திரைப் பார்வை: இன்ஷா அல்லாஹ்- குறியீடுகளின் கலை!

By திரைபாரதி

செழியனின் ‘டுலெட்’, தமயந்தியின் ‘தடயம்’, அருண் கார்த்திக்கின் ‘நஷீர்’, அரவிந்தின் ‘தெளிவுப் பாதையின் நீச தூரம்’, திரையரங்கிலோ, ஓடிடியிலோ வெளியாகக் காத்திருக்கும் வினோத்ராஜின் ‘கூழாங்கல்' என தமிழில் சுயாதீன சினிமா முயற்சிகள் அதிகரித்துள்ள தருணம் இது. திரைமொழியை உலக சினிமா தரத்துக்கு எடுத்துச் செல்லும் இத்தகைய சோதனை முயற்சிகளின் வரிசையில் சேர்கிறது ‘இன்ஷா அல்லாஹ்’ திரைப்படம். 93 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படத்தை பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார்.

அசலான இஸ்லாமிய வாழ்வியலை பேசும் கதைக் களம், கதாபாத்திரங்களுடன் இதுவரை தமிழ் சினிமாவில் எந்தப் படமும் வெளியாகவில்லை. அந்தக் குறையைப் போக்க முயற்சித்திருக்கிறது இப்படம். பல மதத்தினரும் வசிக்கும் கோவையின் பிள்ளையார் புரத்தில் மையம்கொள்கிறது கதை. அங்கே வசிக்கும் இரு இளம் இஸ்லாமிய ஜோடிகள், அந்தப் பகுதிக்கு உயிர்பிழைத்திருக்க வருகைதரும், கைவிடப்பட்ட ஒரு முதிய இஸ்லாமிய ஜோடி ஆகியோர் நமக்கு அறிமுகமாகிறார்கள்.

முன்பின்னாக விரிந்தும் இடையில் வெட்டப்பட்டும் துண்டாடப்பட்டும் காட்சிகள் விரிகின்றன. அவற்றில் முதன்மைக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நம்மைக் கூர்ந்து கவனிக்க வைக்கின்றன. முதிய தம்பதியினரின் உரையாடலில் வெடிக்கும் அன்பு, கோபம், இயலாமை, அரவணைப்பு ஆகிய உணர்வுகள் இந்தக் கதையில் மற்றக் கதாபாத்திரங்களுடன் தொடர்பற்று இருக்கின்றன. முதுமையில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் அவர்களுடைய வாழ்க்கை, அமைதியாகக் கழிவதற்கு பதிலாக அலைக்கழிதலாக இருப்பதை இன்றைய தலைமுறைக்கு மௌன சாட்சியாக எடுத்துக்காட்டுகிறார் இயக்குநர்.

ஒரு இஸ்லாமியன் கடைபிடிக்க வேண்டிய கடமைகளைச் செவ்வனே கடைபிடிக்கும் ஒரு நேர்மையான இஸ்லாமியரும், அதற்கு நேர்மாறான வாழ்க்கை வாழும் மற்றொரு இஸ்லாமியரும், முதுமையின் அறுவடையாக விளையும் மரணம் வரையிலும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அவரவர் போக்கிலேயே விட்டிருந்தாலும் ஒப்பிட்டுக்காட்டுகிறார் இயக்குநர்.

தொடக்கத்தில் வரும் இஸ்லாமிய மாநாட்டுக் காட்சி, அந்த மார்க்கத்தின் அடிப்படையான வாழ்நாள் கடமைகள் குறித்து பிற மதத்தினரும் சட்டென்று புரிந்துகொள்ள ஒரு வழிகாட்டிபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிக்குப் பிறகு கதாபாத்திரங்களுக்கு அறிமுகமோ பின்னணியோ சொல்லப் படாமல், மெதுவாக ஊர்ந்து செல்லும் காட்சிகளின் வழியாக கதாபாத் திரங்களின் நிலை, குறியீடுகளால் உணர்த்தப்படுகிறது. வெகுஜனப் பார்வையாளனுக்கு கடும் சவாலைத் தரக்கூடிய இத்திரைமொழி, அவனிடம் அடுத்த கட்ட ரசனையைக் கோரி நிற்கிறது.

விளம்பரம் ஏதும் தேடிக் கொள்ளாமல், மனித நேயத் தொண் டினைச் சோர்வின்றி செய்துவரும் இஸ்லாமிய அறநிறுவனங்களுக்கு வெளிச்சம் தர மறுக்கும் ஊடகங்களை மௌன சாட்சியாக நின்று சாடியிருக் கிறார் இயக்குநர். குறிப்பாக, 'புதிய சமுதாயம் இஸ்லாமிய அறக்கட்டளை' , ‘ஜீவசாந்தி’ போன்ற அமைப்புகள் மதச் சார்பின்றி செய்துவரும் சேவைகளை, திணிப்பாக இல்லாமல் கதையுடன் திறமையாக இணைத்திருக்கிறார் இயக்குநர்.

இஸ்லாமியர்களின் உண்மையான வாழ்வியல், அதன் கலாச்சாரச் கூறுகள் , சமூக நல்லிணக்கத்துடன் இருப்பதை எடுத்துக்காட்டுவதில் வெற்றிபெற்றிருக்கிறது படம். அதேநேரம், இன்றைய அரசியல் சமூக நெருக்கடி உருவாக்கும் சூழ்நிலைக்கு நடுவில் அவர்கள் எவ்வாறு நிராகரிப்புக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதை நுட்பமாகக் காட்டிய வகையில் கவனிக்கத்தக்க முயற்சி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE