புலனாய்வு இதழியலுக்கு ஒரு ஆஸ்கர்!

By ஆசை

இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான தேர்வில் ‘ஸ்பாட்லைட்’ படம் முன்வரிசையில் இல்லை என்பதுதான் உண்மை. ‘தி ரெவெனண்ட்’ மற்றும் ‘மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோடு’ ஆகிய இரண்டில் ஒன்றுதான் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கரைத் தட்டிச்செல்லும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது. பெரும்பான்மை ரசிகர்கள், சூதாட்ட புக்கிகள் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் அடித்துத் தூளாக்கி ஆஸ்கரைத் தட்டிச்சென்றிருக்கிறது ‘ஸ்பாட்லைட்’. கூடவே, அசல் திரைக்கதைக்கான விருதையும் தட்டிசென்றிருக்கிறது டாம் மெக்கார்த்தி இயக்கியிருக்கும் இப்படம்.

இந்தப் படத்துக்கு ஆஸ்கர் கிடைத்தது குறித்து இருவேறு விதமான கருத்துகள் உருவாகியிருக்கின்றன. தகுதியான திரைப்படம்தான் என்று ஒருசாராரும், ‘கலையம்சம் இல்லாத திரைப்படம்’ என்று இன்னொரு சாராரும் மோதிக்கொள்கின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்?!

அமெரிக்காவின் மாஸசூஸெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பத்திரிகைதான் ‘பாஸ்டன் குளோப்’. கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் இளம் சிறார்களுக்கு இழைத்த பாலியல்ரீதியிலான கொடுமைகளைப் பற்றி அந்தப் பத்திரிகையின் ‘ஸ்பாட்லைட்’ என்ற புலனாய்வுக் குழு 2001-2002 ஆண்டுகளில் புலனாய்வு செய்து வெளியிட்டது. இது, கத்தோலிக்கத் திருச்சபையையும் அமெரிக்காவையும் மட்டுமல்ல; உலகையே உலுக்கியது. காலங்காலமாக இப்படி நடப்பது தெரிந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விஷயத்தைத் திருச்சபை தொடர்ந்து மூடி மறைத்தே வந்த விஷயம் அம்பலமானதுதான் எல்லோரையும் அதிரச் செய்தது.

‘பாஸ்டன் குளோப்’ இந்த விஷயத்தை வெளியிட்டதும் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி தைரியமாக வெளியிட முன்வந்தனர். இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியதற்காக ‘பாஸ்டன் குளோப்’ பத்திரிகைக்கு 2003-ல் புலிட்சர் விருது கிடைத்தது. கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்களை ‘பாஸ்டன் குளோப்’ அம்பலப்படுத்திய விவகாரம்தான் ‘ஸ்பாட்லைட்’ படத்தின் கதை.

தண்டிக்கப்படாத குற்றவாளிகள்

படத்தின் தொடக்கத்தில் ‘பாஸ்டன் குளோப்’ பத்திரிகையின் புதிய ஆசிரியராக மார்ட்டி பேரன் நியமிக்கப்படுகிறார். அவர் நியமிக்கப்பட்டதும் ‘ஸ்பாட்லைட்’ குழுவை அழைத்து விவாதிக்கிறார். கேகன் என்ற பாதிரியார் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல் செய்த விவகாரம் பாஸ்டனின் பேராயருக்குத் தெரியும் என்று வழக்கறிஞர் கரபாடேயன் கூறியிருப்பது குறித்து பேரன் ‘ஸ்பாட்லைட்’ குழுவிடம் பேசுகிறார். இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கும்படி பேரன் சொன்னதும் ‘ஸ்பாட்லைட்’ குழுவின் தலைவர் ராபி ராபின்சன் திருச்சபைக்கு எதிராக ஏதும் செய்ய முடியாது என்று அவநம்பிக்கையுடன் பேசுகிறார். எனினும், பேரன் விடாப்பிடியாக இருப்பதால் ‘ஸ்பாட்லைட்’ குழு புலனாய்வில் ஈடுபடுகிறது.

அவர்களின் தேடலின் விளைவாக ஒரு பாதிரியார் அல்ல, பாஸ்டனில் மட்டும் கிட்டத்தட்ட 90 பாதிரியார்கள் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்களைச் செய்திருக்கும் விஷயம் தெரியவருகிறது. பாதிக்கப்பட்டவர்களிடமும், இந்த விவகாரத்தில் திருச்சபைக்கு மத்தியஸ்தம் செய்த வழக்கறிஞர், திருச்சபையை எதிர்த்த கரபாடேயன் போன்றோரிடமும் ‘ஸ்பாட்லைட்’ குழு துருவித் துருவி விசாரித்ததில் இந்த விவகாரம் எவ்வளவு பூதாகரமானது என்று தெரியவருகிறது. பல பத்தாண்டுகளாக இந்த அத்துமீறல்கள் குறித்துத் திருச்சபை அறிந்திருந்தும் சம்பந்தப்பட்ட பாதிரியார்களைத் தண்டிக்கவே இல்லை என்பது ‘ஸ்பாட்லைட்’ குழுவை அதிர வைக்கிறது.

வெட்டவெளிச்சம்

இதற்கிடையே, 2001-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்கொய்தா விமானத் தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் வருகிறது. அதனால் திருச்சபை விவகாரத்தைச் சற்றுத் தள்ளிப்போடும்படி ஆகிறது. சிறிது இடைவெளிக்குப் பிறகு ‘ஸ்பாட்லைட்’ குழுவினர் தங்கள் புலனாய்வை மறுபடியும் தொடர்கின்றனர். திருச்சபையைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தை விட்டுவிடும்படி பத்திரிகையாளர்களிடம் நைச்சியமாகப் பேசுகிறார்கள்.

திருச்சபை எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறது. அதையெல்லாம் இந்த விவகாரம் கெடுத்துவிடும் என்றெல்லாம் பேசிப் பார்க்கிறார்கள். எதற்கும் மசியாத ‘ஸ்பாட்லைட்’ குழுவினர் அவர்களின் விடாப்பிடியான, துணிச்சலான தேடலின் இறுதியில் ஒட்டுமொத்த விவகாரத்தையும் ‘பாஸ்டன் குளோப்’ இதழில் அம்பலப்படுத்துகிறார்கள்.

உலக அளவில் பெரியயாக இது உருவெடுக்கிறது. பாதிரியார்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோர் ‘பாஸ்டன் குளோப்’ பத்திரிகையைத் தொடர்புகொண்டு தங்களின் பாதிப்பு குறித்துப் பேசத் துணிகிறார்கள். படம் முடிவதற்கு முன் ஒரு பட்டியல் திரையில் காட்டப்படுகிறது. உலகெங்கும் திருச்சபையால் இந்த விவகாரம் மூடிமறைக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் அது. கூடவே, பாஸ்டனில் இந்த விவகாரத்தை மூடிமறைத்த பேராயர் பதவி உயர்வு பெற்ற தகவலும் வருகிறது. படம் முடிகிறது.

யதார்த்தத்துக்கு கிடைத்த விருது

ஆக, வழக்கமான ஹாலிவுட்டின் பிரம்மாண்டம், ரொமான்ஸ், உக்கிரம், கொண்டாட்டம் என்று எந்த வரையறைக்குள்ளும் அடங்காத யதார்த்தமான, எளிமையான ஒரு படம்தான் ‘ஸ்பாட்லைட்’. தீவிர திரைப்பட ரசிகர்களைப் பெரிதும் ஈர்க்காத படம்தான் இது. ஆனாலும், அது எடுத்துக்கொண்ட செய்தி, அதனால் ஏற்படும், ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களைப் பற்றி யோசித்துப்பார்க்கும்போது இந்தப் படத்தின் முக்கியத்துவம் நமக்குப் புலப்படும்.

அதற்கு ஓர் உதாரணம்: பாதிரியார்களால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்பை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டிருந்த நூற்றுக் கணக்கானோர் இந்தப் படம் வெளியான நவம்பருக்குப் பிறகு முதன்முறையாக வாய்திறந்து தங்கள் பாதிப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் உலகெங்கும் பல்லாயிரக் கணக்கானோரை இந்தத் திரைப்படம் வாய்திறக்க வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் ஒரு படத்தின், ஒரு ஆஸ்கர் விருதின் விளைவு என்று யோசித்துப்பார்க்கும்போது இது தகுதியான ஆஸ்கரே என்று தோன்றுகிறது.

மனம் திறந்த வத்திகன்

எல்லாவற்றுக்கும் மேல் அதிசயம் என்னவென்றால், “மிகவும் நேர்மையான படம் இது. கத்தோலிக்கத் திருச்சபையில் நடைபெற்ற அத்துமீறல்களையும், மூடிமறைத்தல்களையும் வெளிக்கொண்டுவந்ததன் மூலம் திருச்சபை தன்னை சுத்திகரித்துக்கொள்வதற்கு இந்த விவகாரம் வழிவகுத்திருக்கிறது. அதே நேரத்தில், துறவறம் என்பது இதுபோன்ற பாலியல் வக்கிரத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது” என்ற வகையில் வத்திகன் திருச்சபையின் இதழும் வானொலியும் இந்தப் படத்தைப் பாராட்டியிருக்கின்றன.

இதுபோல், இந்தியாவின் பல்வேறு மதங்களின் நிறுவனங்களுக்குள் நடக்கும் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி ஒரு படம் எடுக்க முடியுமா? எடுத்தால் அந்தப் படம் வெளியில்தான் வருமா? அப்படியே வந்தாலும் அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைக்குமா? என்ற கேள்விகளெல்லாம் எழாமல் இல்லை. எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் அமெரிக்கா ஓர் ஆச்சரியமான தேசம்தான் என்பதை ‘ஸ்பாட்லைட்’ படத்துக்கான ஆஸ்கரும், அதற்கான பாராட்டுகளும் நிரூபிக்கின்றன.

பத்திரிகைத் துறையைப் பற்றிய திரைப்படமொன்று கடைசியாக ஆஸ்கர் விருது வாங்கியது 1947-ல்; ‘ஜெண்டில்மேன்’ஸ் அக்ரிமெண்ட்’ என்ற திரைப்படம்தான் அது. இணையத்தின் வரவால் நசிவில் இருக்கும் பத்திரிகைத் துறையும் புலனாய்வு இதழியலும் ‘ஸ்பாட்லைட்’ படத்தின் வரவாலும், அதற்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருதாலும் மிகுந்த ஊக்கம் பெற்றிருக்கின்றன என்பது ரொம்பவும் நல்ல செய்தியே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்