்போது 30 லட்சம், 40 லட்சம் , 1 கோடி என்று போட்டியிடுகிறார்கள். அதுவும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இந்தப் போட்டி. கத்தி படத்தின் இசை உரிமை 2 கோடிக்கு விற்பனை ஆயிற்று. வேதாளம் படத்தின் இசை உரிமை 1.5 கோடிக்குப் போயிற்று. சிறு நடிகர்களின் படங்கள் அல்லது புது இசையமைப்பாளர் என்றால் யாருமே போட்டியிடுவதே இல்லை. தயாரிப்பாளர்தான் இசை நிறுவனத்தின் வாசலில் நிற்க வேண்டியதிருக்கிறது. இசையமைப்பாளர்கள் இதனை ஒரு கவுரவப் பிரச்சினையாகக் கருதுவதால் சில இசையமைப்பாளர்கள் சொந்தமாகவே இசை நிறுவனம் அமைத்து, அவர்களே உரிமையை வைத்துக்கொள்கிறார்கள்.
ஒரு பாடலின் மூலமாக வரும் வருமானம்
வாடிக்கையாளர் ஒருவர் தனது மொபைல் எண்ணுக்கு காலர் டியூன்ஸ் வைத்தால், மாதத்துக்கு 30 ரூபாய் வசூல் செய்கிறது அலைபேசி நிறுவனம். அதன் மூலமாக இசையமைப்பாளர், தயாரிப்பாளருக்கு ஒரு சிறிய தொகை மட்டுமே கிடைக்கும். எஃப்.எம்.களில் ஒரு பாடல் ஒரு தடவை ஒலிபரப்பப்பட்டால் அதன் மூலமாக ரொம்பச் சின்னத் தொகையே கிடைக்கும். ஆனால், ஒரே நாளில் பலமுறை ஒலிபரப்பப்படுவதால் மாதத்துக்கு வருமானம் லட்சங்களில் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எஃப்.எம். மூலமாக வரும் வருமானம் மூலம் அப்பாடலின் பாடலாசிரியருக்கும் சிறு தொகை போகிறது. ஐ-டியூன்ஸ் வருமானம் என்பது சிறிய தொகை என்றாலும் அது எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது. மாதத்துக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வரும் என்கிறார்கள். இரண்டு மாதத்துக்கு ஒரு முறையிலும் சிலருக்கு வந்திருக்கிறது.
இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால், இசை உரிமை என்பதையே தயாரிப்பாளர்கள் பலர் மறந்துவிட்டார்கள். மேலும், பலர் பாடல்களே இல்லாமல் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ரசிகர்களோ எந்தப் பாட்டு வேண்டுமென்றாலும் பண்பலைகளிலோ இணையத்திலோ கேட்டுக்கொள்கிறார்கள். காரில் செல்பவர்கள் மட்டுமே பாடல்களைக் கேட்க சிடிக்களை நம்பும் நிலை உள்ளது. அதிலும் இணையத்திலிருந்து தரவிறக்கி பென் ட்ரைவில் பிரதியெடுத்து வைத்துக்கொள்வதே போதுமானதாக இருக்கிறது.
நிலைமை இப்படியே போனால் புதுப் பாடல்கள் குறித்த பரபரப்பு எதுவுமே இருக்காது என்றுதான் தோன்றுகிறது. பல விதமான சிக்கல்களில் இருக்கும் திரையுலகம், திரையிசை சார்ந்த இந்த நெருக்கடியையும் சந்தித்துவருகிறது. இணையத்தைத் திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்தால்தான் இனி எதிர்காலம் என்ற நிலையை நோக்கித் திரையிசை நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
என்ன சொல்கிறார்கள் திரையுலகினர்?
இப்பிரச்சினை குறித்து முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்ட போது, “இசை உரிமையை நாங்கள் மறந்துவிட்டது உண்மைதான். பெரிய நடிகரின் படத்தில் காலர் டியூன்ஸ், எஃப்.எம்., ஐ-டியூன்ஸ் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர் இசையமைத்தால் மட்டுமே இசை நிறுவனங்கள் வாங்க போட்டியிடுகிறார்கள். அவர்கள் நினைக்கும் ஆள் இல்லை என்றால் நாங்கள் அவர்களிடம் பாடல்களை எல்லாம் போட்டுக் காட்டி வாங்கிக்கொள்ளும்படி கெஞ்ச வேண்டியிருக்கிறது. மேலும், இசைமூலம் வரும் வருமானத்தைப் பங்குபோட்டுக்கொள்ளலாம். அவுட்-ரேட்டுக்கு வேண்டாம் என்று ஆடியோ நிறுவனங்கள் கூறும் காலம் வந்துவிட்டது. இது நல்லதல்ல” என்று கவலையுடன் குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago