முதல் முறையாக அப்பாவுடன் இணைந்து நடிக்கும் சந்தோஷத்தில் மிதக்கிறார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் குடும்பத்தினருடன் தன் பிறந்தநாளைச் சென்னையில் கொண்டாடி முடித்திருக்கும் அவர், மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு மறு ஆக்கத்தில் ‘மலர்’ டீச்சராக நடித்துவருகிறார். முதல் ‘ஐ.ஐ.எஃப்.ஏ.’ விருதையும் பெற்றிருந்த நிலையில் நம்மிடம் அவர் உற்சாகமாக உரையாடியதிலிருந்து…
மிகவும் அழகான பெண், மிகவும் விரும்பப்படும் பெண் என்பது போன்ற கருத்துக் கணிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறதா?
அழகிப் போட்டிகளில் எனக்குச் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. சோஷியல் மீடியாவின் கருத்துக் கணிப்புகள் போன்ற வழிகளில் நேர்மையான ஆடியன்ஸ் வாக்களிப்பு மூலம் தேர்வுசெய்யப்படுவதை மதிக்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட பிரபலத்தின் துறைசார்ந்த பங்களிப்பு என்ன என்பதையும் கணக்கில் கொண்டு தரப்பட வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து.
கிளாமராக நடிப்பதில் ஸ்ருதி ஹாசன் கொஞ்சம் எல்லை மீறிச் செல்கிறாரோ என்ன எண்ணம் ஏற்படுகிறதே?
இதுபற்றி எனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. காரணம், கிளாமர் என்றால் என்ன என்பதே இன்றுவரை எனக்குப் புரியவில்லை. சில சமயம் பாடல் காட்சிக்கு நான் அணியும் உடைகளை வைத்து இப்படிக் கருத்துச் சொல்கிறார்கள். காட்சிக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை நான் தாண்டிச் செல்லவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். எனது உடல் குறித்த கர்வம் எனக்கு உண்டு. அதேபோல் என் உடல் தோற்றத்தை நான் என்றும் தவறாகப் பார்த்ததில்லை. பார்ப்பவர்களைப் பற்றி நான் கருத்துக் கூற முடியாது.
ஸ்ருதி ஹாசன் என்றாலே கமர்ஷியல் ஹீரோயின் என்ற எண்ணம்தான் உருவாகியிருக்கிறது. வித்தியாசமான, கலைத்தரமான படங்களை இயக்கும் இயக்குநர்களின் படங்களில் எப்போது நடிக்கப் போகிறீர்கள்?
கமர்ஷியல் சக்ஸஸ் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. கமர்ஷியல் சக்ஸஸுக்காக ஆண்டுக் கணக்கில் போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு வெகு சீக்கிரமாக அது கிடைத்துவிட்டது. இப்படிச் சொல்வதால் ஆஃப் பீட் படங்களுக்கு நான் எதிரானவள் இல்லை. எல்லா ஆஃப் பீட் படங்களும் ஓடினால்தானே அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுதான் இங்கே நடக்காமல் போய்விடுகிறது. இதுவரை என்னைக் கவர்கிற மாதிரி என்னைத் தேடி ஆஃப் பீட் படங்கள் வரவில்லை. அதுதான் உண்மை.
முன்னணிக் கதாநாயகியாக இருந்துகொண்டே ஒரு பாடலுக்கு நடனமாடும் துணிவு எப்படி வருகிறது? அது உங்களைத் தரமிறக்கிவிடாதா?
நான் அப்படி நினைக்கவில்லை. சினிமாதான் எனக்கு சரஸ்வதி. ஒரு பாடலுக்கு ஆடுவது மட்டுமல்ல; ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்களோடு நடிப்பதிலும் எனக்குப் பிரச்சினை இல்லை. எனது அத்தை ஒரு டான்ஸர். அப்பா ஒரு டான்ஸர். பரத நாட்டியமாக இருக்கட்டும், மற்ற வகை நடனங்களாக இருக்கட்டும். சின்ன வயதிலிருந்தே நடனம் மீது பெரிய ஆசை எனக்கு. சினிமாவில் நடனமாடுவது ஈஸியான வேலை இல்லை. நாம் ஆடுவது ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக இருக்க வேண்டும். அதில் நளினமும் ஸ்டைலும் வெளிப்பட வேண்டும்.
ஒரு பாடலுக்கு ஆடுவது சரி, ஒருசில காட்சிகளில் வந்துபோகும் ‘கெஸ்ட் அப்பியரன்ஸ்’ உங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்காதா?
‘ராக்கி ஹேண்ட்சம்’ இந்திப் படம் பற்றிக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது. நிஷிகாந்த் காமத் தேசிய விருதுபெற்ற இயக்குநர். உண்மையில் நான் அறிமுகமான ‘லக்’ இந்திப் படத்துக்கு முன் அவரது இயக்கத்தில்தான் நான் அறிமுகமாக இருந்தேன். ஏனோ அது நடக்காமல் போய்விட்டது. பாலிவுட்டில் நான் நல்ல ஹீரோயினாக வருவேன் என்று நம்பி என்னை அறிமுகப்படுத்த முதலில் முன்வந்தவர் அவர்தான். அப்படிப்பட்டவர் என்னை அழைக்கும்போது எப்படி மறுக்க முடியும்? அவர் எனக்கு வழங்கியது கெஸ்ட் ரோலாக இருந்தாலும் அது பேசும்படியான கேரக்டராக அமைந்துவிட்டது.
‘யாரா’ இந்திப் படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரம்?
முதல்முறையாக ஒரு பீரியட் படத்தில் நடிக்கிறேன். 70-களில் நடக்கும் கதையில் எனக்கு ஒரு ஃபான்ட்சியான கதாபாத்திரம். மிகவும் சவாலான கதாபாத்திரமாகவும் இருந்தது. திக்மான்ஷு தூலியா நான் வேலைசெய்ய விரும்பிய மிகச் சிறந்த, வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர். அவரை ஆஃப் பீட் வட்டத்துக்குள் கொண்டுவரலாம். தப்பில்லை.
‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ‘மலர்’ டீச்சராக நடிப்பது எப்படி இருக்கிறது? அந்தப் படத்தை ரீமேக் செய்வது அபத்தம் என்று நெட்டிசன்கள் கூறிவருகிறார்களே?
எனக்கு இது ஐந்தாவது ரீமேக். தெலுங்கில் நான் அறிமுகமானதே ‘தபாங்’ இந்திப் படத்தின் ரீமேக்கில்தான். அந்தப் படம் வெளியானபோது நிறைய கம்பேரிஸன் இருந்தது. நிறைய எதிர்பார்ப்பும் உருவானது. ரீமேக் படத்தில் நடித்தால் சம்பந்தப்பட்ட படத்தைப் பார்க்காமல் இருந்துவிடுவது நல்லது என்ற முடிவை அப்போது எடுத்தேன். அப்படியே பார்க்க நேர்ந்தாலும் அதை மனதிலிருந்து சுத்தமாக டெலிட் செய்துவிட வேண்டும் என்றும் முடிவெடுத்தேன். ஆனாலும் ‘பிரேமம்’ படத்தைப் பார்க்கும்படி ஆகிவிட்டது. இருப்பினும் அதை மறந்துவிட்டேன்.
அதேபோல் ‘பிரேமம்’ தெலுங்குப் படத்தின் இயக்குநர் புதியவர். அவர் என்ன காட்சிகள் வைத்திருக்கிறாரோ அவற்றுக்குத்தான் நேர்மையாக இருப்பேன். நெட்டிசன்களை மதிக்கிறேன். ஆனால், ‘பிரேமம்’ படத்தின் உணர்வுகளை வேறு மொழியில் கொண்டுவர முடியாது என்று சொல்வதை நான் ஏற்க மாட்டேன். ‘தபாங்’ ரீமேக் செய்யும்போதும் இதையேதான் சொன்னார்கள். ஆனால், ‘கப்பர் சிங்’ படம் ‘தபாங்’ வெற்றியையே தாண்டியதே! படம் வரும்வரை காத்திருப்பதுதான் சரி.
‘சிங்கம்-3’ படத்தில் உங்கள் பங்கு என்ன?
மிகவும் மாடர்னான நகரத்துப் பெண்ணாக நடிக்கிறேன். இதை மட்டும்தான் இப்போதைக்குச் சொல்ல முடியும். சூர்யாவுடனும் ஹரியுடனும் மீண்டும் வேலை செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது.
அப்பாவுக்குச் செல்ல மகளாக நடிக்கும் படம் பற்றி கூறுங்கள்?
நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. சரியான வாய்ப்பு அமைந்தால் மட்டுமே உங்களோடு நடிப்பேன் என்று அப்பாவிடம் கூறியிருந்தேன். அது இப்போது அமைந்துவிட்டது. அப்பாவின் ரசிகர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது. அவருடன் நடிக்கும்போது புதிதாகக் கற்றுக்கொள்ளும் அனுபவமாக அது மாறுகிறது.
மருதநாயகத்துக்கு உயிர் கொடுக்கப்போவதாக உங்கள் அப்பா கூறியிருக்கிறார். அதில் நடிக்க விருப்பமாக இருக்கிறீர்களா?
அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் அதை என் வாழ்நாள் வாய்ப்பாகக் கருதுவேன். ஏனென்றால், மருதநாயகம் மீது அப்பா காட்டிவரும் ஈடுபாட்டைச் சிறு வயதிலிருந்தே பார்ப்பவள் நான். மருதநாயகம் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே ஆகிவிட்டார். அந்தப் படத்தின் கதாபாத்திரங்களும் திரைக்கதையும் மட்டுமல்ல, அந்தப் படம் தொடங்கப்பட்டபோது அதற்காக அப்பா உருவாக்கிய உடலமைப்பும் வேறு எந்தக் கதாநாயகனும் அப்போது முயற்சிக்காதது. அப்படிப்பட்ட படத்தில் எனது பங்களிப்புக்கும் இடமிருக்குமென்றால் அது என் பாக்கியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago