ஏவி.எம்மின் ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிக்கு சமமான ஒரு நடிகரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நானும், பஞ்சு அருணாசலம் அவர்களும் நினைத்தோம். இருவரும் மனதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தும் விட்டோம். ஆனால், அந்த சமமான கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம். அதுக்கு நாங்கள் நினைத்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அவர் அப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, எங்களின் பல படங்களில் கதாநாயகனாக நடித் தவர்.
‘முரட்டுக்காளை’படத்தில் ரஜினிக்கு எதிராக நடிக்க வேண்டிய வில்லன் பாத் திரம். எப்படி அதை ஜெய்சங்கரிடம் கேட் பது என்று நானும், பஞ்சு அவர்களும் தயங்கினோம்.
விஷயத்தை சரவணன் சாரிடம் போய் சொன்னதும், ‘‘என்ன முத்து ராமன்? நம்ம ஜெய்சங்கர்... அவரிடம் நான் பேசுறேன்’’ என்று ஜெய்சங்கருக்கு போன் போட்டார். ‘‘இதோ 10 நிமிஷத்துல அங்கே வர்றேன்’’ என்று சொன்ன ஜெய், அது போலவே ஸ்டுடியோவுக்கு வந்தார். எப்போது ஜெய் உள்ளே வந்தாலும் ‘ஹாய்… ஹாய்…’ என்று சொல்லிக்கொண்டேதான் நுழைவார். ஜெய் இருக்கும் இடத்தில் ‘ஹாய்… ஹாய்… ஹாய்’தான்.
‘‘என்ன விஷயம் சார்? அடடே, பஞ்சு சார், முத்துராமன் சார்… நீங்க எல்லாரும் இருக்கீங்களே?’’ என்றார். உடனே சரவணன் சார், ‘‘முரட்டுக் காளைனு ஒரு படம் எடுக்கப் போறோம். ரஜினி சார்தான் ஹீரோ. அவருக்கு சரி சமமான வில்லன் ரோல். அந்தக் கதாபாத்திரத்துக்கு உங்களை நடிக்க வைக்கலாம்னு நினைக்கிறோம். ஹீரோவா நடிச்சிட்டிருக்கிற உங்களை எப்படி கேக்குறதுன்னு முத்துராமனும், பஞ்சுவும் ரொம்ப யோசிக்கிறாங்க. நம்ம ஜெய். நான் கேட்கிறேன்னு தான் உங்களை வரச் சொன்னேன். கட்டாயம் இல்லை. நீங்க விரும்பினா பண்ணுங்க. இல்லைன்னா எந்த வருத்த மும் இல்லை. ரெண்டு நாள் டைம் எடுத் துக்கங்க’’ என்றார். ஐந்து நிமிஷம் யோசித்த ஜெய், ‘‘நான் நடிக்கிறேன் சார்’’ என்றார். அவரிடம் சரவணன் சார், ‘‘யோசிச்சு சொல்லுங்க ஜெய்’’ என்றார். அதற்கு ஜெய்சங்கர், ‘‘நீங்க, பஞ்சு சார், முத்துராமன் சார் எல்லாம் எனக்குக் கெடுதல் பண்ணப் போறதில்லை. நிச்ச யம் எனக்கு அது நன்மையாத்தான் இருக் கும். கண்டிப்பா நடிக்கிறேன்’’ என்றார்.
உடனே ரஜினிக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். ‘‘ஜெய் வில்லன் ரோலுக்கு ஒப்புக்கொண்டாரா? என் காலத்திலேயே ஹீரோவா நடிக்கிற வராச்சே’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்ட ரஜினி மேலும் தொடர்ந்து சொன்னார்: ‘‘சரவணன் சார்கிட்ட சொல்லுங்க. விளம் பரத்துல எனக்கு எவ்வளவு முக்கியத் துவம் கொடுக்குறாங்களோ, அதே முக்கியத்துவத்தை ஜெய்சங்கர் சாருக் கும் கொடுக்கணும். அதே போல, நீங் களும் பஞ்சு சாரும் வில்லன் அடிவாங்குற மாதிரி சீன்களை வைக்காம, ரெண்டு பேருக்கும் சமமா டஃப்பான சீன்களை வைக்கணும்.’’ என்றார்.
அவர் சொன்னதைப் போல, ‘முரட்டுக் காளை’போஸ்டர், ஸ்டில்ஸ் எல்லாவற்றிலும் குளோஸ்-அப்ல ரஜினி யும், ஜெய்சங்கரும் சேர்த்தே போஸ் கொடுக்கிற மாதிரி இருக்கும். ரஜினியும், ஜெய் சாரும் வரும் எல்லா காட்சிகளுமே பவர்ஃபுல் காட்சிகளா இருக்கும். சண்டை, நடிப்புன்னு ரஜினியும், ஜெய் சங்கரும் பெரிய அளவுல பின்னி எடுத் தாங்க. இருவரும் மோதும் கிளை மாக்ஸ் காட்சியில்கூட ரஜினியிடம் தோற்றுப் போகாமல் ஜெய் தானே சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொள்வதைப் போல காட்சி வைத்தோம். அந்தப் படம் வெற்றிப்படமானதும், நிறைய வில்லன் வேஷங்கள், குணச் சித்திர வேடங்கள் ஜெய்க்கு வந்தன. அப்போது ஜெய் சொன்னார், ‘‘முரட்டுக் காளை படத்தில் நடிக்கிற வரைக்கும் நான் சம்பாதித்தது எல்லாம் சம்பாத்தி யம். அந்தப் படத்துக்கு பிறகு சம்பாதித் தது எல்லாம் ஏவி.எம் எனக்குக் கொடுத்த போனஸ்.’’
