கும்பகோணம் வெறும் கோயில் நகரம் மட்டுமல்ல. இலக்கியத் துறையிலும் இசைத் துறையிலும் பெருந்தடம் பதித்தவர்கள் குடந்தையின் தெருக்களில் உலவினார்கள். பேராசிரியரும் எழுத்தாளருமான இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்து இது குறித்து உரையாடினேன். கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு ஆசிரியராக இருந்தவர் தி. ஜானகிராமன்.
ஒருமுறை அவரைச் சந்திப்பதற்காக மகாமகக் குளக்கரைக்குச் சென்றபோது அங்கே கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் எழுதி வந்த நாராயணசாமி, “ஒட்டும் இரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் பாடலை விளக்கி்க்கொண்டிருந்தாரம். வடமொழியில் பெரும்புலமை பெற்று, காளிதாசனின் படைப்புகளையெல்லாம் கசடறக் கற்றிருந்த கரிச்சான் குஞ்சு, “பாரதி பாடலின் வரிகளுக்கு நிகரான வரியை இதுவரை படித்ததில்லை” என்று சொல்லிக்கொண்டிருந்தாராம்.
“பாங்கினிற் கையிரண்டும் தீண்டி அறிந்தேன்.
பட்டுடை வீசுகமழ் தன்னில் அறிந்தேன்,
ஓங்கிவரும் உவகை ஊற்றில் அறிந்தேன்;
ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்”.
கடலை நோக்கி அமர்ந்திருக்கும் காதலன் காதலியின் கையைத் தீண்டியும் அவள் உடுத்திருக்கும் பட்டுப் புடவையின் மணத்தை முகர்ந்தும் அவன் உள்ளத்தில் பெருகும் மகிழ்ச்சியையும் கொண்டு அவள் வருகையை அறிகின்றான். ஆனால் அதையெல்லாவற்றையும் விட அவள் வந்ததுமே அவனுடைய இதயமும் ஒரே கதியில் துடிக்க ஆரம்பிக்கிறது. இந்த உணர்வைக் கொண்டே காதலி வருகையை அறிந்துவிடுகிறான்.
இந்த வரிகள்தான் பின்னாளில் கண்ணதாசனின் கைவண்ணத்தில், “உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்” என்று வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தில் வெளிப்பட்டது எனலாம். பாடலின் வரிகள், “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்று தொடங்கும்.
தமிழ்த் திரைப்பட உலகில் வில்லன்கள் வரிசையில் தனக்கென ஒரு பாணியை வகுத்திருந்த கே.ஏ.அசோகன்தான் காதலர்களின் இந்த தேசிய கீதத்தைப் பாடும் காட்சியில் தோன்றினார் என்பது முக்கியமான விஷயம். இப்பாடலுக்கு இசையமைத்தவர் வேதா. பல இந்திப் பாடல் மெட்டுகளை அப்படியே தமிழில் மாற்றித் தந்தவர் இவர்.
“வெற்றிப் பாடல்களைக் காப்பியடித்து ஜெயம் பெறலாம் என்பதே சினிமாக்காரர்களின் கொள்கை. இதற்குப் பலியானார் வேதா. ஆனால் பாட்டுக்காரனின் கனவைப் பார்த்திபன் கனவில் படரவிட்டார். வல்லவன் படங்களில், இந்தி மெட்டுகளையே தமிழில் வாழும்படி செய்துவிடுவதில் தான் வல்லவர் என்று காட்டினார். இளம் வயதில் காலமானாலும் மக்கள் செவிகளில் இன்றும் கானமாக வலம் வருகிறார்” என்று ‘திரை இசை அலைகள்’ புத்தகத்தில் வேதா குறித்து எழுதியிருக்கிறார் திரைத்துறை ஆய்வாளர் வாமனன்.
“நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை”
என்று டி.எம். சௌந்தரராஜன் தொகையறா வரிகளை ஓங்கி உச்சரிக்கையில் உலகமெங்கும் இருக்கும் காதல்களின் உள்ளங்களில் அது எதிரொலிக்கிறது. அதிலும் இரவின் அமைதியில் தூக்கத்தைத் தொலைத்துக் கிடக்கும் காதலர்களை மயிலிறகால் வருடுகிறது இப்பாடல்.
காதல்வயப்பட்டுக் கிடப்பவர்கள் எல்லோருமே எல்லாப் பிறவிகளிலுமே ஒன்றாவே இருக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொள்கிறார்கள். பக்தி இலக்கியங்களிலும் இக்கருத்து உண்டு.
“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்”
என்று நம்மாழ்வார் வேண்டுகிறார்.
“எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்”
என்று திருப்பாவையில் ஆண்டாள் சொல்கிறாள். அவளே நாச்சியார் திருமொழியில்
“இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்முடையவன் நாராயணன் நம்பி”
என்கிறாள். பக்தியின் இன்னொரு வடிவம்தானே காதல். அதனால்தான் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் சைவ சமயக் குரவர்களும் நாயகி பாவம் கொண்டு ஆண்டவனை அடைய நினைக்கிறார்கள்.
“இந்த மானிடர் காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்”
ஆணவக் கொலைகள் நடக்கும் காலம் இது. மனித மனங்கள் இணைந்தாலும் மனிதர்கள் அவர்களை வாழ விடுவதில்லை. ஆகவே நிரந்தரத் தன்மையற்ற மானுடக் காதலையும் மலர்களின் வாசனையையும் ஒதுக்கித் தள்ளுகிறான் கவிஞன்.
“இந்தக் காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில்
ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்.
Obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இந்த வரிகளைப் பொருத்திக்கொள்ளலாம். தலைவன் நினைவு முழுவதையும் காதலியே ஆக்கிமித்துக் கிடக்கிறாள். உலகில் உள்ள எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி அவளின் பூமுகத்தைக் காண்கிறான். காதல் உணர்வின் உச்சம் என்று இதைச் சொல்லலாமா?
தொடர்புக்கு: bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago