மற்ற துறைகளைவிடப் பொழுது போக்குத் துறையில் இருப்பவர்களுக்குச் சமூக வலைதளங்கள் இன்று பெரும் பிரச்சாரக் கருவிகள். செல்வாக்கு மிக்க திரைப் பிரபலங்கள் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், தங்களைப் பின்தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவோ, சர்ச்சைகளைக் கிளப்பவோ ஒரு சில நிமிடங்கள் போதும். இப்படிப் பகிரப்படும் எதற்கும் ரசிகர்கள் தரும் எதிர்வினை சுனாமியைவிட வேகமானதாக இருக்கிறது. இதனால் மிக மிகக் கவனமாகப் பகிர வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
எத்தனை கவனமாக இருந்தாலும் நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் பெயரில் போலியான கணக்குகளைத் தொடங்கி, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜன்னி வந்துவிடும் அளவுக்குத் தகவல்களைப் பதிவிடத் தொடங்கி விடுகிறார்கள். மிமிக்ரி செய்யும் திறமையைப் போலவே முகம் தெரியா இந்த நிழல் நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்டவர்களைப் போலவே பதிவிடுவதில் கில்லாடிகள்.
சமீபத்தில் இயக்குநர் ஹரிக்கு முகப் புத்தகத்தில் போலிக் கடை திறந்து விட்டார்கள். பொள்ளாச்சி யில் பூஜை’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தவருக்கு விஷயம் தெரிந்து சுதாரிப்பதற்குள் அவரது கணக்கின் வழியே நடிக்க ஆர்வமாக இருப்பவர்கள் தொடர்புகொள்ளவும் என்று அறிவிப்பைப் போட்டுவிட்டார்களாம்.
ஹரியின் பரபரப்பு முடிவதற்குள் மணி ரத்னம் டுவிட்டரில் மாட்டிக் கொண்டார். கடந்த மாதம் ரஜினி டுவிட்டரில் கணக்கைத் தொடங்கியிருந்ததால், @IManiratnam என்ற பயனர் பெயரில் டுவிட்டரில் பளிச்சிட்ட கணக்கைக் கண்களை மூடிக்கொண்டு நம்பத் தொடங்கிவிட்டனர் டுவிட்டர் வாசிகள். போதாக்குறைக்கு டுவிட்டரில் நான் கணக்கு தொடங்கக் காரணமாய் இருந்த மனைவி சுஹாசினிக்கு நன்றி’ என்று ஒரு டுவிட்டும் வெளியாக, அதன் பிறகு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைக் கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நீண்டகாலமாகக் கீச்சிவரும் சில ஞானப்பழங்கள், ‘இது நிஜமாகவே மணி ரத்னத்தின் டுவிட்டர்தானா?’ என்று தீக்குச்சி கொளுத்த, “ஆம். அது நான்தான்” என்று அதே கணக்கு ‘ரத்ன’ சுருக்கமாகப் பதில் அளித்தது.
ஆனால் கொஞ்ச நேரத்தில் பத்திரிகையாளர் சுதீஷ் காமத் ஆஜராகி “மணி ரத்னத்தின் பெயரில் இருப்பது போலிக் கணக்கு. திருமதி சுஹாசினியிடமே இதை உறுதி செய்துகொண்டேன்” என்று உண்மையை உடைத்தார். அப்படியும் ஆயிரக்கணக்கில் நிழல் மணியைக் கண்மூடித் தனமாகப் பின் தொடர ஆரம்பித்தார்கள் பல டுவிட் கழகக் கண்மணிகள்.
இந்த நிழல் நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா? டுவிட்டரும் முகப் புத்தகமும் இவர்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியாமல் போவது ஏன் என்று விசாரித்தால், நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் பட்டியலைத் தயாரிக்கவோ கண்காணிக்கவோ சமூக வலைதளங்களை நடத்தும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு மில்லியன் ரசிகர்கள் பக்கத்துக்கு லைக் கொடுத்தாலோ, டுவிட்டரில் ஒரு மில்லியன் பேர் பின்பற்ற ஆரபித்தாலோ, அந்தக் கணக்கை வைத்திருப்பவர் யாராக இருந்தாலும் “நீங்கள்தான் இந்தக் கணக்கின் உரிமையாளரா? அப்படியானால் அதற்கான ஆதாரத்தை அனுப்புங்கள்” என்று மின்னஞ்சல் அனுப்புவார்கள். முறையான அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் அந்தக் கணக்கும் நீக்கப்பட்டுவிடும். அதேநேரம் கணக்குப் போலியானது எனத் தெரியவந்தாலும் அதையும் உடனே தெரியப்படுத்தினால் உடன் கணக்கு முடக்கப்படுகிறது.
ஆனால் போலிக்கணக்கைத் தொடங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை என்பது இடியாப்பச் சிக்கலாக இருப்பதால், எல்லோரும் இந்த நிழல் நட்சத்திரங்களை மறந்துவிடுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago