திரையில் மிளிரும் வரிகள் 4 - வெற்றிலை, கிளியாய்ப் பறக்கும் அதிசயம்!

By ப.கோலப்பன்

தூதுக்குத் தமிழிலக்கியத்தில் தனி இடம் உண்டு. காதல் வயப்பட்ட இருவர் பிரிந்திருக்கும் வேளையில் அல்லது பிரிக்கப்பட்டிருக்கும் வேளையில் தூதுவர்கள் மூலமாகப் பேசிக்கொள்கிறார்கள். தோழியும் விறலியும் மானும் மயிலும் கிளியும் மேகமும் நதியும் செந்நாரையும் குயிலும் அலையும் தூதுவர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

“திருத்தாய் செம்போத்தே” என்று திருமங்கையாழ்வார் செண்பகம் என்னும் செம்போத்துப் பறவையைத் தூது விடுகிறார். பல்லிக் குட்டி, காகம், குயில் ஆகியவற்றையும் தூதுவர்களாக்கி அழகிய மணவாளனிடம் பேசுகிறார்.

நாயகன்-நாயகி பாவங்களில் வெளிப்படும் தூது, அகத்துறை இலக்கியங்களில் தாராளமாகக் காணக் கிடக்கின்றன.

“பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்” என்று சுந்தரரும் திருவாரூர் தியாகேசனுக்கு தூது விடுகிறார்.

“பொன்னுலகாளிரோ புவனிமுழுதாளிரோ” என்று புள்ளினங்களை விளித்துத் தன் நிலையை உரைக்கச் சொல்கிறார் நம்மாழ்வார்.

“பழம்படு பனையின் கிழங்குப் பிளந்தன்ன பவளக்கூர்வாய் செங்கால்நாராய்” என்று கையைக் கொண்டு மெய் போர்த்தி வாடையில் வாடி வதங்கும் சத்திமுத்துப் புலவர் தன் மனைவிக்கு நாரையைத் தூது விடுகிறார்.

காலம் காலமாகத் தொடரும் இந்த இலக்கியத் தூதின் தொடர்ச்சியாகத்தான் “நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களே துள்ளி வரும் முத்துக் கிள்ளைகளே” என்ற பாடலை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் தமிழகத்தில் பிரிவுத் துயரால் தவிக்கும் அத்தனை காதலர்களும் மனதுக்குள் இப்பாடலைத்தான் பாடிக் கொண்டிருந்தார்கள்.

“பச்சை வண்ண வெற்றிலை போல் பறந்தோடும்போது பார்ப்பதற்கு வெற்றிலையில் சொன்னால் என்ன தூது?” என்று பொன்னூஞ்சல் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய வரிகள் காலங்காலமாக மனதில் நிற்கும் படிமம்.

இன்றும் திருவில்லிபுத்தூரில் ஆண்டாளின் தோளில் அமரும் கிளிகளை வெற்றிலையைக் கொண்டே உருவாக்குகிறார்கள். அந்த வெற்றிலைகள் கிளிகளாவே மாற்றம் கொண்டு பறக்கும் காட்சி கண்ணதாசனின் மனத்திரையில் விரிகிறது. வெற்றிலை கிளியாவும் கிளி வெற்றிலையாகவும் மாறி மாறி உருக்கொள்வதால், வெற்றிலையில் சேதி சொல்லச் சொல்கிறார்.

அடுத்து வெள்ளத்தைத் தூது விடுகிறான் காதலன்.

“வெள்ளம் ஓடட்டும். பெண்ணிடம் கூறட்டும்.

உள்ளம் வேலிக்கட்டைத் தாண்டி வந்து பூவாகட்டும்.

அந்த மேகங்கள் பாடும் ராகங்கள் வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்”

உடனே கதாநாயகி வயல் வரப்பில் பூத்திருக்கும் மலரை எடுத்துத் தலையில் சூடிக்கொள்கிறாள். கதாநாயகன் அதே போல் ஒரு மலரை எடுத்து மார்பில் சேர்த்துக்கொள்கிறான். இதயங்கள் மலர்களாகின்றன. மிகச் சிறந்த வரிகள் தொடர்ந்து வருகின்றன.

“மஞ்சளுக்கு நாற்று வைத்தால் மணக்காதோ இங்கே மௌனத்திலே சேதி சொன்னால் புரியாதோ அங்கே”

பூவின் மணத்தை வேலி போட்டுத் தடுக்க முடியுமா? புதிதாக நடப்பட்டிருக்கும் மஞ்சள் நாற்றுகள் காற்றில் கலந்து நிற்கின்றன. “முகராதே” என்று யாரைத் தடுக்க முடியும்? ஆயிரம் வார்த்தைகளை விடவும் மௌனம் பொருள் பொதிந்ததன்றோ?. காதலர்கள் மௌனமாய் நின்று கண்களால் சேதி சொல்கையில் பெற்றோர் என்ன ஒற்றனை அனுப்பியா கண்டறிய முடியும்?

தொடர்ந்து பாடும் கதாநாயகி, “தங்க மீன்களே தாமரைப் பூவிலே பொங்கும் தேனுண்டு என்பதை நீவீர் அறிவீர்களோ? அந்தப் பொன் வண்டு இந்தப் பூக்கண்டு இன்பத் தேன் உண்ணும் நாள் பார்க்க விடுவீர்களோ?” என்று வினவுகிறாள்.

“தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்

வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்”

என்ற விவேக சிந்தாமணி பாடலை இங்கே நினைவுகூரலாம். தாமரையோடு தடாகத்தில் கிடந்தாலும் தவளைக்கோ மீனுக்கோ தேனின் சுவை தெரியாது. எங்கோ இருக்கும் வண்டுதான் தேன் உண்கிறது. தேனெடுக்கத் தலைவன் வரும் நாளை அவள் எதிர்பார்க்கிறாள்.

அத்துடன் “பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம். பக்கத்திலே நீயிருந்து பறிமாறு கொஞ்சம்” என்ற சுற்றத்தாரின் எண்ணங்களையும் தெளிவுபடுத்துகிறாள்.

எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் இப்பாடல் இன்னவென்று புரிய முடியாத ஒரு உணர்வுகளைக் கேட்பவர்கள் மனதில் உருவாக்குகிறது. குறிப்பாக “ஹோ ஹோ” என்ற கதாநாயகி பாடும் ஹம்மிங் பாடலை வேறொரு தளத்துக்கு உயர்த்துகிறது. பாடுவது டி.எம். சௌந்தர்ராஜனா அல்லது சிவாஜி கணேசனா என்று பிரித்தறிய முடியவில்லை. சுசிலாவின் குரலும் கதாநாயகியான உஷா நந்தினியின் பாவங்களும் அப்படியே.

அதிலும் “பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்” என்ற பாடிக் கொண்டே மனதின் ஏக்கத்தைப் பெருமூச்சு விட்டு வெளிப்படுத்தும் காட்சி, பிரிவால் துயருறும் எல்லாக் காதலர்களின் பெருமூச்சாகவே நம்மைச் சுடுகிறது.

தொடர்புக்கு: bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்