அந்தப் படத்தில் வில்லன் ஜெய் சங்கருக்கு உதவியாளராக சுருளிராஜன் நடித்தார். படத்தில் ஜெய்சங்கருடைய பரம்பரையின் மேல் உள்ள கோபத்தால், பழி வாங்கும் எண்ணத்தோடு ஜெய் கூடவே இருந்து அவருக்கு குழி தோண்டு வார் சுருளிராஜன். இது படம் பார்க்கும் மக்களுக்குத் தெரியும். ஜெய்க்குத் தெரியாது. அப்படி காட்சியை அமைத்ததால் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்தன. சுருளியின் நடிப்பில் சுறுசுறுப்பும் காட்ட முடிந்தது.
சுருளிராஜன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. குணச்சித்திர நடிகரும் ஆவார். சின்ன வசனம் பேசுவதில்கூட கைதட்டல் வாங்கிவிடுவார். ‘பத்துக் குள்ள ஒரு நம்பர் சொல்லு?’ என்று கேட்டால். ‘ஒம்ம்போது’ன்னு அவரது குரலில் சொல்லி கைத் தட்டலை அள்ளி விடுவார். அந்த மாதிரி ‘முரட்டுக் காளை’ படத்தில் ஜெய்க்கு நல்லது செய்ற மாதிரி கெட்டது செய்யும் இடங்க ளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எங்களது பல படங்களில் நடித்தவர் சுருளிராஜன். எங்கள் குழுவில் ஒருவராகத்தான் அவர் இருந்தார். எப்படியோ அவரிடம் மது அருந்தும் கெட்டபழக்கம் ஒட்டிக் கொண்டது.
எவ்வளவோ நாங்கள் எடுத்துச்சொல்லியும் அவரால் அதை விடவே முடியவில்லை. ஒரு நாள் எங்கள் படப்பிடிப்பிலேயே மயங்கி விழுந்தார். நான்தான் டாக்டர் வீரபத்திரனிடம் கூட்டிக் கொண்டுபோனேன். ‘‘இனி மதுவை தொட்டால் மரணம்தான்’’ என்று டாக்டர் எச்சரித்தார். இரண்டு, மூன்று மாதம் சிகிச்சை செய்தோம். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஒரு நல்ல கலைஞனை மது குடித்துவிட்டது. ‘மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு’ என்று எழுதி வைத்துவிட்டு நாம் மதுவை தாராளமாக விற்கிறோம். மது குடிப்பவர்கள் ப்ளீஸ்... சுரு ளியை நினைத்துக் கொண்டாவது மது குடிப்பதை நிறுத்துங்கள். நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் நல்லது!
சுருளிராஜன் அவர்களின் மனைவி முத்துலட்சுமியைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். கணவன் இறந்த தும் முடங்கிப்போய் மூலையில் உட்காராமல், சுருளி சேர்த்த புகழுக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்கள் மகன்கள் சண்முகவேலன், குமரவேலன், செந்தில்வேலன் மூவரையும் வளர்த்து, நன்கு படிக்க வைத்து, இன்றைக்கு அவர்கள் நல்ல உத்தியோகத்தில் பணி யாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதில் செந்தில்வேலன் திரைத் துறையில் கிராஃபிக்ஸ் பணிகளில் வளர்ந்துகொண் டிருக்கிறார். இதைப் பார்ப்பதற்கு சுருளி ராஜன் இல்லையென்றாலும் அந்தக் குடும்பம் தலைநிமிர்ந்து வெற்றி பெற்றதற்கு அவரது மனைவி முத்து லட்சுமியும், மகன்களும்தான் காரணம்.
முத்துலட்சுமி அவர்கள் சரவணன் சாரிடமும், என்னிடமும் அடிக்கடி சில ஆலோசனைகளைக் கேட்டுக்கொள் வார். அந்த ஆலோசனைகளைச் செயல் படுத்தி அவர் தனது குடும்பத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வந்ததைப் பார்க்கும்போது சரவணன் சாருக்கும், எனக்கும் மிகுந்த திருப்தி. மார்ச்-8 மகளிர் தினத்தில் முத்துலட்சுமி சுருளிராஜனுக்கு எங்கள் பாராட்டுக்கள்!
‘முரட்டுக் காளை’ கதை முழுவதும் கிராமத்தில் நடப்பது. சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கதையில் கிராமம் ஒரு முக்கிய கதாபாத்திரம். தமிழகத்தில் நல்ல ஒரு கிராமம் எங்கே இருக்கிறது என்று தேடி அலைந்தோம். அது எங்கே இருந்தது?
- இன்னும் படம் பார்ப்போம்...
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago